இசைப் பள்ளிக்கு இசைஞானியின் 12 பாடல்கள்!

இசைப் பள்ளிக்கு இசைஞானியின் 12 பாடல்கள்!

இசையைப் பூரணமாக ஆராதிக்கும் திரைப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசை வார்த்தால், அதில் ராஜாவின் 12 பாடல்கள் பிரவாகமாக ஊற்றெடுத்தால் எப்படி இருக்கும்! கிட்டத்தட்ட கனவுபோல் இருக்கிறதல்லவா? ராஜா இசை பித்தர்களின் இப்படியான மாபெரும் கனவு நிஜமாகவிருக்கிறது.

தெலுங்கு, இந்தி என இருமொழித் திரைப்படமாகத் தயாராகிவருகிறது ‘மியூசிக் ஸ்கூல்’. ஹைதராபாத்தைச் சேர்ந்த யாமினி ஃபில்ம்ஸ் தயாரிப்பில் பாபா ராவ் பியாலா இயக்கத்தில் உருவாகும் ‘மியூசிக் ஸ்கூல்’ திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ஷர்மான் ஜோஷி, ஸ்ரேயா சரண், பிரகாஷ் ராஜ் நடிப்பில் படம் வெளிவர இருக்கிறது.

இந்தியக் கல்வி அமைப்பு குழந்தைகளின் கற்பனைத் திறனை, படைப்பாற்றலை கலைகள் வழியாக வளப்படுத்தாமல் எவ்வளவு இறுக்கமாக உள்ளது என்பதை ‘மியூசிக் ஸ்கூல்’ திரையில் விரிக்கவிருக்கிறது. கலையின் உன்னதத்தைப் பேசும் திரைப்படைப்புக்கு இசைஞானியைவிட வேறு யார் நியாயம் சேர்க்க முடியும் என்பதை உணர்ந்து அவரிடம் இசையமைக்கக் கேட்டுக்கொண்டதாக இயக்குநர் பாபா ராவ் தெரிவித்துள்ளார்.

பாடகர்-நடிகர் ஷான்
பாடகர்-நடிகர் ஷான்

பிரபல இந்தி பாடகரும் நடிகருமான ஷான் அண்மையில் படத்தில் ஒரு கதாபாத்திரமாக மாறியுள்ளார். ராஜாவின் இசைக்கூடத்தில் படத்துக்கான பாடலைப் பாடிக்கொண்டிருக்கையில் நடிப்பதற்கான எதிர்பாராத வாய்ப்பு ஷானுக்குக் கிடைத்திருக்கிறது. இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பாடகர் ஷான், “நான் பாடிக்கொண்டிருப்பது வேறு யாருக்குமல்ல மேஸ்ட்ரோ இளையராஜாவுக்கு என்றெண்ணும்போது மகிழ்ச்சி தாளவில்லை. இசை, விளையாட்டு, கலைகள் ஒரு மாணவரை எப்படி உருவாக்கும் என்பதை காட்சிப்படுத்தும் அற்புதமான படம் இது. படத்தின் கதை என் மனதுக்கு ரொம்பவும் நெருக்கமானது. இப்படியொரு படைப்பைக் கற்பனை செய்து உருவாக்கும் இயக்குநர் பாபா ராவுக்கு மனமார்ந்த நன்றிகள். படத்தில் பாடி, நடிப்பது பூரிப்பூட்டுகிறது” என்றார்.

இசையை மையமாகக் கொண்ட படம் என்பதால் 12 பாடல்கள் மட்டுமின்றி பின்னணியிசையில் ராஜா செய்யும் மாயாஜாலத்தை தரிசிக்க ரசிகர்கள் தவமிருக்கிறார்கள். திரையரங்குகளில் படம் வெளிவரவிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி. தமிழிலும் படம் டப்பிங் செய்யப்பட்டு வெளிவருமா என்கிற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in