யார் இந்த தாதா சாகேப் பால்கே?

ரஜினிகாந்த் விதந்தோதிய ‘இந்திய சினிமாவின் தந்தை’!
தாதா சாகேப் பால்கே
தாதா சாகேப் பால்கே

டெல்லியில் நடைபெற்ற விழாவில், நடிகர் ரஜினிகாந்த்தின் திரையுலக சேவைகளை பாராட்டி அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது, இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாகும். தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுவதை நினைத்து தான் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

“தாதாசாகேப் பால்கே விருது பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. விருது கிடைக்கும்னு எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் கே.பி. சார் இல்லாதது வருத்தம் அளிக்கிறது” என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்த் பெருமைப்படும் அளவுக்கு அவருக்கு அளிக்கப்படும் விருதுக்கு சொந்தக்காரரான தாதா சாகேப் பால்கே யார் என்று பார்ப்போம்.

தாதா சாகேப் பால்கே
தாதா சாகேப் பால்கே

நாசிக் நகருக்கு அருகில் உள்ள திரும்பகேஸ்வர்(Trimbakeshwar) எனும் ஊரில் 1870-ம் ஆண்டு பிறந்தவர், தாதாசாகேப் பால்கே. மும்பையில் பள்ளிப் படிப்பையும், வடோதராவில் கல்லூரிப் படிப்பையும் முடித்த பால்கே, சூரத் நகரில் ஒரு புகைப்படக்காரராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். குஜராத்தின் சூரத் நகரில் மனைவி மற்றும் மகனுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். 1899-ல், சூரத் நகரில் பரவிய பிளேக் நோயில் பால்கேவின் மனைவியும் மகனும் உயிரிழக்க, சோகத்துடன் மும்பைக்கே திரும்பியுள்ளார்.

மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்த தாதா சாகேப் பால்கேவுக்கு, 1902-ம் ஆண்டில் அவரைவிட 19 வயது இளையவரான காவேரிபாய் என்பவரை குடும்பத்தினர் மணமுடித்து வைத்துள்ளனர். தனக்கு விருப்பம் இல்லாதபோதிலும், மற்றவர்களின் வற்புறுத்தலால் இந்த திருமணத்துக்கு சம்மதித்துள்ளார் பால்கே. மராத்திய வழக்கப்படி திருமணத்துக்கு பிறகு காவேரிபாயின் பெயர் சரஸ்வதிபாய் என மாற்றப்பட்டுள்ளது. திருமணத்துக்கு பின் அகழ்வாராய்ச்சி மையத்தில் வேலை பார்த்துவந்த பால்கே, பின்னர் 1906-ல் மேனாவலி என்ற நகரில், ‘பால்கேஸ் ஆர்ட் அண்ட் பிரிண்டிங் வொர்க்ஸ்’ என்ற அச்சகத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். பின்னர். போதிய லாபம் கிடைக்காததால் அதையும் மூடிவிட்டார்.

1910-ம் ஆண்டு, ஈஸ்டர் தினத்தன்று பால்கேவின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அன்றைய தினம் மும்பையில் உள்ள ‘அமெரிக்கா இந்தியா சினிமாட்டோகிராபி’ என்ற தியேட்டரில் இயேசுநாதரின் வாழ்க்கையை மையப்படுத்திய வெளிநாட்டு குறும்படம் ஒன்று திரையிடப்பட்டிருந்தது. இந்தப் படத்தைக் காண தனது மனைவி சரஸ்வதிபாயை அழைத்துச் சென்றுள்ளார் பால்கே. தியேட்டரில் தன் கண் எதிரே மனிதர்களின் பிம்பங்கள் நகர்வதையும், ஓடுவதையும் மெய்மறந்து பார்த்துள்ளார் சரஸ்வதிபாய். படம் முடிந்த பிறகு, அந்த தியேட்டரின் புரொஜக்‌ஷன் ரூமுக்குள் காவேரிபாயை அழைத்துச் சென்ற பால்கே, படம் எப்படி திரையில் தெரிந்தது என்பதை விளக்கியுள்ளார். இதைக் கேட்டு சரஸ்வதிபாய் வாய்பிளக்க, “இதுக்கே இப்படி ஆச்சரியப்பட்டா எப்படி? இதே போல ஒரு படத்தை நானும் எடுக்கப்போறேன்” என்று தனது கனவை வெளிப்படுத்தி உள்ளார்.

இளம் வயது பால்கே
இளம் வயது பால்கே

பால்கேவின் இந்த முடிவை அவரது மனைவி வரவேற்றாலும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர். இதனால் குடும்பத்தின் செல்வம் கரைந்து போய்விடும் என்று எச்சரித்துள்ளனர். ஆனால், சினிமா எடுக்கும் தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார் பால்கே. இருப்பினும் அதைச் செயல்படுத்த பணம் வேண்டுமே...

இந்த நேரத்தில் அவருக்கு உதவ சரஸ்வதிபாய் முன்வந்தார். பிறந்த வீட்டில் இருந்து தான் கொண்டுவந்த நகைகள் அனைத்தையும் பால்கேவிடம் கொடுத்த அவர், அதைக் கொண்டு ஐரோப்பா செல்லுமாறு கூறியுள்ளார். மனைவியின் நகையை விற்றுக் கிடைத்த பணத்தில் ஜெர்மனி சென்ற பால்கே, கேமரா மற்றும் படப்பிடிப்புக்கு தேவையான கருவிகளை வாங்கியுள்ளார். பின்னர் லண்டன் சென்றவர், திரைப்படங்களை எடுப்பது பற்றிய நுணுக்கங்களை கற்றுத் தெரிந்துள்ளார்.

சினிமா பற்றிய நுணுக்கங்களை கற்றபோதிலும், அதற்குத் தேவையான கருவிகளை வாங்கி வந்தபோதிலும் தாதா சாகேப் பால்கேவின் திரைப்படக் கனவு அத்தனை எளிதில் நனவாகவில்லை. படம் தயாரிக்க போதுமான பணம் கிடைக்காததால் மிகவும் கஷ்டப்பட்டார் பால்கே. கடைசியில் தன் சொத்துகளையும், மனைவின் சொத்துகளையும் விற்று சினிமா எடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார்.

அடுத்தகட்டமாக நடிகர்கள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டது. போட்டோ எடுத்தாலே ஆயுள் குறையும் என்று நம்பிக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில், சினிமாவில் நடிக்க யார்தான் முன்வருவார்கள். நாடகக் கலைஞர்கள் பலரை பால்கே அணுகியும், யாரும் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே நீண்ட வற்புறுத்தல்களுக்கு பிறகு நடிக்கவைப்பது என முடிவெடுத்தார்.

நடிகர்கள் கிடைப்பதற்கே இத்தனை பாடென்றால், கதாநாயகி கிடைக்க அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கட்டத்தில் அவரது துயரங்களைப் பார்த்த சரஸ்வதி பாய், தானே படத்தின் நாயகியாக நடிக்கவும் முன்வந்துள்ளார். ஏற்கெனவே படப்பிடிப்புக்கு வரும் கலைஞர்களுக்கு சரஸ்வதிபாய்தான் சமைத்துப் போட வேண்டும் என்பதால், அவரை நாயகியாக்க யோசித்தார் பால்கே. கடைசியில், மும்பை ஓட்டல் ஒன்றில் வெயிட்டராக பணியாற்றி வந்த அன்னா சலுன்கே(Anna Salunkhe) என்ற பெண்ணை வற்புறுத்தி நாயகியாக நடிக்க சம்மதிக்க வைத்தார்.

இப்படியாக பல்வேறு தடைகளைக் கடந்து 1913-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி மும்பையில் உள்ள ஒலிம்பியா தியேட்டரில் இந்தியாவின் முதல் திரைப்படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’, பிரபலங்கள் பார்ப்பதற்காக திரையிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு மே மாதம் 3-ம் தேதி மும்பையில் உள்ள ’காரனேஷன் சினிமா’ என்ற அரங்கில் இப்படம் பொதுமக்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. ’இந்திய சினிமாவின் தந்தை’ என்ற புகழையும் தாதா சாகேப் பால்கேவுக்கு பெற்றுத்தந்தது. அன்று ஆரம்பித்த இந்திய சினிமாவின் பயணம், இன்று ஜெட் வேகமெடுத்து ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவு வளர்ந்துகொண்டு இருக்கிறது.

முந்தைய பால்கே விருதாளர் அமிதாப் பச்சன்
முந்தைய பால்கே விருதாளர் அமிதாப் பச்சன்

இதற்கு முன்னதாக இயக்குநர்கள் சத்யஜித் ரே, அடூர் கோபாலகிருஷ்ணன், கே.பாலச்சந்தர், நடிகர்கள் சிவாஜி கணேசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட இந்திய திரையுலகின் உச்ச பிரபலங்கள் தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் ரஜினிகாந்தும் சேர்ந்துள்ளார்.

ரூ.10 லட்சம் வெகுமதி, ’ஸ்வர்ண கமல்’ என்னும் தங்கத் தாமரை பதக்கம் மற்றும் சால்வை அணிவிப்பு உள்ளிட்ட இதர மேடை மரியாதைகளை விருதாளர் பெறுவார். ரஜினிகாந்த் தற்போது பெறுவது 2019-ம் ஆண்டுக்கான பால்கே விருது. 2018-ம் ஆண்டின் தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர், ரஜினியின் ஆருயிர் நண்பரான அமிதாப் பச்சன்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in