
64 வயதாகும் மடோனா, லேட்டஸ்டாக குத்துச்சண்டை பயிற்சியாளர் ஒருவருடன் காதல் பழகி வருவதுதான் ஹாலிவுட்டின் காரமான சேதி.
பாப் இசை ராணி என்ற அடைமொழியுடன் வளைய வருபவர் மடோனா. பாடகி, நடிகை என பல அவதாரங்கள் இவருக்கு உண்டு. அவற்றில் ஒன்று அவர் பாடல் வரிகளைப் போலவே காதலில் உருகுவது. காதலர்கள் மாறினாலும் காதல் இன்றி மடோனா இருந்ததில்லை. அம்மணியின் லேட்டஸ்ட் காதலர் யார் என்பதை ஹாலிவுட் ஊடகங்களும் அப்டேட் செய்ய மறப்பதில்லை.
அந்த வகையில் அண்மைக்காலமாக ஜோஷ் பாப்பர் என்ற குத்துச்சண்டை பயிற்சியாளருடன் மடோனா டேட்டிங் பழகுகிறார். மடோனாவின் 6 குழந்தைகளில் ஒருவருக்கு குத்துச்சண்டை பயிற்றுவிக்க ஏற்பாடானபோது, இருவருக்கும் இடையே காதல் முகிழ்ந்திருக்கிறது. முன்னதாக மடோனா காதல் பழகி வந்த ஆன்ட்ரூ டார்நெல் உடனான பிரிவை அறிவித்த சில தினங்களில் இப்படி அடுத்த காதலில் விழுந்திருக்கிறார்.
காதலும் காதலர்களும் வாழ்க என்று சுலபமாக இதனை இசை ரசிகர்களால் கடந்து செல்ல முடியவில்லை. காரணம் ஜோஷ் பாப்பரின் வயது. 64 வயதாகும் மடோனாவின் லேட்டஸ்ட் ஜோடியான ஜோஷ் பாப்பரின் வயது 29. தன்னை விட 35 வயது இளையவருடன் காதல் பழகி வருகிறார் மடோனா. பாப் ராணியின் இசையில் பொங்கி வழியும் காதலின் ரகசியம் இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.