எல்.ஆர்.ஈஸ்வரி: உச்சஸ்தாயியில் உச்சம் தொட்ட குரலரசி!

- எல்.ஆர்.ஈஸ்வரி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
எல்.ஆர்.ஈஸ்வரி
எல்.ஆர்.ஈஸ்வரி

கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டு ஒரு வசனம் கூட பேசாமல் நின்றுவிட்டுச் சென்றவர்கள் பலரை திரையுலகம் அடையாளம் கண்டு முன்னே வரச் செய்திருக்கிறது. பின்னாளில், அவர்கள் மிகப்பெரிய காமெடி நடிகர்களாகவும் குணச்சித்திர நடிகர்களாகவும் ஹீரோக்களாகவும் அட்டகாசமாக வலம் வந்து, மக்கள் மனங்களில் தனியிடம் பிடித்திருக்கிறார்கள்.

அப்படி, கூட்டத்தில் நிற்பவர்களை ‘ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்’ என்று சொல்லி தள்ளிவைத்த காலமெல்லாம் உண்டு. அதேபோல், ஒரு பாடலை பாடகி பாடுவார். பாட்டுக்கு முன்னதாகவோ, ஆரம்பித்ததுமோ, நடுநடுவிலோ. ஐந்தாறு ஆண் குரலோ பெண் குரலோ ஹம்மிங் பண்ணுவதைக் கேட்கலாம். இவர்களை ‘கோரஸ்’ பாடகர்கள், பாடகிகள் என்று சொல்லுவார்கள். அப்படி கோரஸ் பாடிக் கொண்டிருந்த லூர்து மேரி ராஜேஸ்வரியை, தமிழ்த் திரையுலகமும் காலமும் கைவிட்டுவிடவில்லை. அவரை எல்.ஆர்.ஈஸ்வரி என்றாக்கியது. பெயரைச் சுருக்கிய காலம், பேரையும் புகழையும் மிகப்பெரிய உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

இளையான்குடிதான் சொந்த ஊர். அப்பா அந்தோணி ராஜ், அம்மா ரெஜினாமேரி நிர்மலா. அப்போதே சென்னைக்கு வந்துவிட்டார்கள். லூர்து மேரி ராஜேஸ்வரி படித்ததெல்லாம் சென்னையில்தான். அம்மா நன்றாகப் பாடுவார்.சினிமாவில் கோரஸ் பாட வாய்ப்பு கிடைத்தது அம்மாவுக்கு. அப்படிச் செல்லும்போது லூர்துமேரி ராஜேஸ்வரியையும் அம்மா அழைத்துச் செல்வது வழக்கம். இது அம்மா போட்ட கணக்கு அல்ல. காலம் போட்டுவைத்த பாதை.

கலைஞரின் அனல் தெறிக்கும் வசனத்தில், சிவாஜியின் வீறுகொண்ட நடிப்பில், எல்.வி.பிரசாத் இயக்கிய ‘மனோகரா’வை மறக்கமுடியுமா. எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைத்தார். ‘பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா’ என்று கண்ணாம்பா வசனம் பேச, அது இன்றுவரைக்கும் ஹிட்டடித்திருக்கிறது. அப்படித்தான்... அன்று கோரஸ் பாட வேண்டியவர்களில் ஒரு பெண் வரவில்லை. எஸ்.வி.வெங்கட்ராமன், சிறுமியாக நின்றுகொண்டிருந்த லூர்துமேரியை பாடவைத்தார். எல்லோரும் பாட, இவரின் குரலும் அதில் கலந்து வந்தது. ’இன்ப நாளிலே இதயம் பாடுதே’ என்கிற பாடலில் வருகிற ஹம்மிங்கில், இவரின் குரலும் பத்தோடு பதினொன்றாக கலந்துகட்டி வந்திருக்கும். பிறகு ‘கோரஸ் பாடகி’ எனும் முத்திரை கிடைத்தது. நிறைய படங்களுக்கு, பாடல்களுக்கு கோரஸ் பாடினார்.

1958-ம் ஆண்டு, இயக்குநர் ஏ.பி.நாகராஜனும் நடிகர் வி.கே.ராமசாமியும் இணைந்து ‘நல்ல இடத்து சம்பந்தம்’ படத்தைத் தயாரித்தார்கள். இந்தப் படத்து லூர்துமேரியை அழைத்த ஏ.பி.நாகராஜன், ‘’இந்தப் படத்துல தனிப்பாடல் பாடுறே. மாமாகிட்ட (கே.வி.மகாதேவன்) சொல்லிட்டேன். இனிமேல் நீ லூர்துமேரி ராஜேஸ்வரி இல்ல. எல்.ஆர்.ஈஸ்வரி’’ என்று பெயர் சூட்டி, பாடவைத்தார். ’இவரேதான் அவரு அவரேதான் இவரு’ ’துக்கத்திலும் சிரிக்கணும்’ என்கிற பாடல்களைப் பாடினார். அடுத்தடுத்து நல்ல நல்ல சம்பந்தங்கள் தொடர்ந்தன. துக்கம் போய் சந்தோஷங்கள் நிறைந்தன. பல பாடல்களைப் பாடிவந்தார்.

அண்ணன் - தங்கைக்கு உதாரணப் படமாகத் திகழும் ‘பாசமலர்’ படத்தில் இவர் பாடிய பாடல், எல்.ஆர்.ஈஸ்வரியை புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது. திருமண வீடுகளில் இன்றைக்கும் இவரின் குரலில் ‘வாராய் என் தோழி வாராயோ’ என்று மணமகளை அழைத்துக் கொண்டே இருக்கிறது.

'மலராத பெண்மை மலரும்/ முன்பு தெரியாத உண்மை தெரியும்/ மயங்காத கண்கள் மயங்கும்/ முன்பு விளங்காத கேள்வி விளங்கும்/ இரவோடு நெஞ்சம் உருகாதோ/ இரண்டோடு மூன்று வளராதோ/ இரவோடு நெஞ்சம் உருகாதோ/ இரண்டோடு மூன்று வளராதோ/ வாராய் என் தோழி வாராயோ/ மணப்பந்தல் காண வாராயோ’ என்று வார்த்தைகளுக்குள் தேன் தடவி, காதல் தடவி, நாணம் தடவிப் பாடினார்.

மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல் இது. படம் வெளியாகி பாடல் ஹிட்டானதும், திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் ஈஸ்வரியை அழைத்து, ‘’விசுகிட்ட பாடிருக்கிற இந்தப் பாட்டு உன்னை எங்கேயோ கூட்டிட்டுப் போகப் போவுது பாரேன்’’ என ஆசீர்வதித்தார். அந்த வாக்கு பலித்தது.

உச்சஸ்தாயிப் பாடல்களென்றால், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதனை கூப்பிடுவார்கள். சி.எஸ்.ஜெயராமை அழைப்பார்கள். அப்படியொரு பெண் குரல் சிக்காமல் இருந்தது திரையுலகில்! எல்.ஆர்.ஈஸ்வரி அந்த இடத்தையும் நிரப்பினார். கிராமத்துப் பாடல்களிலும் ஒரு ஸ்வரம் கூட்டிக் குழைப்பார். காதல் பாடல்களிலும் பல ரசங்களையும் பழரசங்களாக்கிக் கொடுப்பார். துக்கப்பாடல்களைப் பாடினால் நாம் துக்கித்துப்போகும்படி கண்ணீரால் நனைத்தெடுப்பார். சோகப்பாடல்களில் அப்படியே நம் மனதைப் பிழிந்தெடுப்பார்.

கவியரசு கண்ணதாசன் நடித்து தயாரித்த ‘கருப்புப்பணம்’ படத்தில் ஒரு பாடல். நாயகிக்கு ஒரு பாடல். பி.சுசீலாவை அழைத்ததாகவும், ‘’இந்தப் பாடலை ஈஸ்வரியால்தான் சிறப்பாகப் பாடமுடியும்’’ என்று சுசீலாவே சொன்னதாகவும் சொல்லுவார்கள். மெல்லிசை மன்னர்களுக்கும் பி.சுசீலா பாடவேண்டும் என விருப்பம். விவரத்தையெல்லாம் சொல்லி எல்.ஆர்.ஈஸ்வரியிடம் பாடலைக் கொடுத்தார்கள். மறுநாள்... எல்.ஆர்.ஈஸ்வரி வந்தார். பாடினார்.

‘அம்மம்மா கேளடி தோழி/ சொன்னானே ஆயிரம் சேதி/ கண்ணால தந்தது பாதி/ சொல்லாமல் வந்தது மீதி.ஓ./ அம்மம்மா..ஆஆ..ஆ..ஆஆ’ என்று பாடல் ஆரம்பமும் ஹம்மிங்குமே மெல்லிசை மன்னர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தன. ‘பிஞ்சாக நானிருந்தேனே/ பெண்ணாக வளர்த்து விட்டானே/ அஞ்சாமல் அணைத்து விட்டானே/ அச்சாரம் கொடுத்து விட்டானே’ என்று காதலை இவ்வளவு உருக்கமாகவும் ரசாயன மாற்றங்களுடனும் பாடியவர் எவருமில்லை என்று கொண்டாடின பத்திரிகைகள்.

’எலந்தப் பயம் எலந்தப் பயம்’ என்று கிண்டலும் கேலியுமாகவும் பாடுவார். ஆரம்பகாலப் பாடங்களில், மனோரமா ஆச்சிக்கு இவர்தான் பாடிக்கொண்டிருந்தார். அச்சு அசலாகப் பொருந்தியது ஆச்சிக்கு. அவருக்கு மட்டுமின்றி, கதைக்குத் தேவையான கனத்தை ஒரு பாடல் கொடுக்கவேண்டும். அந்தப் பாடலின் கனத்தை, ஈஸ்வரியின் மாயாஜாலக் குரல் கொடுத்துவிடும்.

முத்து குளிக்க வாரீகளா/ மூச்சை அடக்க வாரீகளா/ சிப்பி எடுப்போமா மாமா மாமா/ அம்மளுக்கும் சொந்தமில்லையோ/

ஏலா முத்தம்மா உம்மனசு எம்புட்டு/ என் கிட்டத்தான் சொல்லுடியம்மா/ மாமா/ ஏலா முத்தம்மா உம்மனசு எம்புட்டு/ என் கிட்டத்தான் சொல்லுடியம்மா/ நாளா நாளுமில்ல முத்தெடுக்க நம்மள நீ கூப்பிட்டதென்னடியம்மா/ முத்து குடுக்க வாரீகளா/ கத்து கொடுக்க வாரீகளா/ சங்கு பறிப்போமா ஏலா ஏலா/ அம்மாளுக்கும் சொந்தமில்லையோ’ பாடலைக் கேட்டு அந்தப் பாடலைப் பாட ஆசைப்படும் ஜித்துவேலைகளை டி.எம்.எஸ்.ஸுடன் இணைந்து ஈஸ்வரியம்மா ஜாலம் பண்ணியிருப்பார்கள்.

’ஆளான பொண்ணுக பாக்கு வைக்கும் முன்னமே/ என்னவென்னு சொல்லுவாக/ ஆளான பொண்ணுக பாக்கு வைக்கும் முன்னமே/ என்னவென்னு சொல்லுவாக/ ஹக்.. கோளாறு பண்ணாம/ கிட்ட வந்து கொஞ்சுங்கோ சினிமாவில் கொஞ்சுராப்பல’ என்று கிறங்கடித்துவிடுவார் எல்.ஆர்.ஈஸ்வரி. நாகேஷுக்கும் மனோரமாவுக்கும் அப்படிப் பொருந்திப் போன பாடல் இது.

’துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை / அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை’ என்ற பாடலில் நம்மைத் துள்ளவைத்துவிடுவார்.

’மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி / நீராட ஓடிவா /

’வேல் ஆடும் பார்வை தாளாத போது / நோகாமல் ஆடவா / என்றும்

’தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை / நானாக அள்ளவா / தீராத தாகம்

பாடாத ராகம் / நாளெல்லாம் சொல்லவா நாளெல்லாம் சொல்லவா’ என்றும் சொல்லிவிட்டு பாடலின் நடுவிலும் முடிவிலும் ’ஹோய் பப்பா ஹோய் பப்பா’ என்று கோரஸ் கொடுக்கும் போது, அதை உச்சரிக்காத ரசிகர்களே இல்லை.

’தரிசனம்’ என்றொரு படம் நினைவிருக்கிறதா. ஆனால் படத்தின் பாடல் என்றென்றைக்கும் நினைவிலிருக்கும்.

’இது மாலை நேரத்து மயக்கம்/ பூமாலை போல் உடல் மணக்கும்/ இதழ் மேலே இதழ் மோதும்/ அந்த இன்பம் தோன்றுது எனக்கும்’ என்று எல்.ஆர்.ஈஸ்வரி ஆரம்பித்து வைப்பார். ‘இதெல்லாம் கூடாது’ என்று டி.எம்.எஸ். மறுத்துப் பாடுவார்.

அதற்கு பதிலடியாக ஈஸ்வரி, ‘பனியும் நிலவும் பொழியும் நேரம் மடியில் சாய்ந்தாலென்ன /பசும் பாலை போல மேனி எங்கும் பழகிப் பார்த்தாலென்ன/ உடலும் உடலும் சேரும் வாழ்வை

உலகம் மறந்தாலென்ன/ தினம் ஓடியாடி ஓயுமுன்னே/ உண்மை உணர்ந்தாலென்ன/ உறவுக்கு மேலே சுகம் கிடையாது/ அணைக்கவே தயக்கமென்ன/ இது ஒட்டை வீடு ஒன்பது வாசல்

இதற்குள்ளே ஆசையென்ன / என்பார்கள். ’இது மாலை நேரத்து மயக்கம்’ பாடலை மாலையில் மட்டுமின்றி எப்போது கேட்டாலும் எவர் கேட்டாலும் கிறங்கிப்போய்விடுவோம்.

கே.பாலசந்தரின் ‘தாமரை நெஞ்சம்’ படத்தில், 'அடிபோடி பைத்தியக்காரி/ நான் அறிந்தவள்தான்

உன்னை புரிந்தவள்தான்/ நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள் தான்/ நினைத்ததெல்லாம் முடித்து விட்டேன்/ இனி வேறு ஆசை இல்லை/ நினைத்ததெல்லாம் முடித்து விட்டேன்

இனி வேறு ஆசை இல்லை/ நிலை மாறப்போவதில்லை/ நிழல் தேடும் எண்ணமில்லை

நிலை மாறப்போவதில்லை/ நிழல் தேடும் எண்ணமில்லை’ என்கிற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

பாலசந்தரின் ‘வெள்ளிவிழா’ படத்தில், ஜெயந்திக்குப் பாடியிருப்பார். ‘காதோடு தான் நான் பாடுவேன்/ மனதோடு தான் நான் பேசுவேன்/ விழியோடு தான் விளையாடுவேன்/ உன் மடி மீது தான் கண் மூடுவேன்/

’வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்/ நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்/ உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா/ உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா/ குல விளக்காக நான் வாழ வழி காட்ட வா/ என்றும்

’பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது/ நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது/

எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது/ எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது/ இதில் யார் கேட்டு

என் பாட்டை முடிக்கின்றது/ காதோடு தான் நான் பாடுவேன்’ என்றும் பாடினார். ‘ஹைபிட்ச்’ என்று உச்சஸ்தாயியில் பாடி அதகளப்படுத்தும் ஈஸ்வரி, இங்கே இதில் ‘ஹஸ்கி’ குரலில் குழைந்திருப்பார்.

இயக்குநர் ஸ்ரீதரின் ‘சிவந்த மண்’ படத்தில், 'முள்ளிலாடும் நெஞ்சம்/ கல்லில் ஊறும் கண்கள்/ தங்கத் தட்டில் பொங்கும்/ இன்பத் தேன் போல் பெண்கள் / சாட்டை கொண்டு பாடச்சொன்னால் எங்கே பாடும் பாடல்/ தத்தித் தத்தி ஆடச் சொன்னால் எங்கே ஆடும் கால்கள்’ என்று கெஞ்சியும் கொஞ்சியும் பாடிவிட்டு, ‘துடித்து எழுந்ததே/ கொதித்து சிவந்ததே/ கதை முடிக்க நினைத்ததே/ நில்லுங்கள்/ நிமிர்ந்து நில்லுங்கள்/ சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்’ என்று கம்பீரமும் வெறியும் கலந்தும் நடுவே சாட்டையடிக்கு வலிக்கிற ‘ஹ்ஹஹஹஹஹஹஹஹஹ...’ என்று ஹம்மிங்கும் கொடுத்து நம்மை மிரட்டியிருப்பார் ஈஸ்வரி.

’அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் ‘அடி என்னடி உலகம்’ என்கிற அலட்சியமான குணம் கொண்ட பெண் பாடல். 'செக்கு மீது ஏறிக்கொண்டால் சிங்கப்பூரு போகுமா/ சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா/ கொக்கைப்பார்த்து கற்றுக்கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை/ கொத்தும் போது கொத்திக் கொண்டு போக வேண்டும் நல்லதை/ படாபட்/ அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்’ என்று அவ்வளவு ஸ்டைலாகவும் அலட்சிய த்வனியுடனும் அசத்தியிருப்பார்.

’கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்க வில்லையே/ சீதை அங்கு நின்றிருந்தால்

ராமன் கதை இல்லையே / கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி/ கொல்லும் போது கொல்லு/ தாண்டி செல்லும்போது செல்லடி/ படாபட்’ என்று இந்த உச்சத்தில் பாட எல்.ஆர்.ஈஸ்வரியைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?

’ஹலோ மை டியர் ராங்நம்பர்’, ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ என்று எத்தனையெத்தனையோ பாடல்களைச் சொல்லலாம்.

’இனிமை நிறைந்த உலகம் இருக்கு/ இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பேர்ட்ஸ்/ புது இளமை இருக்கு, வயதும் இருக்கு காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு ஜாலி பேர்ட்ஸ்/ அட மன்னாதி மன்னன்மார்களே/ சும்மா மயங்கி மயங்கி ஆட வாங்களே/ அட மன்னாதி மன்னன்மார்களே/சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே/ பறந்தா மேகங்கள் ஓடினால் வானங்கள்

பாடினால் கானங்கள் ஆடுவோம் வாருங்கள்/ என்று கவியரசரின் வார்த்தைகளுக்கு உயிர் துறக்கும் நிலையில் நாயகிக்கு ஜீவன் கொடுத்துப் பாடியிருப்பார் எல்.ஆர்.ஈஸ்வரி.

கிளப் டான்ஸ் பாடலும் இவருக்குக் கிடைத்தது. காமம் ததும்பும் பாடல்களும் கொடுக்கப்பட்டன. அத்தனையிலும் அசத்துகிற அசாத்தியக் குரல் அவருடையது. இப்படி ஒவ்வொரு பாடல்களுக்குள் ஓராயிரம் சங்கதிகள் வைத்துப் பாடியிருப்பார். திருமணத்துக்கு ஒரு பாடல் பாடினாரென்றால், தமிழகத்து அம்மன் கோயில்களுக்கு நூற்றுக்கணக்கான கேசட்டுகளில் பாடியிருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி.

ஆடி மாதத்திலும் மார்கழி மாதத்திலும் அம்மன் கோயில்களில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள் ஒலிக்காமல் இருக்காது. ஏகப்பட்ட பாடல்கள். கருமாரியம்மனுக்கு காமாட்சியம்மனுக்கு அங்காளபரமேஸ்வரிக்கு காளிகாம்பாள் துர்கைக்கு பன்னாரி அம்மனுக்கு சமயபுரத்தாளுக்கு என எல்லா அம்மன்களுக்கும் பிடித்த பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல்தான் போல!

’கண்ணபுர நாயகியே மாரியம்மா’ என்றால் சிலிர்த்து ஆடுவார்கள் பக்தர்கள். ’தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி’ என்ற பாடலைக் கேட்டு மெய்மறந்து போவோம்.’மாணிக்க வீணை ஏந்தும்’ என்று சொல்லும்போது, அந்தக் கலைவாணி கையில் இருக்கும் வீணையை வாசிக்கத் தொடங்கியிருப்பாளோ என்னவோ!

சிறுவயதில், நானும் என் அக்காவும் தினமும் பள்ளிக்குச் செல்வதற்கு முன்னதாக, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வோம். அதையடுத்து இந்தப் பாடலைப் பாடிவிட்டுத்தான் பள்ளிப்பையை எடுத்துக் கொண்டு கிளம்புவோம். இந்தப் பாடல் என்னை என்னவோ செய்தது. பள்ளிக்கு நான்கு கிலோமீட்டர் நடக்கும்போது, ஒரு சினிமாப் பாடலைப் போல இந்தப் பாடலைப் பாடிக்கொண்டு போனதெல்லாம் நினைவுக்கு வருகிறது. பிறகு வளர்ந்ததும் இந்தப் பாடலைக் கேட்கும்போது இனம்புரியாத மகிழ்ச்சியும் ஏதோவொரு சோகமும் என கலவையான எண்ணங்களை உண்டுபண்ணிவிடும்.

'நெற்றியினில் குங்குமமே நிறைய வேண்டும்/ நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்/

கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்/ பாடும் கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்/ அம்மா கற்பூர நாயகியே கனகவல்லி/ காளி மகமாயி… கருமாரி அம்மா/

’காற்றாகி கனலாகி கடலாகினாய்/ கயிறாகி உயிராகி உடலாகினாய்/ நேற்றாகி இன்றாகி நாளாகினாய்/ நிலமாகி பயிராகி உணவாகினாய்/ தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்/ தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்/ போற்றாத நாளில்லை தாயே உன்னை/ பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை/ அம்மா கற்பூர நாயகியே கனகவல்லி/ காளி மகமாயி கருமாரி அம்மா/ என்று கெஞ்சிப் பிரார்த்திக்கிற அந்தக் குரலுக்கு அந்த மகமாயி அம்மனே சொக்கித்தான் போவாள். நாமெல்லாம் எம்மாத்திரம்?

1939-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி எல்.ஆர்.ஈஸ்வரியம்மாவின் பிறந்தநாள். ஈஸ்வரியம்மாவுக்கு 83 வயது. இன்னும் இன்னும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவோம்!

வாழ்த்துகள் ஈஸ்வரியம்மா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in