மதங்களைக் கடந்த கவிகள்

மதங்களைக் கடந்த கவிகள்
ஜனாப் பி.வி. அப்துல் கபூர்

இசை என்ன செய்யும் என்ற கேள்வி சிலருக்கு அவ்வப்போது எழுந்து கொண்டேயிருக்கிறது. ஏனெனில், பாடல் இல்லாமல் பலரால் வாழ முடியாது. அது பெரும்பாலும் ராஜபோதைதான். அதாவது ராஜாவின் இசையமைத்த பாடல்கள் மீதான போதைதான். இசையென்பது ஒழுங்கு செய்யப்பட்ட ஒலி என்பதைவிட அதை ஒழுங்கு செய்பவர்களால் வளர்க்கப்படும் பூச்செடி என்றே சொல்லலாம். அந்த இசை சிலருக்கு அழகிய பூந்தோட்டத்தைத் தருகிறது. அந்தப் பூக்களின் சுகந்தம் தோட்டம் வைத்தவருக்கு மட்டுமின்றி காற்றில் சுவாசிப்பவர்களுக்கும் புதிய உற்சாகத்தைத் தருகிறது.

எல்லைக்குள் அடங்கா இசை

படித்தவர் முதல் பாமரர் வரை விரும்பிக் கேட்கும் இசை முதலில் பண்டிதர்களுக்கான பண்ணிசையாகத்தான் இருந்தது. பின்னாளில் அது அனைவருக்கும் பொதுவான இசையாக மாறியது. மூங்கில்களைத் துளையிட்டே புல்லாங்குழல் இசைக்கருவியைக் கண்டுபிடித்த வண்டுகளின் மூலம் வனம் முழுவதும் நிரம்பிக் கிடக்கிறது இசையைப் போல மனித மனங்களுக்குள் நிரம்பிக் கிடக்கிறது இசை.
அந்த இசைக்கு மொழி, மதம், பால் பேதம் கிடையாது. ஒரு காலத்தில் தமிழகத்தில் இந்திப் பாடல்கள் ஆதிக்கமே அதிகமிருந்தது. முகமது ரஃபி பாடிய பாடல்களைக் கேட்பது மட்டுமின்றி அப்பாடல்களை ஹம் செய்வதே நாகரிகமாகப் பார்க்கப்பட்டது.

வட இந்திய டி.எம்.சௌந்தரராஜன் என்று தமிழர்களால் புகழப்பட்ட முகமது ரஃபியின் பாடல்கள், நம்மவர்களால் நேசிக்கப்பட்டது. முடி திருத்தும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த முகமது ரஃபியின் குரலின் வழியே வழிந்த ராகம், தமிழ் சினிமாவின் மீது நிழலாய் விழுந்தது. அப்படியான சாயலிலேயே பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. ஆனாலும், அவற்றிற்கு உயிரோட்டமாக கவியரசு கண்ணதாசன் போன்றோர் எழுதிய பாடல்கள், இந்தி மெட்டு என ஒதுக்கித்தள்ளி முடியாத வகையில் ஏராளமான படப்பாடல்களை ரசிக்கவைத்தன. அவற்றை வாரி வாரி வழங்கியது மார்டன் தியேட்டர்ஸ்.

இந்த நிலையில்தான் எக்காளம், திருச்சின்னம், கஞ்சிரா, பூசாரிக் கைச்சிலம்பு, தவண்டை, உடுக்கை, தப்பாட்டம் போன்ற நமது மண்ணின் கருவிகளைக் கொண்ட இசையை வழங்கிய இளையராஜாவின் வருகை, வட இந்தியாவில் உள்ளவர்களையும் அவரது ரசிகர்களாக மாற்றுவதற்குக் காரணமாக அமைந்தது.

இசை, மன அழுத்தத்திற்கான எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது என்பதைப் பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. எதிர்மறைச் சிந்தனைகளை மாற்றக்கூடிய ஆற்றல் வாய்ந்த இசை, பயம், வேதனை, பீதி, தனிமை ஆகியவற்றிற்கு எதிரானது என்பதைக் கரோனா காலம் நமக்கு நிஜம் என்று உணர்த்தியது. இசையென்பது கூட்டுச் செயல்பாடு. கவிஞர், இசையமைப்பாளர், இசைக் கலைஞர்கள், இசை கோர்ப்பாளர்கள், இசை நடத்துநர்கள், இசை ஒலிப்பதிவாளர்களின் கூட்டு உழைப்பில்தான் பாடல்கள் உருவாகின்றன. தமிழ் சினிமாவில் பக்திப் பாடல்களை எழுதி புகழ்பெற்றவர் பூவை செங்குட்டுவன். அவர் சினிமா மட்டுமின்றி தனித்து எழுதிய பக்தி பாடல்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டும்.
‘தாயிற்சிறந்த கோயிலுமில்லை’, ‘ஏடு தந்தானடி தில்லையிலே’, ‘இறைவன் படைத்த உலகை எல்லாம்’, ‘குருவாயூரப்பா திருவருள் தருவாய்’, ‘எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்’, ‘முத்தமிழில் பாடவந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்’ உள்ளிட்ட புகழ்பெற்ற பாடல்களின் ஆசிரியர் அவர்தான். ஒரு பாடலின் வெற்றியில் இசையமைப்பாளருக்கு இருக்கும் பங்கைப் போல, பாடலாசிரியருக்கும் இருக்கிறது.

ஆனால், இசையமைப்பாளர்களுக்குக் கிடைக்கும் புகழ், பல நேரங்களில் பாடலாசிரியர்களுக்குக் கிடைக்காமல் போகிறது. அப்படியொரு பாடலாசிரியர் ஜனாப் பி.வி. அப்துல் கபூர்.

சித்திரக் கவி

1960-ல் ஆர்.எம்.கிருஷ்ணமூர்த்தி இயக்கிய ‘தங்கம் மனசு தங்கம்’ படத்தில் அவர் எழுதிய பாடல் மிகவும் ஆச்சரியப்படுத்தக்கூடியது. இப்படத்தில் பிரேம்நசீர், எம்.என்.ராஜம், பிரெண்டு ராமசாமி, கே.ஏ.தங்கவேலு, சி.ஆர்.விஜயகுமாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதிய இப்படத்திற்குத் ‘திரையிசைத் திலகம்’ கே.வி.மகாதேவன் இசையமைத்தார். இப்படத்தில் இசையரசி பி.சுசீலா பாடிய,

மங்கள துளசி மாதா நீயே
மகிழ்வுடன் அருள்புரிவாயே தாயே...

என்ற பாடல் கேட்போரை பக்தியில் பரவசம் கொள்ளச் செய்யும். பெருமாள் கோயில்களில் பூஜை செய்யும்போது அர்ச்சனைக்காகவும், அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாகவும் அணிவிக்கப்படும் துளசியின் மகத்துவத்தைப் பற்றி தமிழ் சினிமாவில் எழுதப்பட்ட முக்கியமான பாடல் இது.

ஆனால், இந்தப் பாடலை எழுதியவர் இஸ்மாமியச் சமூகத்தைச் சேர்ந்த ஜனாப் பி.வி.அப்துல் கபூர். பெரும்புலவரான அப்துல் கபூரை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, உ.வே.சா உள்பட பலர் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள். ‘சித்திரக் கவிதை’ என்ற அற்புதப் படைப்பைத் தந்த அப்துல் கபூர் ஆசு கவியாவார். அதில் எழுதப்பட்ட பல பாடல்கள் மதம் கடந்தவை.

குங்குமப் பொட்டின் மகத்துவம்

அப்படி மதம் கடந்த மற்றொரு பாடலாசிரியர் இருக்கிறார். அவர் பெயர் ரோஷனாரா பேகம். 1968-ல் ஜி.என்.வேலுமணி தயாரிப்பில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த ‘குடியிருந்த கோயில்’ வெளியாகிப் பெரும் வெற்றிபெற்றது. கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ஜெயலலிதா, ராஜஸ்ரீ, எம்.என்.நம்பியார், எல்.விஜயலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரோஷனாரா பேகத்தால் எழுதப்பட்ட காதல் பாடலிது.

குங்கும பொட்டின் மங்களம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்...
இன்றென கூடும் இளமை
ஒன்றென பாடும்...

சுமங்கலிப் பெண் என்ற அடையாளத்திற்கு இந்து சமூகத்துப் பெண்கள் நெற்றி வகிட்டில் வைக்கும் குங்குமம் குறித்து இஸ்லாமியப் பெண் கவிஞர் எழுதிய இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்பாடலில் வரும் சங்கமம் என்ற சொல் தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்துப்போனது. ஏனெனில், ‘குடியிருந்த கோயில்’ எனப் பெயர் சூட்டுவதற்கு முன் அந்தப் பெயரைத்தான் படத்திற்குச் சூட்டியிருந்தார்கள். இதன் பின் படத்தின் பெயர் ‘இருதுருவம்’ என்றானது. ஆனால், படத்தின் பெயரை ‘குடியிருந்த கோயில்’ என எம்ஜிஆர் மாற்றினார். இப்படத்தில் ரோஷனாரா பேகம் மட்டுமல்ல, ‘நான் யார் நான் யார், நீ யார்?’ என்ற பாடல் எழுதியதன் மூலம் புலவர் புலமைப்பித்தனும் பாடலாசிரியராக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவின் முதல் பெண் பாடலாசிரியர்

கோவையைச் சேர்ந்த ரோஷனாரா பேகம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஷேக் முஸ்தபா கார் நிறுவனம் நடத்திவந்தார். தாய் டாக்டர். முறைப்படி சங்கீதம் கற்ற ரோஷனாரா பேகம், கோவை செயின்ட் ஃபிரான்சிஸ் கான்வென்ட்டில் படித்தவர். சிறப்பான முறையில் தமிழில் கவிதை எழுதக்கூடியவர். சிறந்த குரல் வளம் கொண்ட அவர், பள்ளி நிகழ்ச்சிகளில் பாடிப் பரிசு பெற்றவர். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மூலம் பாடல் குறித்த பயிற்சியைப் பெற்றவர்.

முதலில் அவர் எழுதிய இந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை. தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி மூலம்தான் ரோஷனாரா பேகத்தின் பாடல் இடம்பெற்றது. அவர் இல்லையென்றால், தமிழ் சினிமாவின் முதல் பெண் பாடலாசிரியர் என்ற பெயர் ரோஷனாராவிற்குக் கிடைக்காமலேயே போயிருக்கும்.

வைணவத்தில் ஊறித்திளைத்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த டி.எஸ்.ரங்கராஜன் என்ற கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடல் இத்தனை ஆண்டுகளான பின்னும் இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது.

1971-ல் சோ நடித்து இயக்கிய படம் ‘முகமது பின் துக்ளக்’. சோவால் நாடகமாக நடத்தப்பட்டு பின் திரைப்படமானது. அரசியல் பேசிய இப்படத்தில் ஆர்.நீலகண்டன், எஸ்.ராஜகோபால், வீரமணி, பீலி சிவம், மனோரமா, சுகுமாரி, ஜி.சகுந்தலா உட்பட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துப் பாடிய பாடலை, கவிஞர் வாலி எழுதினார்.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
அல்லா அல்லா லா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
அல்லா அல்லா லா அல்லா அல்லா
அல்லா அல்லா லா அல்லா அல்லா...


படத்தின் டைட்டில் பாடலான இப்பாடல், வீரமணியின் கணீர் குரலோடு தொடங்கி, பின் மெல்லிசை மன்னரின் குரலில் முழுவதுமாக ஒலிக்கும். ‘நீ இல்லாத இடமே இல்லை’ என அல்லா குறித்து பாடல் எழுதிய கவிஞர் வாலி தான், ‘பாண்டவர் பூமி’, ‘கிருஷ்ண விஜயம்’ உள்ளிட்ட பல இந்து பக்தி இலக்கியங்களை எழுதினார். அவரது கவி மனதில் மத எல்லைகள் இருந்ததில்லை.

ஆம்! தமிழ்த் திரை இசையுலகில் பேசப்படும் இப்பாடல்களை எழுதிய கவிஞர்களுக்கு மதம் இருந்தது. ஆனால் மதபேதம் இருந்ததில்லை. அதுதானே மனித வாழ்வின் உன்னதம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in