யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டுமா என யோசித்தேன்!

’லவ் டுடே’ ரவீனா ரவி பேட்டி
ரவீனா ரவி
ரவீனா ரவி

தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த குரல் நடிப்புக் (Voice artist) கலைஞர்களில் ஒருவர் ஸ்ரீஜா ரவி. சிம்ரன், ரம்பா, தேவயானி உள்ளிட்ட கடந்த தலைமுறை கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்தவர் இவரென்றால்... இவருடைய மகள் ரவீனா ரவியோ தற்காலத் தலைமுறையின் முன்னணிக் கதாநாயகிகளான எமி ஜாக்‌ஷன் தொடங்கி இன்றைய கீர்த்தி ஷெட்டி வரை ஒவ்வொருவருக்கும் பொருந்தக் கூடிய குரல் நடிப்பால் கவர்ந்து வருகிறார்.

அம்மாவைப் போல் குரல் நடிப்புடன் நிறுத்திக் கொள்ளாமல், ரவீனா திரையிலும் கதாநாயகியாக நுழைந்து ‘ஆன்ஸ்கிரீன் ஆக்டிங்’கிலும் கலங்கடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில், குரல் நடிப்பு... திரை நடிப்பு என திரையுலகில் ரவீனாவின் துடிப்பான பயணம் குறித்து காமதேனுவுக்காக அவரிடம் பிரத்யேகமாக உரையாடினோம். அதிலிருந்து...

பெற்றோருடன்...
பெற்றோருடன்...

‘லவ் டுடே’ படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்றபோது தயக்கம் இருந்ததா?

கதையைக் கேட்கும் முன்பு ஒரு சின்ன தயக்கம் இருக்கத்தான் செய்தது. யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டுமா? அப்படியென்னதான் கதை... எனது கதாபாத்திரம் என்ன என்றெல்லாம் குழம்பினேன். ஆனால், இயக்குநர் பிரதீப் கதையை விவரித்த பிறகு செம்மையான கதை, அதில் நமக்குச் செமையான கேரக்டர் என்கிற முடிவுக்கு வந்தேன். அதன்பிறகு எந்தத் தயக்கமும் இல்லை.

மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டோம், இப்போது கதாநாயகனின் அக்கா என்றால் அதுமாதிரி கேரக்டர்களுக்குதான் இதன்பிறகு கூப்பிடுவார்களோ என்கிற பயம் இருக்கவே செய்தது. ஆனால், படத்தில் நான் நடித்துள்ள திவ்யா கேரக்டரின் ‘பாசிட்டிவிட்டி’ யும் படத்தின் தாறுமாறான வெற்றியும் எனது பயத்தை தவிடுபொடியாக்கிவிட்டன. இப்போது ‘வட்டார வழக்கு’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன். செழியன் சார் இயக்கிய ‘டூலெட்’ படத்தில் நடித்த சந்தோஷ்தான் ஹீரோ. ராமச்சந்திரன் இயக்குநராக அறிமுகமாகிறார். மதுரை கதைக்களம். இளையராஜா சார் இசையமைக்கிறார்.

படம் பார்த்த ரசிகர்கள் ‘திவ்யா’ கதாபாத்திரம் பற்றி என்ன சொன்னார்கள்?

நானும் பல திரையரங்குகளுக்கு விசிட் செய்தேன்.. எங்கே போனாலும் இளைஞர்கள், இளம் பெண்கள் கூட்டம்தான். “சான்ஸே இல்ல... உங்க கேரக்டர் மைண்ட விட்டு நகரல. நம்ம ஊர்ல நிறையப்பேருக்கு கருப்பா இருக்கோமேங்கிற தாழ்வுமனப்பான்மை இருக்கு. குண்டா இருக்கிறதைப் பார்த்து ரோட்ல போறவங்க வரவங்க கிண்டல் பன்றதைப் போலவே வீட்ல இருக்கவங்களும் பண்றாங்க. இதையெல்லாம் உங்க கேரக்டர் உடைச்சுப் போட்டுருச்சு மேடம்... தோற்றத்தையோ நிறத்தையோ பார்க்காமல் ஓகே சொல்ற பெண்களும் இருக்காங்ககிற உண்மையை உங்கள் கேரக்டர் சொல்லிடுச்சு. எனக்கு இதுபோதும் மேடம்” என்று சொல்லிவிட்டுப்போனார் ஒரு ரசிகர். அதை மறக்கவே முடியாது.

மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படத்திலும் நீங்கள் நடிப்பதாகச் செய்தி வெளியானதே..?

ஆமாம்! அதில் ஃபகத் ஃபாசில் ஜோடியாக நடித்திருக்கிறேன். அதுவொரு அரசியல் கதை. எனது கதாபாத்திரம் பற்றி இப்போதைக்கு நான் எதுவும் சொல்லக்கூடாது.

குரல் நடிப்புக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் இப்போது கிடைக்கிறதா? அது கிடைக்காமல்தான் நீங்கள் நடிக்க வந்தீர்களா?

உங்களைப் போன்ற பத்திரிகைகளும் ஊடகங்களும் எழுதி எழுதித்தான் இப்போது இந்த அளவுக்காவது எங்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அம்மாவுடைய தலைமுறைக் கலைஞர்கள் சாதித்துள்ளது எங்களை விட அதிகம். ஆனால், அப்போது அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இன்றைக்கு சமூக வலைதளங்கள் மூலம் இன்னும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறோம். எங்களுடைய திறமையைப் பார்த்து சமூக வலைதளங்களில் எங்களைப் பின் தொடர்பவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.

நான் பேசும் குறிப்பிட்ட வசனத்தையெல்லாம் நியாபகம் வைத்துச் சொல்கிறார்கள். மாநில அரசு விருதுகள் சாத்தியமாகிவிட்டன. அதேபோல் தேசிய விருதிலும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் பிரிவு சேர்க்கப்பட வேண்டும். அதற்காக நீண்ட காலமாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம், தென்னிந்தியாவில் இருநூற்றுக்கும் அதிகமான விருது விழாக்கள் நடக்கின்றன. அதில் 5 சதவீத விழாக்களில்கூட வாய்ஸ் ஆர்டிஸ்டிக்கு விருது கொடுப்பதில்லை. இதுவும் மாற வேண்டும். நடிப்புக்கான வாய்ப்புகள் என்னைத் தேடி வந்ததால், அது எனக்கு நெருக்கமான துறையாகவும் இருந்ததால் நடிக்க வந்தேன். நான் நடித்து எனக்கு நானே டப்பிங் பேசுவது ஒரு மகிழ்ச்சியான அனுபவம்.

மூத்த வாய்ஸ் ஆர்டிஸ்ட்டான சுரேந்தர், “மோகனுக்கு நீண்டகாலம் குரல் கொடுத்தேன். ஆனால், அவர் ஒருமுறைகூட என்னைச் சந்தித்தும் இல்லை... பாராட்டியதும் இல்லை” என்று மனம் நொந்து ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். நீங்கள் இத்தனை கதாநாயகிகளுக்கு குரல் கொடுக்கிறீர்கள். அவர்கள் உங்களைப் பாராட்டியதுண்டா?

கிட்டத்தட்ட எல்லோரும் என்று சொல்லுவேன்.. குறிப்பாக, எமி ஜாக்சனைச் சொல்லவேண்டும். அவர் தொலைக்காட்சிகளுக்கு கொடுத்த எல்லா பேட்டிகளிலும் என்னைப் பற்றி எனது குரல் நடிப்பு பற்றி சொல்லாமல் இருந்ததில்லை. அதுமட்டுமல்ல; ‘ஐ’ படம் வெளியானபோது, “முதல் நாள் முதல் காட்சிக்கு உங்களுடைய அம்மா அப்பாவைக் கூட்டிக்கொண்டு வாருங்கள். அவர்களை நான் சந்திக்க வேண்டும்” என்று சொல்லி டிக்கெட் வாங்கி அனுப்பியிருந்தார்.

சரி, ஒரு மரியாதைக்கு அனுப்புகிறார் என்று பார்த்தால்... எமி அவரது அம்மா அப்பாவை உட்காரவைத்துவிட்டு, அவர்களுக்கு அருகில் எனது அப்பாவை உட்கார வைத்து, என் அருகில் அவர் அமர்ந்து படம் பார்த்தார். முத்தங்களைப் பரிசாகக் கொடுத்தார். அடுத்து மடோனா செபாஸ்டியன், “எனது எல்லா படங்களுக்கும் நீங்கள்தான் பேச வேண்டும்” என்று அவர் நடித்த தெலுங்குப் படங்களுக்கும் என்னைப் பேச வைத்தார். இப்படி நிறைய...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in