
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நகைச்சுவை நடிகர் போண்டாமணியை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்தார்.
இன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், போண்டாமணிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை அவரிடம் தெரிவித்தார். மேலும் அரசின் சார்பில் உதவி செய்யப்படும் எனவும் உறுதியளித்தார். அமைச்சருக்கு போண்டாமணி கைகூப்பி நன்றி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டாமணி அவர்களை சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து, அதற்கான முழு செலவையும்முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் மூலம் ஏற்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த ‘பவுனு பவுனுதான்’ திரைப்படம் மூலமாக 1991ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் போண்டாமணி. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் வடிவேலுவுடன் நடித்தப் படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. ‘வின்னர்’, ’இங்கிலீஸ்காரன்’, ‘அழகர் மலை’, ‘மருதமலை’, ‘சுந்தரா டிராவல்ஸ்’ போன்ற படங்களில் வடிவேலுவுடன் இவரின் நடிப்பும் பெரிதாகப் பேசப்பட்டது. அதுபோல ‘படிக்காதவன்’, ‘வேலாயுதம், ‘ஜில்லா’ போன்ற படங்களிலும் இவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இவர் இதுவரை சுமார் 200 படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு அண்மையில் இதயக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து, மீண்டும் இவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
தற்போது போண்டாமணிக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக நடிகர் பெஞ்சமின் நேற்று கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், “அண்ணன் போண்டா மணி அவர்களுக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். உயிருக்குப் போராடும் அவருக்கு இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் அவரது உயர் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். இலங்கையில் இருந்து தமிழகம் வந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நடிகராகி, திருமணம் செய்து இரு குழந்தைகளைப் பெற்று தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவருக்கு காப்பாற்ற வேண்டும். உங்களால் முடிந்தால் அரசியல் தலைவர்களிடமோ, நண்பர்களிடமோ சொல்லி அண்ணன் போண்டா மணியை காப்பாற்ற வேண்டும். இலங்கையிலிருந்து அனாதையாக வந்தவர். அனாதையாகவே போகக் கூடாது. தயவு செய்து உதவி பண்ணுங்க ப்ளீஷ்'என அந்த வீடியோவில் கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் போண்டாமணியை சந்தித்துள்ளார்.