‘விக்ரம்’ கமலின் அசத்தல் வீடியோ: விரைவில் வெளியிடும் லோகேஷ் கனகராஜ்!

‘விக்ரம்’ கமலின் அசத்தல் வீடியோ: விரைவில் வெளியிடும் லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்த 'விக்ரம்' திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த மகிழ்ச்சியில் படத்தின் மொத்த யூனிட்டும் திளைத்துக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பலரும் ஊடகங்களில் பகிர்ந்துவருகிறார்கள். அந்த வகையில் கமலின் வீடியோ ஒன்றின் வெளியீடு குறித்து லோகேஷ் கனகராஜ் ஒரு சுவாரசியத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

தனது தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் இன்டர்நேஷனல்’ மூலம் இப்படத்தைத் தயாரித்திருக்கும் கமல், நீண்டநாட்களுக்குப் பின்னர் கிடைத்த இந்த மெகா வெற்றியைக் கொண்டாடும் வகையில் பரிசுகளையும் அன்பளிப்புகளையும் வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்குக் கார், உதவி இயக்குநர்களுக்கு பைக்குகள் எனப் பரிசளித்த கமல், சிறப்புத் தோற்றத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு விலை மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்சையும் அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்.

‘விக்ரம்’ வெளியாவதற்கு முன்பும், வெளியீட்டுக்குப் பின்னரும் தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடிவரும் லோகேஷ் கனகராஜ், தனது தரப்பில் படம் குறித்த பல தகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்துகொள்கிறார். அந்த வகையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் #AskDirLokesh என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேள்விகள் கேட்கலாம் என அறிவித்திருந்தார். அதிலிருந்து சுவாரசியமான சில கேள்வி பதில்களை இங்கே பார்க்கலாம்.

‘கைதி' படத்தையும் 'விக்ரம்' படத்தில் இணைத்து கொண்டுவந்தீர்கள். 'கைதி' படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்த அன்பு கதாபாத்திரம் இறந்துவிடும். ஆனால், எப்படி இந்தப் படத்தில் அவர் உயிருடன் வருகிறார்?

அர்ஜுன் தாஸின் கதாபாத்திரமான அன்புவின் தாடை மட்டுமே 'கைதி' படத்தில் உடைக்கப்பட்டிருக்கும். அதற்கான தையல் குறியையும் அர்ஜுன் தாஸ் கழுத்தில் நாங்கள் 'விக்ரம்' படத்தில் காட்டியுள்ளோம். இது பற்றிய விரிவான காட்சியமைப்பு 'கைதி2' திரைப்படத்தில் இடம்பெறும்.

‘விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் மறக்க முடியாத அனுபவம் எது?

நிறைய இருக்கிறது. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அவர் முகத்தில் ரத்தக் காயத்துக்கான மேக்கப் நான் என் கைப்பட போட்டதைச் சொல்வேன்.

இப்போதுள்ள இளம் இயக்குநர்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன?

உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதைப் பின்தொடருங்கள். நிச்சயம் அது உங்களை ஏமாற்றாது.

‘விக்ரம்' படத்திற்காக கமல்ஹாசன் புஷ்-அப் எடுக்கும் வீடியோவை எப்போது வெளியிடுவீர்கள்?

படத்தின் இறுதிக் காட்சிக்காக கமலிடம் புஷ்-அப் எடுக்கச் சொல்லிக் கேட்டேன். அப்போதுதான் கொரோனாவில் இருந்து அவர் குணமாகி வந்திருந்தந்தார். நான் கேட்டதும் கொஞ்சம் கூட யோசிக்காமல் இரவில் புஷ்-அப் செய்தார். அவர் வயதுக்கு இத்தகைய கடின உழைப்பைப் பார்த்த பிறகு நாமெல்லாம் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்றுதான் தோன்றும். அந்த வீடியோ இந்த மாதம் 26 அன்று நிச்சயம் வெளியாகும்.

முழுக்க முழுக்க காதல் கதை கொண்ட படம் இயக்குவீர்களா?

ஆக்‌ஷன் படங்கள்தான் என்னுடைய விருப்பம். அதிலுமே காதல் மிகக் குறைவாகத்தான் வைத்திருப்பேன். அதனால், நீங்கள் எதிர்பார்க்கும்படியான முழுக்க முழுக்க காதல் கதை எனக்கு கஷ்டம் ப்ரோ!

உங்கள் படங்களில் டார்க் காமெடி நன்றாகவே வேலை செய்கிறது. முழு நீளப் படமாக எப்போது அதை இயக்குவீர்கள்?

எனக்கும் அது மிகவும் பிடிக்கும். நேரம் கைகூடி வரும்போது, நிச்சயம் முழு நீளப் படத்தை இயக்குவேன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in