இணையதளங்களில் `கனெக்ட்’ திரைப்படம் வெளியாகத் தடை!

இணையதளங்களில் `கனெக்ட்’ திரைப்படம் வெளியாகத் தடை!

நயன்தாரா நடிப்பில் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் ‘கனெக்ட்’ திரைப்படத்தை, சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் உள்ளிட்டோர் நடிக்க, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியின் தயாரிப்பு நிறுவனமான’ ரௌடி பிக்சர்ஸ்’ தயாரிப்பில் உருவான திரைப்படம் ’கனெக்ட்’. அமானுஷ்ய த்ரில்லரான இந்த திரைப்படம் நேரடி தியேட்டர் வெளியீடாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறது. அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த திரைப்படத்தின் விறுவிறுப்புக்காக இடைவேளை இன்றி ஒரே அமர்வில் ஒட்டுமொத்த படத்தையும் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே புத்தம் புது திரைப்படங்கள் அதன் மெருகு கலையாது திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, தயாரிப்பு நிறுவனம் நீதிமன்ற உதவியை நாடியுள்ளது. இதன்படி, ’சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் 2634 இணையதளங்களில் ‘கனெக்ட்’ வெளியாவதை தடுக்கக் கோரி’ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும் தற்போது திரைக்கு வந்திருக்கும் புதிய திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால், தயாரிப்பு நிறுவனத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், அதில் பங்கெடுத்த கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்றும் வாதிட்டனர். மேலும், ’இந்த இணையதளங்களை இந்தியாவில் முடக்க, இணையதள சேவையை வழங்கும் 29 நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும்’ மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சி.சரவணன், ‘கனெக்ட் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in