
நடிகர் ரஜினியின் 170-வது படத்தைத் தயாரிக்க இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரான சுபாஸ்கரன் பிறந்தநாளை முன்னிட்டு அந்நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த்தின் 170-வது படத்தைத் தயாரிக்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை ‘ஜெய்பீம்’ படப்புகழ் ஞானவேல் இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்தத் திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என்பதையும் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, நடிகர் ரஜினிகாந்த்தின் ‘2.0’ மற்றும் ‘தர்பார்’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மீண்டும் ஒருமுறை நடிகர் ரஜினியுடன் இணைவதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது லைகா.
’ஜெய்பீம்’ போல ஒரு உண்மை சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்ட இந்தக் கதையில் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ’மகிழ்வான தருணம்! புதிய பயணம் இனிதே ஆரம்பம்!’ என இயக்குநர் ஞானவேல் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடித்ததும் ஐஷ்வர்யா ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனத்துடன் இணைந்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்தான அடுத்தடுத்த அறிவிப்புகளும் விரைவில் எதிர்பாக்கலாம்.