‘சம்சாரம் அது மின்சாரம்’: ஓடாத கதையை மீண்டும் எடுத்து ஓடவைத்த விசு!

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்

சினிமாவில் எது வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். அதேபோல் எப்போது வேண்டுமானாலும் தோற்கலாம். முதல் படம் மிகப்பெரிய ஹிட்டாகியிருக்கும். இரண்டாவது படம் அதற்கு நேர்மாறாக இருக்கும். ஆனால், ஒரு படத்தை எடுத்துவிட்டு, அது படுதோல்வியாக இருக்க, அந்தக் கதையை மீண்டும் யாராவது எடுப்பார்களா? அப்படி எடுத்தால் அந்தப் படம் ஜெயிக்குமா? ‘என்னப்பா... அதே கதையை அப்படியே எடுத்திருக்காங்க’ என்று ரசிகர்கள் சொல்லமாட்டார்களா? இவை அனைத்தையும் கடந்து வெற்றி பெற்றதுதான் ‘சம்சாரம் அது மின்சாரம்’.

ஏவி.எம். தயாரிப்பில், விசு இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சநஞ்சமல்ல. படத்தின் பல வசனங்களை இன்றைக்கும் பலருக்கும் மனப்பாடமாகத் தெரியும். ஜனாதிபதியின் ‘தங்கத்தாமரை’ விருது கிடைத்தது இந்தப்படத்துக்கு!

அதுமட்டுமா? லட்சுமி, ரகுவரன், சந்திரசேகர், மாதுரி, கமலா காமேஷ், கிஷ்மு, இளவரசி, திலீப், மனோரமா, டெல்லி கணேஷ், காஜா ஷெரீப் இவர்களுடன் விசுவும் நடித்த இந்தப்படம் 22 முதல் 25 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், எல்லா சென்டர்களிலும் 100 நாட்களைக் கடந்து, கோடிக்கணக்கில் வசூலைக் குவித்தது ‘சம்சாரம் அது மின்சாரம்’.

இங்கே இரண்டு விஷயங்கள். இயக்குநர் விசு, ஆரம்பகாலத்தில் நாடக இயக்குநராகவும் நடிகராகவும் இருந்து பல நாடகங்களை அரங்கேற்றினார். இந்தப் பக்கம் ஒய்.ஜி.பார்த்தசாரதி, ஒய்.ஜி. மகேந்திரன், அந்தப் பக்கம் எஸ்.வி.சேகர், காத்தாடி ராமமூர்த்தி என்றும் தொடர்புகள் உண்டு. அவருடைய பல நாடகங்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. அப்படிப் படமாக்கப்பட்டு வெற்றியும் அடைந்திருக்கின்றன. தோல்வியையும் தழுவியிருக்கின்றன.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராகவும் வசனகர்த்தாவகவும் பணியாற்றிய விசுவுக்கு, திரையுலகிலும் பல தொடர்புகள் கிடைத்தன. ஏவி.எம். தங்களின் படங்களுக்கு விசுவை அழைத்து, கதையில் திருத்தங்களும் சென்டிமென்ட் காட்சிகளும் காமெடிக் காட்சிகளும் சேர்க்கச் சொல்லி வாய்ப்புகளைக் கொடுத்தது. சில படங்களுக்கு, விசு கதையும் வசனமும் எழுதிக் கொடுத்தார். சில படங்களுக்கு வசனம் மட்டும் எழுதிக் கொடுத்தார்.

ஒருநாள்... ‘’என்ன சார்... ஒவ்வொரு படத்துலயும் ஏதோவொரு வகைல என்னைப் பயன்படுத்திக்கிறீங்க. கதை டிஸ்கஷன்ல இருக்கேன். கதை பண்ணிக் கொடுக்கறேன். டயலாக்கும் எழுதிக் கொடுக்கறேன். ஆனா, எனக்கு ஒரு படம் டைரக்ட் பண்ண சான்ஸ் மட்டும் கொடுக்கமாட்டேங்கறீங்களே. ஏவி.எம். கம்பெனில ஒரு படம் டைரக்ட் பண்ணணும்னு எனக்கும் ஆசை இருக்காதா என்ன?’’ என்று விசு கேட்டார். இதை, பல முறை கேட்டிருக்கிறார்.

அப்போதெல்லாம் ஏவி.எம். படங்களென்றால் எஸ்.பி.முத்துராமன் தான் இயக்குவார். அதற்கு முன், ஏ.சி.திருலோகசந்தர், கிருஷ்ணன் - பஞ்சு, ஏ.பீம்சிங் இயக்கினார்கள். இந்தக் கட்டத்தில், முதன் முதலாக கே.பாக்யராஜ் இயக்கத்தில் ‘முந்தானை முடிச்சு’ படம் பண்ணியது ஏவி.எம். நிறுவனம். அதுவரை ஆஸ்தான இயக்குநர்களே இயக்கிக் கொண்டிருந்தார்கள். இதையே சாக்காக வைத்து விசு மீண்டும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஏவி.எம்.சரவணனும் சம்மதித்து, கதை சொல்லச் சொன்னார்.

விசுவும் கதைகள் சொன்னார். ஆனால், ஒவ்வொரு கதையும் பிடித்திருந்தாலும், ‘’இன்னும் எதுனா இருந்தா நல்லாருக்கும் விசு சார்’’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார் ஏவி.எம்.சரவணன். ஒவ்வொரு கதையைச் சொல்லும்போதும், ‘’இன்னும் இன்னும்’’ என்று எதிர்பார்த்தது நிறுவனம். கடைசியாக ஒரு கதையைச் சொன்னார். ‘’ரொம்பப் பிரமாதம். இதையே பண்ணிடலாம்’’ என்றார் ஏவி.எம். சரவணன்.

‘’ஆனா இதுல ஒரு சின்ன விஷயம் இருக்கு. இந்தக் கதை என் கதைதான். நாடகமா வந்த கதைதான். நாடகத்தைப் பார்க்க வந்த இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சார், மேடைலயே பணம் கொடுத்து, சினிமாவா எடுக்கறதுக்கான உரிமைல கையெழுத்து வாங்கிட்டாரு’’ என்றார் விசு. இதைக் கேட்டதும். ‘’அடடா... அவர் கதையோட ரைட்ஸை வாங்கிட்டாரா?’’ என்று ஏவி.எம்.சரவணன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, விசு அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டார். ‘’அந்தக் கதை, படமாவும் வந்திருச்சு சார்’’ என்று விசு சொல்ல, அதிர்ந்து போனார் ஏவி.எம்.சரவணன்.

மீண்டும் விசுவே தொடர்ந்தார். ‘’ஜெமினி சார், செளகார் மேடம், நாகேஷ், சிஐடி சகுந்தலான்னு பலரும் நடிச்ச அந்தப் படத்தை ஒய்.ஜி.மகேந்திரன் டைரக்ட் பண்ணினார். இதெல்லாம் 1975-ம் வருஷத்துலயே நடந்து, சினிமாவாவும் வந்திருச்சு. அந்தப் படத்தோட பேரு ‘உறவுக்கு கை கொடுப்போம்’! ’’ என்று விசு சொல்ல, ‘’அந்தப் படத்தைப் பாத்தேனே நான். நிறைய மாற்றங்கள் பண்ணி எடுத்திருக்காங்கன்னு நினைக்கிறேன். ஆனா, நீங்க சொன்ன கதை ரொம்பவே நல்லாருக்கு. அந்தப் படம்தான் இதுன்னு யாராலயும் சொல்லமுடியாது. தவிர, அந்தப் படம் பெருசா போகலை. இப்ப என்ன பண்ணலாம்?’’ என்று ஏவி.எம். சரவணன் விசுவிடம் கேட்டார்.

அதன்படி, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் சென்று, கதையின் உரிமையைக் கேட்டார்கள். அதற்கு உரிய பணமும் தருவதாகச் சொன்னார்கள். இதைக்கேட்ட கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், உடனே கையெழுத்துப் போட்டு, கதையைக் கொடுத்தார். ‘’உன் கதையை கொடுத்துட்டு, மறுபடியும் எங்கிட்டயே அதைக் கேட்டு வாங்கறியே. என்ன செய்யப்போறே?’’ என்று கே.எஸ்.ஜி. கேட்டார். அப்படி இயக்குநர் விசு செய்த ஜாலம் தான், ‘சம்சாரம் அது மின்சாரம்’.

ஜெமினி, செளகார் ஜானகி என்றில்லாமல் வேறு இளம் நடிகர்கள் நடித்திருந்தால் ‘உறவுக்கு கை கொடுப்போம்’ எடுபட்டிருக்குமோ என்னவோ? ஆனால், ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில், லட்சுமி, மனோரமா, கிஷ்மு, காஜா ஷெரீப், விசு என பலரும் காமெடியில் அதகளம் பண்ணினார்கள். ரகுவரன், சந்திரசேகர், டெல்லிகணேஷ், கமலா காமேஷ், இளவரசி, திலீப் என பலரும் கதையை அடுத்தடுத்து நகர்த்த உதவினார்கள். கேப்டனைப் போல் கதையின் தூணாக விசு ‘அம்மையப்பன்’ எனும் கதாபாத்திரத்தில் கலக்கினார்.

அதிலும், க்ளைமேக்ஸ் காட்சியில் கோயிலில் காத்திருக்கும் விசுவிடம், லட்சுமி வந்து பேசுவது போலவும், பிறகு விசு வீட்டுக்கு வந்ததும் அதே லட்சுமி பேசுவது போலவும் சொல்லப்போனால், கோயிலில் பேசியதற்கு நேர்மாறாகப் பேசுவது போலவும் இருந்ததை, படப்பிடிப்புக்கு முதல் நாள் இரவில் மாற்றினார் விசு. கோயிலுக்கு வந்து பேசுவது வேலைக்கார கண்ணம்மா மனோரமா என்றும் வீட்டுக்கு வந்ததும் பேசுவது உமா கேரக்டரில் நடித்த லட்சுமி என்றும் தடக்கென மாற்றினார். ஹிட்டடித்தார்.

இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார்கள். அங்கேயும் வெள்ளிவிழா கொண்டாடியது. எண்பதுகளுக்குத் தகுந்தது போல், கதைக்குள் பல ஜாலங்களைச் செய்திருந்தார் விசு. அதனால்தான் தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் வசூல் மழை பொழிந்தது. இன்னொரு கொசுறு தகவல்... ‘உறவுக்கு கை கொடுப்போம்’ படத்தில் நாயகியாக நடித்த செளகார் ஜானகி, தெலுங்கு ‘சம்சாரம் அது மின்சாரம்’ ரீமேக்கில் நடித்தார். அவர் நடித்த கதாபாத்திரம்... நம்ம ஆச்சி, வேலைக்கார கண்ணம்மாவாக நடித்த அதே கேரக்டர். தெலுங்கில், இந்தக் கதாபாத்திரத்தில் ரணகளப்படுத்தியிருப்பார் செளகார் ஜானகி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in