‘மகா அசுரன்’ தனுஷ்: பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

‘மகா அசுரன்’ தனுஷ்: பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

'பேரும் புகழும்’ என்பதெல்லாம் சும்மா கிடைத்துவிடாது. திறமையும் கடும் உழைப்பும் இருந்தால்தான், சினிமாவில் இவையெல்லாம் சாத்தியம். தன் நடிப்பாலும் திறமையாலும் ஆற்றலாலும் அசாத்தியங்களையெல்லாம் நின்று நிதானித்து அசால்ட்டாகச் செய்வதாலும் அந்த நடிகர் அடைந்திருக்கிற வெற்றியும் உயரமும், மலைப்பும் வியப்பும் மிக்கவை. அவர்... தனுஷ்!

இயக்குநரும் நடிகருமான விசுவிடமிருந்து அப்படியே மாறுபட்டு கஸ்தூரி ராஜா வந்தார். அவரின் மகன் செல்வராகவனும் அப்பாவிடமிருந்து முழுவதுமாக மாறுபட்டவராகவே இருக்கிறார். இவர்களுக்கு நடுவே, பலதரப்பட்ட திறமைகளையும் உள்ளடக்கிக் கொண்டு, தனுஷ் வெளியுலகிற்கு வந்தார்.

அண்ணன் திரைக்கதையில், அப்பாவின் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’ 2002-ல் வந்தது. அந்தக் கதைக்கு ஏற்ற வயது, உடல், எடை, நிறம் என்று கச்சிதமாகப் பொருந்தினார் தனுஷ். அப்போது அவருக்கு வயது 19. படமும் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் கொண்டாடப்பட்டன. ஆனாலும், ‘அப்பா டைரக்டரு. அதனால பையனை ஹீரோவாக்கிட்டாரு’ என்று தனுஷைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை எவரும்! அடுத்ததாக அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில், ‘காதல் கொண்டேன்’ படத்தில் நடித்தபோது, அவரின் சைக்கோத்தனமான நடிப்பைப் பார்த்து மிரண்டுதான் போனார்கள் ரசிகர்கள். ‘என்னய்யா இந்தப் பையன்... இந்தப் போடு போடுறானே’ என்றார்கள்.

இயக்குநர்களில் தனித்துவம் மிக்க பாலுமகேந்திராவுக்கு தனுஷைப் பிடித்துப் போனது. ‘இந்தப் பையன்கிட்ட ஏதோ இருக்கு’ என உணர்ந்து, ’அது ஒரு கனாக்காலம்’ படத்தில் நடிக்கவைத்தார். அதற்குள், சுப்ரமணிய சிவா இயக்கத்தில், ’திருடா திருடி’யில் யதார்த்த இளைஞனாக வலம் வந்த தனுஷை எல்லோருக்கும் பிடித்துப் போனது. ‘மன்மதராசா’வுக்கு சாயா சிங்குடன் சேர்ந்து அவர் ஆடிய பேயாட்டம் கண்டு திகைத்து விசிலடித்தார்கள் ரசிகர்கள்.

’சுள்ளான்’, ’தேவதையைக் கண்டேன்’ என ஆக்‌ஷன், காதல் என்று மக்கள் மனதில் எளிதில் இடம்பிடிக்கும் விதமாகக் கதைகளைத் தேர்வு செய்ததும் அவர் புது வரவாக வந்த சாதாரண நடிகர் என்பதாகவே தமிழ் சினிமா நினைத்ததும் தனிக்கதை.

2006-ல் வெளிவந்த ‘புதுப்பேட்டை’யும் 2007-ல் வந்த ‘பொல்லாதவன்’ படமும் பெரும் கவனம் ஈர்த்தன. கதை ரீதியாகவும் கதைக்குள் ஊடுருவி கேரக்டர்களுக்கு உயிர் கொடுக்கும் விதமாகவும் தனுஷ் கொஞ்சம்கொஞ்சமாக சந்திரமுகியாகவே உருமாறினார். அதற்குப் பின்னர் ‘தனுஷ் இப்படித்தான் நடிப்பார்; இவ்விதமாகத்தான் வசனம் பேசுவார்’ என்றெல்லாம் எவராலும் கணித்துவிட முடியாத அளவுக்கு, படத்துக்குப் படம் தன்னை மாற்றிக்கொண்டார். அதே ஒல்லிக்குச்சி உடம்புதான் என்றாலும் உடல்மொழியாலும் கண் அசைவாலும் நடையாலும் வசன உச்சரிப்பாலும் தனுஷ் எனும் நடிகரின் பேரும் புகழுக்குமான எடை கூடிக்கொண்டே போனது.

அண்ணனின் ஆரம்பப் படங்கள் தனுஷுக்கு பயிற்சிப் பட்டறைகளாயின. வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’ படத்திலிருந்து தொடங்கிய கூட்டணி வெற்றிக் கூட்டணியானது. ’யாரடி நீ மோகினி’, ‘படிக்காதவன்’, ’உத்தமபுத்திரன்’ படமெல்லாம் ‘சி’சென்டர் ஏரியா படங்களாகவும் பெண்களை ஈர்க்கும் விதமாகவும் அமைந்தன. மார்க்கெட் வேல்யூவுக்கு இவையெல்லாம் உதவின. அந்தச் சமயத்தில்தான் வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ படத்தில், அட்டகாசமாகக் களமாடினார் தனுஷ். சேவல் சண்டையும் புதுசு. தனுஷின் மதுரைத் தமிழும் புதுசு. லுங்கியும் எகத்தாளம் ப்ளஸ் ஏக்கப் பேச்சுமாக, மதுரைக்காரனாகவே வாழ்ந்தார் தனுஷ். ’நான் தனுஷ் ரசிகன்’ என்று தமிழ் சினிமாவின் ரசிகர்கள் பலர், கெத்துக்காட்டி சொல்லத் தொடங்கியது அப்போதிருந்துதான்!

தனக்கென ரசிகக் கூட்டத்தைப் பிடித்தார் தனுஷ். ஆனால் தனக்கென எந்த ரூட்டையும் போட்டுக் கொள்ளவில்லை. ‘மாரி’ மாதிரியும் படம் பண்ணினார். ‘அநேகன்’ மாதிரியும் படம் செய்தார். ‘வேலை இல்லா பட்டதாரி’யில் வேறொரு தனுஷாக இருந்தார். ’தங்கமகன்’, ‘தொடரி’யில் இன்னொரு விதமாக இருந்தார். ‘தனுஷ் எது செஞ்சாலும் அதுல ஏதோ புதுசு இருக்கும்’ என்று பொதுவான சினிமா ரசிகர்களும் அவரைத் தொடரத் தொடங்கினார்கள்.

வெற்றிமாறனின் ‘வடசென்னை’ வந்தது. ’அன்பு’ எனும் கேரக்டரில் அச்சு அசலாக வாழ்ந்து மிரட்டியெடுத்தார் தனுஷ். அவர் ஒவ்வொரு படத்திலும் ஆயுதங்களைக் கையாள்வது புது தினுசாக இருக்கும். ‘வடசென்னை’யும் அப்படியான படம்தான். தனுஷே வணிக சினிமாவின் மிகப்பெரிய ஆயுதம் என்றானார். அதே தருணத்தில், ’அசுரன்’ படத்தில் ‘கர்ணன்’ படத்திலும் நடிப்பில் அசுரன் என விஸ்வரூபமெடுத்தார்.

தனுஷ் மிகச்சிறந்த நடிகர் என்று எத்தனையோ பெரிய பெரிய விருதுகளெல்லாம் வாங்கியிருக்கிறார். திடீரென்று படம் தயாரிப்பார். பாட்டு பாடுவார். பாடலை எழுதுவார். ‘அவ்ளோதானா... இன்னும் இருக்கா?’ என்று நினைக்கும்போதே, படத்தை இயக்குவார். இந்திப் பக்கம் போவார். ஹாலிவுட் படத்தில் நடிப்பார். திரும்பவும், நம்மூரில் லேண்ட் ஆகி, அண்ணனுக்கு ஒரு படம், இன்னொரு படம், கலைப்புலி தாணு படம் என்றெல்லாம் புது நடிகர் போல ரவுண்டு கட்டி ஆடுவார்.

எவர் சாயலுமில்லாமல், தனித்த அடையாளத்துடன் தனக்கென ஒரு நடிப்பையும் ஸ்டைலையும் வைத்துக்கொண்டு தனுஷ் செய்துகொண்டிருப்பதெல்லாம் அசுர வேகம்; அசுர சாதனை! துணிச்சலும் தைரியமுமாக இவர் கதை தேர்வு செய்ததுதான், சினிமாவுக்கான அடுத்தடுத்த வாசல்களை உருவாக்கின என்றும் சொல்லலாம்.

‘இவர் இடத்தை அவர் பிடிப்பாரா, அவர் இடத்தை இவர் பிடிப்பாரா’ என்றெல்லாம் கேட்பார்கள்; சொல்லுவார்கள். தனுஷ், இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். தனக்கென ஓரிடத்தை உருவாக்கிவைத்துக்கொண்டிருக்கிற மகா அசுரன் அவர்!

ஜூலை 28: தனுஷ் பிறந்தநாள்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in