
மறைந்த நடிகரும் இயக்குநருமான ராஜசேகரின் மனைவி தாரா. கணவர் விட்டுச் சென்ற ஒரே சொத்தான சொந்த வீடு வங்கி ஏலத்தில் வருவதால், இவர் நிர்க்கதியான சூழலில் தடுமாறி வருகிறார்.
‘நிழல்கள்' திரைப்படத்தில் பாரதிராஜாவால் நாயகனான் ஆனதில் வெகுஜனங்களுக்கு நன்கு பரிச்சயமானவர் ராஜசேகர். அதற்கு முன்பே ஒளிப்பதிவாளராகவும் தொடர்ந்து திரைப்பட இயக்குநர் என வெற்றிகரமாக தடம் பதித்தவர் (ராபர்ட்)ராஜசேகர். வயதானதும் சின்னத்திரை நடிகராகவும் பிரபலமாக இருந்தார். இவர் காலமானதை அடுத்து, ராஜசேகர் விட்டுச் சென்ற ஒரே சொத்தான வீட்டில் மனைவி தாரா காலம் தள்ளி வந்தார். ஆனால் வங்கிக்கடனில் கட்டப்பட்ட இந்த வீடு தற்போது ஏலத்துக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், அடுத்து எங்கே செல்வேன் என்று தாரா தவித்து வருகிறார்.
சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலான அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அதைவிட வாடகை குறைவான வீட்டில் வசித்து வருகிறார் தாரா. சொந்த வீட்டின் வாடகை மூலம், தற்போதைய வீட்டின் வாடகை மற்றும் வாழ்க்கை செலவினங்களை சமாளித்து வருகிறார். இதற்கிடையே வங்கி நிர்வாகம் வீட்டை ஏலத்துக்கு விட முயன்று வருகிறது. நிர்கதியான சூழலில் பலதரப்பிலும் உதவி கேட்டு ஓய்ந்திருக்கிறார் தாரா. பெற்றோரின் எதிர்ப்பை மீறி இயக்குநர் ராஜசேகரை தாரா மணம் செய்ததில், பிறந்த வீட்டுப் பக்கமும் உதவ ஆளில்லை. உதவி செய்ய விரும்பிய சிலரும், இவ்வளவு பெரிய தொகையா எனத் தயங்கி, விலகி இருக்கிறார்கள்.
திரைப்பட நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் சங்கம்னு என சகல சங்கங்களிலும் ராஜசேகர் உறுப்பினராக இருந்தார். எனவே அந்த சங்க நிர்வாகிகளை சந்தித்தும் முறையிட்டுப் பார்த்திருக்கிறார் தாரா. எங்கிருந்தும் அவருக்கு உதவிக்கரம் நீளவில்லை. தன்னுடைய அபாக்கிய நிலைமையை விளக்கி, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பினாராம். அதிலும் நாளது வரை பலனில்லை என்கிறார்.
இதற்கிடையே வங்கி சங்கத்தை சேர்ந்தவர்களே வீட்டை ஏலத்தில் எடுக்க முன்வந்திருப்பதால், ராஜசேகர் மனைவிக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. காவல்துறை உதவியுடன் வீட்டிலிருந்து வெளியேற்றுவோம் என்றெல்லாம் மிரட்டுகிறார்களாம். இதனால் அந்தப் பெண்மணி அரண்டு போயிருக்கிறார். கணவர் ராஜசேகர் விட்டுச் சென்ற ஒரே சொத்தும், தற்போது அவரது மனைவியின் வாழ்வாதாரமாகவும் உள்ள அந்த வீடு ஏல அபாயத்துக்கு ஆளாகி இருப்பது, ஏனைய மக்கள் அனைவருக்கும் பாடமாகவும் மாறி இருக்கிறது.
குடும்பத்தில் வருமானம் ஈட்டுவோர், எதிர்காலத்தையும் எதிர்பாரா தருணங்களையும் திட்டமிட்டே சேமிப்பு முதல் கடன் வரை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கடன் வாங்கும்போது அகலக்கால் வைப்பது என்றுமே ஆபத்தானது. இயக்குநர் ராஜசேகர் குடும்பத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. ’வயதான காலத்தில் இருக்கும் பணத்தை வைத்து அளவான வீட்டை வாங்கலாமே’ என்று அவரது மனைவி எச்சரித்திருக்கிறார். ஆனபோதும், வங்கியில் கடன் தருகிறார்கள் என்பதால் துணிந்து இறங்கியிருக்கிறார் ராஜசேகர். அவரது அகால மரணம், இப்போது சொந்த வீட்டையும், மனைவியையும் பரிதவிப்பில் விட்டிருக்கிறது.
வேறு சேமிப்போ, முதலீடோ இல்லாதது மட்டுமன்றி வருமானத்துக்கு வழியின்றி தவிக்கிறார் ராஜசேகர் மனைவி. ’இருக்கும்போதும் - இல்லாத பிறகும்’ என குடும்பத்தின் வருமானம் ஈட்டுவோர், உரிய காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது. அதே போன்று வங்கியில் வாங்கும் எந்தக் கடன் என்றாலும், வங்கி வாயிலாகவே இன்சூரன்ஸ் எடுக்கும் நடமுறையும் வழக்கில் இருக்கிறது. இதனால், கடன் வாங்கியவர் அசம்பாவிதத்துக்கு ஆளானாலும், அவர் எடுத்த இன்சூரன்ஸ் மூலம் கடன் அபாயம் அவரது குடும்பத்தார் கழுத்தை நெரிக்காது; சேர்த்த சொத்துக்கும் எந்த பங்கமும் நேராது.
இயக்குநர் ராஜசேகரை காதலித்து, கரம் பிடித்து, அவருக்கு சகலமும் தோளாக வாழ்ந்த மனைவி, இன்று எப்போது வேண்டுமானாலும் தெருவுக்கு அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் நிற்கிறார். கடைசி நேர வேண்டுகோளாக கலை உலகத்தினர் மற்றும் ஆட்சியாளர்களிடம் ஒரு சுற்று மன்றாடிக் கொண்டிருக்கிறார். ‘இந்த பிரச்சினையில் இருந்து என்னை மீட்டு மிச்சமிருக்கும் நாட்களை நிம்மதியாக கழிக்க உதவுங்கள்’ என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார். அவரது வேண்டுதல் பலிக்குமா?