`லவ் டுடே’ விமர்சனம்: 2கே கிட்ஸ் காதல் ஜெயித்ததா... சறுக்கியதா?

`லவ் டுடே’ விமர்சனம்: 2கே கிட்ஸ் காதல் ஜெயித்ததா... சறுக்கியதா?

’கோமாளி’ படம் மூலம் 90’ஸ் கிட்ஸை இயக்குநராக கவர்ந்த பிரதீப் ரங்கநாதன் தனது இரண்டாவது படமான ‘லவ் டுடே’வில் 2கே கிட்ஸ்ஸை குறி வைத்திருக்கிறார். குறி தப்பிப் பிழைத்திருக்கிறதா?

உத்தமன் பிரதீப்புக்கும் நிகிதாவுக்கும் இடையில் காதல். சாட்டிங், டேட்டிங் என இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கிறது என நினைத்துக் காதல் வளர்க்கிறார்கள். ஒருநாள் இவர்கள் காதல் இவானாவின் அப்பா சத்யராஜுக்குத் தெரிய வர, ஸ்ட்ரிக்டான தந்தையான சத்யராஜ் இவர்கள் காதலுக்கு ‘ஒன் டே ஃபோன் எக்ஸ்சேஞ்ச்’ மூலமாக செக் வைக்கிறார். பிறகு இவர்கள் காதல் ஒன்று சேர்ந்ததா? அந்த ஒரு நாளில் மாறிய ஃபோனால் என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் ‘லவ் டுடே’.

‘கோமாளி’ படம் மூலம் இயக்குநராக வெற்றி கண்ட பிரதீப் ‘லவ் டுடே’ படத்தில் இயக்குநராக மட்டுமில்லாது நடிகராகவும் அறிமுகமாகி இருக்கிறார். உத்தமன் பிரதீப் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு என்றாலும் பல இடங்களில் மிகை நடிப்பு துருத்திக் கொண்டு வருகிறது. சில காட்சிகளில் தனுஷையும், எஸ்.ஜே.சூர்யாவையும் தன் நடிப்பால் நியாபகப்படுத்துகிறார். நிகிதா கதாபாத்திரத்திற்கு இவானா நியாயம் சேர்த்திருக்கிறார். இவர்கள் தவிர சத்யராஜ், பிரதீப்பின் அம்மா கதாபாத்திரத்தில் ராதிகா, யோகிபாபு, ரவீனா என அனைத்துக் கதாபாத்திரங்களுமே தங்களுடைய இயல்பான நடிப்பால் தங்களுக்கான காட்சிகளில் திரையை நிறைக்கிறார்கள்.

AMRKDR

முன்பு குறும்படமாக வெளியான தனது ‘அப்பா-லாக்’ படத்தையே ‘லவ் டுடே’வாக மாற்றி இருக்கிறார் பிரதீப். இளைஞர்கள் வரவால் நிரம்பி இருக்கிறது அரங்கு. சில பல காட்சிகளைத் தவிர எங்கும் சலிப்புத் தட்டாதக் காட்சிகள், காதலர்களுக்கு இடையில் மொபைல் மாறியதும் வேகமெடுக்கும் திரைக்கதை, இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆண்-பெண் நட்பு சிக்கல், சமூக வலைதளங்களை இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தும் விதம் என இரண்டாம் பாதியில் இளைஞர்களின் கைத்தட்டல்களால் அரங்கம் அதிர்கிறது.

படத்தின் பெரும்பலம் அதன் கலகலப்பூட்டும் காமெடி என்றால் இன்னொரு பக்கம் சில இடங்களில் இரட்டை அர்த்த வசனங்களும் முகம் சுழிக்க வைக்கிறது. மொபைல் மாறிய பிறகு முதல் பாதியில் பிரதீப் இவானாவை மடக்க, இரண்டாம் பாதியில் இவானா பிரதீப்பை சுற்றி வளைக்க என செல்லும் கதையில் கடைசியில் காதல் எந்த காலத்திலும் மாறலாம். ஆனால் காதலுக்கு எந்த காலத்திலும் நம்பிக்கைதான் தேவை என்பதோடு முடித்திருக்கிறார்கள். படத்தில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் பாஸ் ஆகி இருக்கிறார் யுவன்.

பிரதீப்- இவானா காதல் கதையை ஒட்டி அதேபோல பிரதீப்பின் அக்காவாக ரவீனாவுக்கும் அவருக்கு பார்த்திருக்கும் மாப்பிளை யோகிபாபுவுக்கும் இடையில் நடக்கும் ‘மொபைல்’ கதையும் சுவாரஸ்யம். யோகிபாபுவை வைத்து உருவ கேலிகளைத் தவிர்த்து அதையே பாசிட்டிவாக மாற்றி இருப்பது சிறப்பு.

ஆக மொத்தத்தில் ‘கோமாளி’ படம் மூலம் 90’ஸ் கிட்ஸை கவர்ந்த பிரதீப் ‘லவ் டுடே’ மூலம் 2கே கிட்ஸூக்கும் பிடித்த இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்றிருக்கிறார்.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in