‘விக்ரம் படத்தில் நானும் ஒரு நாயகி!’ - பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட லிசி

‘விக்ரம் படத்தில் நானும் ஒரு நாயகி!’ - பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட லிசி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் ‘விக்ரம்'. ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா மற்றும் படத்தின் முன்னோட்ட காட்சித் திரையிடல் இன்று மாலை நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்குகிறார்.

1986-ல் கமல்ஹாசன் மற்றும் சுஜாதா திரைக்கதை எழுதி ராஜசேகர் இயக்கிய திரைப்படம் 'விக்ரம்'. இந்தப் படத்தின் நாயகிகளில் ஒருவராக நடிகை லிசி நடித்திருந்தார்.

தற்போது புதிய ‘விக்ரம்’ வெளிவரவிருக்கும் நிலையில், பழைய 'விக்ரம்' படத்தில் நடித்திருந்த புகைப்படத்தையும் தற்போது கமலுடன் எடுத்திருக்கும் படத்தையும் பகிர்ந்து, கமலுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை லிசி எழுதியிருக்கிறார்.

'அப்போதும் இப்போதும்' என ஆரம்பிக்கும் அந்தப் பதிவில், 'பல வருடங்களுக்கு பிறகு கமல் சார் 'விக்ரம்' என தன்னுடைய மற்றொரு படத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறார். முந்தைய 'விக்ரம்' படத்தின் கதையைவிட இந்தக் கதை முற்றிலும் வேறுபட்டது என கேள்விப்பட்டேன். ஒரிஜினல் 'விக்ரம்' படத்தின் கதாநாயகிகளில் நானும் ஒருத்தி. இப்போதைய 'விக்ரம்' படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு வரவில்லை என்று நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். இருந்தாலும் என்னுடைய லிசி லக்ஷ்மி ஸ்டுடியோவில்தான் புதிய 'விக்ரம்' படத்துக்கான வாய்ஸ் ரெக்கார்டிங் நடைபெற்றது என்பதில் எனக்கு மிகவும் பெருமை.

கமல் சாரும் அவருடைய புதிய 'விக்ரம்' படத்தின் அணியும் என்னுடைய ஸ்டுடியோவிற்கு வந்ததும் அவர்களை நான் சந்தித்ததும் எனக்குப் பெருமை. ஒரிஜினல் 'விக்ரம்' திரைப்படம் என்ன ஒரு அனுபவம் எனக்கு! என்னுடைய 17-வது பிறந்த நாளை 'விக்ரம்' படத்தின் செட்டில்தான் கேக் வெட்டிக்கொண்டாடினேன். இந்தியாவின் முதல் பாண்ட் திரைப்படம் அது. படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமான கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்தேன். மிகவும் திறமையான அணியுடன் நான் பணிபுரிந்தேன். பள்ளிக்குச் செல்லும் 17 வயதில் எனக்கு அந்தப் படம் தீவிரமானதாகவும் அதே சமயம் சந்தோஷமானதாகவும் ஒரு மேஜிக்கலான அனுபவத்தைக் கொடுத்தது. மறக்க முடியாத அன்பவம் அது!

இப்போதைய 'விக்ரம்' படத்துக்கும், அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!' எனக் குறிப்பிட்டிருக்கிறார் லிசி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in