அறிவழகனின் இயக்கத்தில் மாதவன்

அறிவழகனின் இயக்கத்தில் மாதவன்

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி, பிறகு சீரியஸான கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து இந்திய சினிமாவின் முக்கியமான நடிகராக இருப்பவர் மாதவன். 2017-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படத்துக்குப் பிறகு தமிழில் அவருடைய ‘மாறா’ திரைப்படம் வெளியானது. எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இத்திரைப்படம் ரசிகர்களைக் கவரவில்லை.

தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் அவர் இயக்கி நடித்திருக்கும் ‘ராக்கெட்ரி - தி நம்பி எபெக்ட்’ திரைப்படத்தின் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் மாதவன். இத்திரைப்படம் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகிவருகிறது.

இதைத் தொடர்ந்து அடுத்து ஒரு தமிழ்ப் படத்தில் மாதவன் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

‘ஈரம்’, ‘குற்றம் 23’ போன்ற திரைப்படங்களை இயக்கிய அறிவழகனின் அடுத்த திரைப்படத்தில் மாதவன் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது அறிவழகன் இயக்கியிருக்கும் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்டர்’ திரைப்படம், கடந்த நவ.17ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் மாதவனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

விரைவில், இத்திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in