
'லியோ’ படம் வெளியான பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ள பேட்டியில் கதையின் ஃபிளாஷ்பேக் போர்ஷன் குறித்து அவர் கூறியுள்ள விஷயத்தை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், ‘லியோ’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. முதல் பாதி விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதி கலவையான விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.
இதை ஒத்துக் கொண்ட லோகேஷ் கனகராஜ் படத்தில் இடம்பெற்றுள்ள ஃபிளாஷ்பேக் போர்ஷன் பொய்யாகக் கூட இருக்கலாம் என்று அவர் பேசியிருப்பது சமீபத்தில் நெட்டிசன்கள் மத்தியில் கேலி பொருளாகியுள்ளது.
அந்தப் பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது, ”லியோவின் உண்மையான கதையை பார்த்திபன் தன் கண்ணோட்டத்தில் சொல்லவே இல்லை. அது ஹிருதயராஜ் என்ற மூன்றாவது நபர் சொன்ன கதையாகத்தான் இருக்கும்.
ஹிருதயராஜ் சொன்ன கதை முழுக்க முழுக்க அவரது கண்ணோட்டத்தில் இருந்ததால் அதை அவர் குறிப்பிடும்படியாக, ‘ஒவ்வொருவருக்கும் ஒரு உண்மையும் கண்ணோட்டமும் இருக்கும்’ என்ற வசனம் இருக்கும். ஆனால், எடிட்டர் ஃபிலோமின் ராஜூடன் நடந்த விவாதத்திற்குப் பிறகு, அந்த டயலாக்கை நீக்கிவிட்டேன். உண்மையில் ஃபிளாஷ்பேக் காட்சிகள் 45 நிமிடங்கள் இருந்தன. ஆனால் அவை படத்தில் வரவில்லை” எனக் கூறியுள்ளார்.
இதைக் குறிப்பிட்டுதான் ரசிகர்கள் அவரை கேலி செய்து வருகின்றனர். ’‘லியோ’ ஃபிளாஷ்பேக் பொய் என்றால், உண்மைக் கதையை எப்போது சொல்வீர்கள்? அப்படி என்றால் ‘லியோ’ படமும் பொய்யா?’ எனச் சொல்லி #LeoScam என்ற ஹேஷ்டேக்கில் லோகேஷை கேலி செய்து வருகின்றனர்.