
இறப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக என்னை தொலைபேசியில் அழைத்தார் என்றும் இந்த உலகத்தில் மிகப்பெரிய குற்றவாளி மனஅழுத்தம் எனவும் நடிகர் ஷாந்தனு கூறியிருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த இவர் கடந்த இரண்டு வருடங்களாக நெசப்பாக்கம் பகுதியில் நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார். நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள தனியார் எடிட்டிங் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ராமகிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து விருகம்பாக்கம் போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் உயிரிழந்த ராமகிருஷ்ணன் இறப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தன்னை தொலைபேசியில் அழைத்திருந்ததாக நடிகர் ஷாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உயிரிழந்த உதவி இயக்குநர் குறித்து பதிவிட்டுள்ளார். மேலும், "ராமகிருஷ்ணன் மிகச் திறமையானவர், எந்தவித கெட்டப்பழக்கம் இல்லாதவர். இந்த உலகத்தில் தற்போதைக்கு மிகப்பெரிய குற்றவாளி மன அழுத்தம்தான். உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் யாரிடமாவது மனம் விட்டு பேசுங்கள். தனியாக இருந்து விடாதீர்கள். அது உங்களை தின்றுவிடும். என்ன சார் இந்த உலகத்தில் இருக்கிறது. அவ்வளவு வெறுப்பு, எதிர்மறைகள், சந்தோஷமாக இருங்கள், அன்பை பரப்புங்கள்" என கேட்டுக்கொண்டுள்ளார்.