வாலி 91: காந்த வரிகளால் ஈர்த்த காவியக் கவிஞர் !

எம்ஜிஆருடன் கவிஞர் வாலி
எம்ஜிஆருடன் கவிஞர் வாலி

’’சினிமாவும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு முடிவெடுத்துட்டேன். திரும்பவும் ஸ்ரீரங்கத்துக்கே போய்விடுவது... இல்லேன்னா தற்கொலை செய்துகொள்வதுங்கற கடைசி முடிவுல இருந்தேன். என்னையே எனக்குப் பிடிக்காமப் போய், உலத்தையும் என்னையும் வெறுத்துக் கிடந்த வேளைல, எங்கிருந்தோ காத்துல கலந்து என் காதுக்குள்ளே புகுந்து, என் மனசைத் தொட்டுச்சு அந்தப் பாட்டு. கவியரசர் கண்ணதாசனோட பாட்டு அது. தோத்துப் போயிட்டோம்னு நினைச்ச என் முடிவை மாத்தி மீண்டும் வாழ்க்கைக்குள்ளே என் சட்டையைக் கொத்தாப் பிடிச்சு தள்ளிவிட்டுச்சு அந்தப் பாட்டு. ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை’ன்னு ‘மயக்கமா கலக்கமா’ங்கற பாட்டுதான் என்னைத் தெளியவைச்சுச்சு. புது உத்வேகத்தோட சினிமாவுக்குள்ளே இறங்கினேன். கண்ணதாசனுக்குக் காலம் முழுக்க நன்றிக்கடன்பட்டிருக்கேன்’’ என்று உணர்ச்சி பொங்கச் சொன்னவர் கவிஞர் வாலி.

காவிரிக்கரைக்காரர். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அருகில்தான் வீடு. அந்த ஸ்ரீரங்கம் ரங்கராஜனின் பெயரையே இவருக்கும் வைத்தார்கள் பெற்றோர். சிறுவயதில் இருந்தே கவிதைகளை எழுதிவந்த ரங்கராஜனுக்கு, திருச்சி வானொலி நிலையத்தில் சின்னச் சின்ன வாய்ப்புகள் கிடைத்தன. இதெல்லாம் யானைக்குக் கிடைத்த சோளப்பொரியாக இருந்தது.

தீவிரமான வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவர்தான் என்றபோதும் முருகப்பெருமானின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். தன் சகோதரி நோய்வாய்ப்பட்டு மிக மோசமான சூழலில் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், முருகப்பெருமானை மனதார வேண்டிக்கொண்டார். அடுத்த நாளே, படுக்கையிலிருந்து எழுந்து நடக்கத்தொடங்கிவிட்டார் சகோதரி.

கண்ணதாசனுடன்...
கண்ணதாசனுடன்...

இதன் பின்னர், ஒரு பாடலை எழுதினார் ரங்கராஜன். ’எனக்குத் திறமை இருக்கிறது. எனக்கு வாய்ப்பு கொடுங்கள்’ என்று கம்பெனி கம்பெனியாக ஏறுவார்கள் பலரும். அப்படித்தான் சான்ஸ் கேட்பார்கள். ஆனால் ரங்கராஜன், ஒரு போஸ்ட்கார்டில் பாடல் ஒன்றை எழுதி அனுப்பினார். பின்னணிப் பாடகர் டி.எம்.எஸ்ஸுக்குத்தான் பாடலை அனுப்பிவைத்தார். கடிதத்தில், தன்னைப் பற்றிய குறிப்பும் எழுதியிருந்தார். கடிதத்தைப் பார்த்த டி.எம்.எஸ், பாடலைப் படித்துவிட்டு பிரமித்துப் போனார். அதைப் பாட்டாகவே இசைத்துப் பாடிப்பார்த்தார்.

‘உனக்குத் திறமை இருக்கிறது. சென்னைக்கு வா. உனக்கு சன்மானமும் தர வேண்டும்’ என்று டி.எம்.எஸ் அழைத்தார். அந்தப் பாடலை இன்றைக்கும் நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ‘முருகா முருகா...’ என்று மனமுருகி சிலிர்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம். ரங்கராஜன் என்கிற வாலி எழுதி இன்றைக்கும் நாம் கேட்கிற அந்தப் பாடல்... ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்!’

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கராஜன், ‘வாலி’யானதும் வாழ்நாள் முழுக்க புகழுச்சியில் இருப்பதற்குத் தொடங்கிய பயணமும் அங்கிருந்துதான்; அப்போதிருந்துதான்!

திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்தார். கொஞ்சம் போராட்டங்களுக்குப் பிறகு திரைக்குள் நுழைந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள கிளப் ஹவுஸில் வந்து தங்கினார். அங்கே நாகேஷும் வெங்கியும் தங்கியிருந்தார்கள். வெங்கி என்பது மறைந்த நடிகர் ஸ்ரீகாந்தின் நிஜப்பெயர். மூவரும் நண்பர்களானார்கள். உணவையும் சரி... பசியையும் சரி... சேர்ந்தே அனுபவித்தார்கள். ஒன்றாய் கஷ்டப்பட்டார்கள். சாப்பிடக் காசில்லாமலும் இருந்தார்கள். ஆனால் சந்தோஷமாக இருந்தார்கள். ஸ்ரீகாந்தின் கைக்கடிகாரம் பலமுறை அடகுக்கடைக்குப் போய்விட்டு பிறகு திருப்பப்பட்டிருக்கிறது.

ஸ்ரீகாந்த் சாரைப் பேட்டி எடுத்த தருணம் நினைவுக்கு வருகிறது (அவரின் முழுமையான பேட்டியும் கடைசிப் பேட்டியும் அதுதான்). “ராம்ஜி, நீங்க திருச்சின்னுதானே சொன்னீங்க. உங்க ஊர்க்காரன் ரங்கராஜன் (வாலி) ரொம்பப் பொல்லாதவன். விறுவிறுன்னு வருவான். கையைக் காட்டுடான்னுவான். கைகுலுக்கற பாவனைல நீட்டுவேன். வாட்ச்சைக் கழற்றி அடகு வைச்சிருவான். திரும்ப ஒருநாள் வந்து, ‘வெங்கி கையை நீட்டுடான்னுவான். வாட்ச்சை அடகுக் கடைலேருந்து திருப்பிக்கிட்டு வந்து தருவான். மகா கெட்டிக்காரன். பேசினாலே கவிதையாத்தான் இருக்கும். எதுகையும் மோனையும் விளையாடும் அவன்கிட்ட..!’’ என்று தன் நண்பர் வாலி பற்றி ஸ்ரீகாந்த் சொன்னது நினைவுக்கு வருகிறது.

சினிமாவில் சில பாடல்களை எழுதினார். பெரிதாக ஹிட்டாகவில்லை. எம்ஜிஆர் நடித்த ‘நல்லவன் வாழ்வான்’ படத்திலும் பாட்டெழுதினார். அதுவும் பேர் சொல்லவில்லை. அப்போதுதான், டி.எம்.எஸ். வாலியை அழைத்துச் சென்று, எம்.எஸ்.விஸ்வநாதனிடம் நிறுத்தினார். ‘’விசு, இவன் நல்லாப் பாட்டு எழுதுறான். வார்த்தைகளெல்லாம் அவ்ளோ சரளமா வந்து விழுது. இவனைப் பயன்படுத்திக்கோ. எனக்காக ஒரு வாய்ப்பு கொடு’’ என்றார்.

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் பிடித்திருந்தது. அப்போது இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்துக்கான வேலையில் இருந்தார் மெல்லிசை மன்னர். இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் அழைத்துச் சென்றார் எம்.எஸ்.வி. ‘’இவர் பேரு ரங்கராஜன். வாலிங்கற பேர்ல பாட்டெல்லாம் எழுதுறாரு. பெரியாளா வர்றதுக்கான அவ்ளோ திறமையும் இருக்கு. படத்துல பாட்டெழுத சான்ஸ் கொடுப்பா’’ என்று கேட்டார். அதுவரை கண்ணதாசனின் பாடல்களைக்கொண்டு ஏராளமாகப் படமெடுத்த கே.எஸ்.ஜி, யோசித்தார். சொல்லப்போனால், கே.எஸ்.ஜி.யும் கண்ணதாசனும் அப்படியொரு நண்பர்கள். யோசித்துவிட்டு, ‘’நீ சொல்றியேன்னு சான்ஸ் தரேன் விசு. ஆனா ஒரேயொரு பாட்டுதான் தருவேன்’’ என்றார். அப்படித்தான் ‘கற்பகம்’ படத்தில் ‘அத்தைமடி மெத்தையடி’ என்ற பாடலை வாலி எழுதினார். டியூனுக்கு இம்மியும் பிசகாமல் வரிகள் அழகு காட்டி உட்கார்ந்துகொண்டு ஜாலம் செய்தன.

அப்புறம் ஒரேயொரு பாட்டு, கூடவே இன்னொரு பாட்டு என்று அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதினார் வாலி. ‘மன்னவனே அழலாமா’, ‘அத்தை மடி மெத்தையடி’ முதலான எல்லாப் பாடல்களும் செம ஹிட்டாகின. ஒரேயொரு பாடல் எழுதச் சென்ற வாலி ஒட்டுமொத்த வாய்ப்பையும் பெற்றார். திரையுலகில், கற்பகம் மூலம் கற்பக விருட்சமென வளர்ந்தார்.

மெல்லிசை மன்னருடன்...
மெல்லிசை மன்னருடன்...

வாலி, எல்லோருக்கும் பிடித்தவரானார். பிறகு, எம்ஜிஆருக்கும் பிடித்தவரானார். சிவாஜிக்கும் பிடித்தவரானார்.எம்ஜிஆர் படம். அந்தப் படத்தில் ஒரேயொரு பாடலை எழுதுவதற்கு வாலியை அழைத்தார்கள். கதையையும் பாட்டுக்கான சூழலையும் கேட்டார் வாலி. மளமளவென பாட்டெழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பாடல் ரெடியானதும் கேட்கிற வழக்கமுள்ளவர் எம்ஜிஆர். அவரும் வந்தார். “இது யார் எழுதினது?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ‘’வாலி எழுதினது’’ என்று தயங்கித் தயங்கிச் சொன்னார்கள். ஒருநிமிடம் கூட யோசிக்கவில்லை எம்ஜிஆர்... ”பாட்டு வரியெல்லாம் நல்லாருக்கு. எல்லாப் பாடலையும் அவரையே எழுதச் சொல்லிருங்க’’ என்று சொல்லிச் சென்றார்.

‘பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதை கேட்டாயோ’ என்றார். ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ என்றார். ’தரை மேல் பிறக்கவைத்தான்’ என்றார். ‘நானொரு குழந்தை’ என்றார். எல்லாப் பாடல்களையும் அதுவும் எம்ஜிஆர் படத்துக்கு எழுதினார். அவ்வளவு ஏன்... அந்தப் படத்துக்கு ‘படகோட்டி’ என்று டைட்டில் வைத்ததே வாலிதான்! அங்கே... தொடங்கியது வாலி ராஜ்ஜியம்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசர் கண்ணதாசன் என்று பலரும் பலவிதமான தத்துவப் பாடல்களையும் கொள்கைப் பாடல்களையும் எம்ஜிஆருக்கு எழுதி ஹிட்டுகளைக் கொடுத்திருந்தாலும் வாலி எம்ஜிஆருக்கு எழுதிய பாடல்கள், பின்னாளில், எம்ஜிஆரின் அரசியல் பிரச்சாரத்துக்குப் பயன்பட்டன; பலம் சேர்த்தன. ’நான் ஆணையிட்டால்’ என்று தெறிக்கவிட்டார். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்றார். எம்ஜிஆரின் அரசியல் வளர்ச்சிக்கு வாலியின் பாடல்கள் கட்டியம் சொல்லின. ‘ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவனென்றாலும் விடமாட்டேன்’ என்ற வரிகளில் கட்டுண்டு போனார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள்.

பாலசந்தர் பக்கமும் வந்தார். முக்தா பிலிம்ஸ் பக்கமும் வந்தார். அன்றைக்கு இருந்த பெரிய நிறுவனங்களும் பெரிய இயக்குநர்களும் நடிகர்களும் வாலியை வாரியணைத்துக் கொண்டார்கள்.

‘வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்’ என்று நமக்குள் தன்னம்பிக்கை விதைத்தார். ‘அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா’வும் எழுதினார். ‘’வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா பாட்டை யார் எழுதினது? வாலியா? அவருக்கு என் பாராட்டுகளைச் சொல்லிருங்க’’ என்று இயக்குநர் பாலசந்தரிடம் பேரறிஞர் அண்ணா மனமுவந்து சொன்னார்.

கண்ணதாசனின் பாட்டொளி, பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தபோதுதான் வாலியின் பாடல்களும் இடம்பிடித்தன. தனியாகத் தடம் பதித்தன. ஆனாலென்ன... ‘இது கண்ணதாசன் பாட்டுதானே?’ என்று நாம் நினைத்து சிலாகித்துக் கொண்டிருக்கிற நூற்றுக்கணக்கான பாடல்களை, வாலி எழுதியிருந்தார்.

கமலுடன்...
கமலுடன்...

கண்ணதாசனுக்கு போட்டிதான் வாலி. ஆனால், இருவரும் முட்டிக்கொண்டதில்லை. திடீரென்று இரவு 11 மணிக்கு கவியரசர் போன் பண்ணுவார் வாலிக்கு. ’’யோவ், அந்தப் பாட்டைக் கேட்டேன்யா. என்னவோ செய்யுதுய்யா. நல்லா எழுதிருக்கே. அந்தப் பாட்டுக்காக, உனக்கு விஸ்கி அனுப்பிச்சிருக்கேன்யா. இன்னும் நிறைய எழுது’ என்பார். இப்படித்தான் இரண்டு கவிஞர்களும் ஒருவரையொருவர் காதலித்தார்கள். இவற்றையெல்லாம் ஒளிவோ மறைவோ இல்லாமல் வாலியே மேடைகளில் சொல்லியிருக்கிறார்.

சிவாஜிக்கும் ஏராளமாகவும் தாராளமாகவும் எழுதினார். ‘இதோ... எந்தன் தெய்வம் முன்னாலே’ முதலான பாடல்களையெல்லாம் எழுதினார். தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை / கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை / அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டான் / அந்தச் சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்’ என்ற பாடல் வரிகளைக் கேட்டுவிட்டு, கண்ணதாசனை சந்திக்கும்போது, ‘உங்க பாட்டு ரொம்ப நல்லாருந்துச்சு’ என்று பலர் சொல்லி, “யோவ், இது நான் எழுதலைய்யா. வாலி எழுதினான். அவனைக் கூப்பிட்டு பாராட்டுங்கய்யா” என்று கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். அந்தப் பாட்டுக்கு மட்டுமல்ல, பல பாடல்களுக்கு அப்படி அவர் சொன்னதுண்டு!

எம்ஜிஆருடன் தொடர்ந்து நடித்து வந்த ஜெயலலிதா, சிவாஜியுடன் முதன்முதலாக நடித்த படம் ‘கலாட்டா கல்யாணம்’. ‘’யோவ் வாலி, அந்தப் பொண்ணு இப்பத்தான் முதல்ல நம்ம கூட நடிக்குது. நல்லா பிரமாதமான வரிகளைப் போட்டு எழுது’ என்று சிவாஜி சொல்ல, உடனே வாலி ‘வந்த இடம் நீ நல்ல இடம் / வர வேண்டும் காதல் மகாராணி’ என்று எழுதினார்.

’சர்வர் சுந்தரம்’ படத்தில் ஒரேயொரு பாடலைத் தவிர எல்லாப் பாடல்களும் கண்ணதாசன். திடீரென வாலியை அழைத்து ஒரேயொரு பாட்டு கொடுக்கப்பட்டது. வந்தார். டியூனைக் கேட்டார். கையோடு எழுதிக் கொடுத்தார். ’அவளுக்கென்ன அழகிய முகம் / அவனுக்கென்ன இளகிய மனம் / நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன / உறவுகள் தரும் உறவுக்கென்ன / உயிருள்ளவரை தொடர்ந்துவரும்’ என்கிற இந்தப் பாடல் இன்றைக்கும் ஹிட் வரிசையில் தனியிடம் பிடித்திருக்கிறது.

ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா என்று இன்றைய நடிகர்களுடனும் இயக்குநர்களுடனும் இசையமைப்பாளர்களுடனும் பயணம் தொடர்ந்தது. இளையராஜாவின் இசையில் எண்ணற்ற பாடல்களைத் தந்திருக்கிறார். காலத்துக்குத் தகுந்தது போல,‘காதல் வெப்சைட் ஒன்று’ என்று ஹைடெக் பாட்டெழுதுவார். ‘இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு’ என்று தேசபக்தி முழங்குவார். ’சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ என்று ஷங்கருக்காக ரஹ்மான் இசையில் ரயில்விடுவார்.

‘முக்காலா முக்காபுலா’ என்று டீன் ஏஜ் குறும்புகளை தெறிக்கவிடுவார். ‘ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது’ என்றும் எழுதுவார். ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்று தாய்மையைக் கொண்டாடுவார். ’மன்னன்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், திருச்சி ஐயப்பன் கோயிலில், கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளது, இதுவரை எந்தப் பாடலுக்கும் இல்லாத பெருமை; எந்தக் கவிஞருக்கும் கிடைக்காத சரித்திரம்!

வெண் தாடியும் விபூதியுமாக வலம் வந்தாலும் அவர் எல்லோருக்கும் வாலிபக் கவிஞராகவே திகழ்ந்தார். ’சுந்தரி கண்ணால் ஒருசேதி’யில் சொக்கிப் போனோம். ‘பொய்க்கால் குதிரைகள்’, ‘சத்யா’, ஹேராம்’ என்று பல படங்களில் நடித்தார். சீரியல்களிலும் கலக்கினார். படங்களுக்குக் கதை வசனமும் எழுதினார். வாலியின் இன்னொரு ஸ்பெஷல். கண்ணதாசன் சமகாலக் கவிஞரான வாலியைப் புகழ்ந்தது போலவே, அடுத்த தலைமுறைக் கவிஞர்களை வாலி அளவுக்கு எவரும் கொண்டாடவில்லை.

’ஒப்பனை முகங்களை / ஒப்புக்கும் உப்புக்கும் பாடியவன் - அந்த / தப்புக்குப் பிராயச்சித்தமாய் / ஓர் ஒப்பிலாத முகத்தை / தப்பிலாத தமிழில் / பாட வருகிறேன்’ என்று அவரே தன்னை விமர்சித்துக் கொள்கிறார். பல தொடர்கள் எழுதியிருக்கிறார். இவரின் கவிதை நடையே ஒருதாளத்துக்குள் கட்டுப்பட்டது போல இருக்கும். அவரின் சுயசரிதமான ‘நினைவு நாடாக்கள்’ கூட அப்படியொரு ராகச்சுவையுடன் இருக்கும்!

இளையராஜாவுடன்...
இளையராஜாவுடன்...

‘கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்/ விடியும் நாள் பார்த்து வருவேனே நானும் / வருங்காலம் இன்பமென்று நிகழ்காலம் கூறும் கண்ணே’ என்கிற ‘கனாக்காணும் கண்கள் மெல்ல’ பாடலைக் கேட்டு நம் துக்கக் குப்பைகளைக் கடாசி எறிந்தவர்கள் பலருண்டு.

’எங்கள் தங்கம்’ படத்தில் ஒரு பாட்டு. முதல் வரி வந்துவிட்டது. அடுத்த வரிக்குச் செல்லமுடியவில்லை. அப்போது கலைஞர் கருணாநிதி வந்தார். ‘பாட்டு தயாரா?’ என்றார். ‘’முதல் வரி கிடைச்சிருச்சு தலைவரே. அடுத்த வரி கிடைக்காம அப்படியே உக்காந்திருக்கேன்’’ என்றார் வாலி. உடனே கலைஞர், ‘முதல் வரியைச் சொல்லு’ என்றார். ‘நான் அளவோடு ரசிப்பவன்’ என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ‘எதையும் அளவின்றிக் கொடுப்பவன்’ என்றார் கலைஞர். ‘இந்த வரி அவருக்குத்தான் (எம்ஜிஆருக்கு) பொருத்தமா இருக்கும்’’ என்றும் சொன்னார் கலைஞர். மதியத்துக்குப் பிறகு வந்த எம்ஜிஆர், பாடலின் வரிகளைக் கேட்டுவிட்டு, ‘எதையும் அளவின்றிக் கொடுப்பவன்’ என்று எழுதியதைப் பாராட்டி, வாலியை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். உடனே வாலி, ‘’இந்த முத்தத்தை கலைஞருக்குக் கொடுங்க சின்னவரே. அந்த வரியைச் சொன்னதே அவர்தான்’’ என்று சொல்ல, கலைஞரைக் கட்டித்தழுவிக்கொண்டாராம் எம்ஜிஆர். இதை கலைஞர் முன்னிலையில் மேடையிலேயே சொல்லியிருக்கிறார் கவிஞர் வாலி

இதேபோல் கவிஞர் வாலிக்குப் பாராட்டு விழா. அதில் பேசிய வாலி, ’‘எம்.எஸ்.வி அண்ணனைப் பாக்கறதுக்கு முன்னாடிவரைக்கும் எனக்கு சோறு திங்க வக்கில்ல. அவரைப் பாத்த பிறகு எனக்கு சோறு திங்கவே நேரமில்ல’’ என்று தனக்கே உரிய பாணியில், தன் நன்றியை நெகிழ்வும் கண்ணீருமாக வாலி சொன்னார். தமிழ் சினிமாவில், நன்றிக்கு உதாரண புருஷன் ’அவதார புருஷன்’ தந்த நாயகன் வாலி என்று இன்றைக்கும் கொண்டாடுகிறது திரையுலகம்!

கவிஞர் வாலி
கவிஞர் வாலி

1931 அக்டோபர் மாதம் 29-ம் தேதி பிறந்தார் வாலி. 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ல், தனது 82-வது வயதில் காலமானார். இன்று வாலியின் 91-வது பிறந்த தினம்.

நம் இரவுகளை இதமாக்குவதில், பயணத்தைச் சுகமாக்குவதில், நமக்குள் நம்பிக்கையை விதைப்பதில் காவியக் கவிஞர் வாலியும் துணையாக இருக்கிறார்! அவரின் ஒவ்வொரு வரிகளும் நம் நரம்புகளுக்குள் புகுந்து, நம்மை உற்சாக உத்வேகத்துடன் வாழச் செய்துகொண்டுதான் இருக்கின்றன!

ஊக்கு விற்பவனை

ஊக்குவித்தால்

ஊக்கு விற்பவனும்

தேக்கு விற்பான் எனும் வைட்டமின் வரிகளைத் தந்த வாலியைப் போற்றுவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in