நடிகை பாலியல் வன்கொடுமை புகார்: நடிகருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

நடிகை பாலியல் வன்கொடுமை புகார்: நடிகருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

மலையாள நடிகர் மீது இளம் நடிகை கொடுத்த பாலியல் புகாரை அடுத்து அவருக்கு எதிராக போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மலையாள நடிகர் விஜய் பாபு. இவர் ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். ’பெருச்சாழி’, ’ஆடு’, ’முத்துக்கவு’, ’ஆடு2’, ஓடிடியில் வெளியான ’சுஃபியும் சுஜாதாயும்’ ’ஹோம்’, உட்பட சில மலையாளப் படங்களை தயாரித்துள்ளார். இவர் மீது, கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம் மலையாள நடிகை ஒருவர், கடந்த 22-ம் தேதி போலீஸில் புகார் கூறியுள்ளார்.

அதில், விஜய் பாபு எனக்கு சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாகக் கூறியிருந்தார். பின்னர் கொச்சியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கடந்த மார்ச் 13-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 14-ம் தேதி வரை, பலமுறை மயக்க மருந்துகளைக் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்தார். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

நடிகர் விஜய் பாபு மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரைத் தேடினர். இதற்கிடையே பேஸ்புக் லைவ்வில் தோன்றிய விஜய் பாபு, தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றும் அந்த இளம் நடிகையுடன் நடந்த சாட்-களையும் வெளியிட்டார். அப்போது அந்த நடிகையின் பெயரையும் அவர் வெளிப்படுத்திவிட்டார். இதற்காக அவர் மீது மற்றொரு வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாகிவிட்ட அவரை தேடி வரும் போலீஸார், கோவா வழியாக அவர் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதால், அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கிடையே நடிகர் விஜய் பாபு முன் ஜாமீன் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.