லூஸ் மோகன் - ‘மெட்ராஸ் பாஷை’யின் நாயகன்!

நினைவுநாளில் சிறப்புப் பகிர்வு
லூஸ் மோகன் - ‘மெட்ராஸ் பாஷை’யின் நாயகன்!

மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு படமெடுத்தால், அதற்குத் தகுந்தது போல் பேச வைப்பார்கள். கோவை என்றாலும் நெல்லைச் சீமை என்றாலும் அப்படித்தான் பேசச் சொல்லுவார்கள். ஆனால் எந்த ஊரில் கதை நடப்பதாக இருந்தாலும் அந்த நடிகரை மட்டும், ‘வழக்கம் போல பேசுவீங்களே... அப்படியே பேசிருங்கண்ணே’ என்று சொல்லிவிடுவார்கள். தவிர, அந்த பாஷையில் பேசினால்தான் ரசிகர்களும் மகிழ்ந்து, குதூகலித்து கரவொலி எழுப்புவார்கள். அந்த பாஷை... ‘மெட்ராஸ் பாஷை’. அந்த நடிகர்... லூஸ் மோகன்!

தமிழ் சினிமாவில் முதன்முதலாக சென்னை பாஷையை அட்சரம் பிசகாமல் பேசி ஜமாய்த்த லூஸ் மோகனின் சொந்த ஊர் காஞ்சிபுரம். அப்பா ஆறுமுகமும் நடிகர்தான். நாடகங்களிலும் சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். பின்னாளில் அப்பாவைப் போலவே இவரும் நாடகங்களிலும் சினிமாக்களிலும் நடித்தார். ஆறுமுகத்துக்கு முன்னே ‘லூஸ்’ எனும் பெயர் ஒட்டிக்கொண்டது. ‘லூஸ் அண்ட் டைப்’ என்ற நாடகத்தில் ஆறுமுகம் நடித்து அசத்தினார். அன்றிலிருந்து அவர் பெயருடன் ‘லூஸ்’ ஒட்டிக்கொண்டது. பின்னாளில் ஆறுமுகம் மோகனசுந்தரம் என்கிற மோகன் பெயருக்கு முன்னேயும் ‘லூஸ்’ டைட்டாகவே ஒட்டிக்கொண்டது.

1928-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி பிறந்தார் லூஸ் மோகன். இளம் வயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் ஏற்படவே, சான்ஸ் கேட்டு அலைந்தார். ஒல்லியான தேகமும் உருட்டு விழிகளும் லூஸ் மோகனுக்கு ப்ளஸ்ஸாக இருந்தன. கூடவே நகைச்சுவைக்குப் பொருந்துவார் என்று முடிவு செய்து காமெடி கதாபாத்திரங்களாகவே கொடுத்தார்கள். லூஸ் மோகனும் தன் மாறுபட்ட உடல்மொழியால் காமெடியில் புகுந்து பட்டையைக் கிளப்பினார். கண்களை மூடிமூடிப் பேசுவதும் உடம்பை ஒரு மாதிரி சிலுப்பிக் கொள்வதும் வாயிலிருந்து வருகிற மெட்ராஸ் பாஷையும் லூஸ் மோகனை, வித்தியாசமான காமெடியனாக திரையுலகிலும் ரசிக்கவைத்தது.

லூஸ் மோகன்
லூஸ் மோகன்

1944-ல் ‘ஹரிச்சந்திரா’ எனும் மிகப்பிரம்மாண்டமான வெற்றிப்படத்தில் பி.யு.சின்னப்பாவுடன் நடித்ததுதான் லூஸ் மோகனின் திரைப்பயணத்தின் ஆரம்பம். அதன் பின்னர் எப்போதாவது படங்கள் கிடைக்கும். கிடைத்தால் நடிப்பார். இல்லாத சமயத்தில் இருக்கவே இருக்கு நாடகங்கள் என்று அதில் கவனம் செலுத்தினார்.

ஐம்பதுகளுக்கு முன்பே நடிக்க வந்துவிட்டாலும் தன் நிலையில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் என்றே லூஸ் மோகனைச் சொல்ல வேண்டும். எண்பதுகளில்தான் தனித்த அடையாளம் இவருக்குக் கிடைத்தது. ‘லூஸ் மோகன்’ என்கிற பெயரும் அப்போதுதான் ரசிகர்கள் மத்தியில் தெரியத்தொடங்கியது.

எண்பதுகளில் கமல், ரஜினி உட்பட எல்லா நடிகர்களுடனும் நடித்தார் லூஸ் மோகன். ஆனாலும் நடிகர் சிவகுமாரின் 100-வது படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’தான் லூஸ்மோகன் எனும் மிகச்சிறந்த காமெடி நடிகனை, வெளியுலகிற்கு மிக அழகாக வெளிச்சமிட்டுக் காட்டியது. படம் முழுக்க சிவகுமாருடனேயே வரும் கதாபாத்திரம் அவருக்கு! அதிலும் க்ளைமாக்ஸில், ஆற்று நீருக்குள் சிவகுமார் முங்கிக் கொள்ள, ‘ஒன்னு ரெண்டு மூணு...’ என எண்ணிக்கொண்டே கொஞ்சம்கொஞ்சமாக சோகமாகி, முகம் வெளிறி, நடுங்கிச் சொல்லிக் கொண்டே வருவதில் நம்மைக் கண்கலங்க வைத்துவிடுவார்.

மூன்று ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்த வாழ்க்கை லூஸ் மோகனுடையது. பின்னர் மூவாயிரம் வரை அதிகரித்தது. சிவாஜியின் ‘அன்பளிப்பு’, ’குழந்தைக்காக’, ‘கட்டிலா தொட்டிலா’ என கறுப்பு - வெள்ளைப் படங்களிலும் பின்னர் ஈஸ்ட்மென் கலர் படங்களிலும் நடித்தார். கமல், ரஜினி படங்களில் நடித்தபோதுதான் இன்னும் கண்டறியப்பட்டார் லூஸ்மோகன். ’நானும் ஒரு தொழிலாளி’ படத்தில் சில காட்சிகளே என்றாலும் கவனம் ஈர்த்திருப்பார். ‘என்னம்மா போட்டிப் பாட்டுன்னு சொன்னே... ஆளு எங்கேம்மா’ என்று ‘தங்கமகன்’ படத்தில் பாடலுக்கு நடுவே கத்துவாரே... இவருக்காக கரவொலி எழுப்பிய ரசிகர்களெல்லாம் உண்டு.

தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி போல தனித்துத் தெரிந்திருக்கவேண்டிய அட்டகாசமான நடிகர்தான் லூஸ் மோகன். அவருக்கு பலமாக இருந்த ‘மெட்ராஸ் பாஷை’யே பலஹீனமாகவும் ஆகிவிட்டதோ என்னவோ! இரண்டு நான்கு காட்சிகளைக் கடந்து அவரால் சோபிக்கமுடியவில்லை. ஆனாலும் ‘லூஸ் மோகன்’ என்றொரு காமெடி நடிகரை நம்மால் மறக்கவே முடியாது.

தலைமுறைகளைக் கடந்து நடித்து வந்த லூஸ் மோகன், தலைமுறைகளைக் கடந்தும் அறியப்பட்டிருக்கிறார்; கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதே லூஸ் மோகன் எனும் கலைஞனின் சாதனைதான்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி
ரோசாப்பூ ரவிக்கைக்காரி

தமிழையும் கடந்து, இந்தி உட்பட பல மொழிகளில் நடித்தவர் லூஸ் மோகன். கலைமாமணி முதலான விருதுகளைப் பெற்றவர். இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான் இயக்கிய ‘அழகி’ திரைப்படத்தில் நடித்தார். அதுதான் அவரின் கடைசிப்படம். 2012 செப்டம்பர் 16-ம் தேதி, தன் 84வது வயதில் லூஸ் மோகன் மறைந்தார்.

தமிழ் சினிமா தவறவிட்ட இயல்பான நடிகர்களில் லூஸ் மோகனும் ஒருவர். ‘மெட்ராஸ் பாஷை’யின் நாயகனான லூஸ் மோகனை மெட்ராஸ்காரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in