
’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் மீது பொறாமை உள்ளதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தித் திரைப்படம், ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து உயிர் பயத்துடன் தப்பிய சம்பவங்கள் ஆகியவற்றை வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தைப் பார்த்த பிரதமர் மோடி உட்பட பலர் பாராட்டியுள்ள நிலையில், மத்திய பிரதேசம், கர்நாடகா, குஜராத், உத்தராகண்ட் உள்பட சில மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன. படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்தப் படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.
இந்தப் படத்தை இந்தி பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில், நடிகர் மாதவனும் பாராட்டியுள்ளார். இயக்குநர் மீது கொஞ்சம் பொறாமைபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம், நம்ப முடியாததாகவும் இதற்கு முன் சொல்லப்படாததாகவும் இருக்கிறது. கொஞ்சம் பொறாமையாகவும் அதே நேரத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் டீம் பற்றி பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் மாதவன் தெரிவித்துள்ளார்.