’லியோ’ படத்தின் டிரெய்லரால் நடிகர் விஜய்க்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘லியோ’. இந்த மாதம் 19ம் தேதி வெளியாகக் கூடிய இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. படத்தின் டிரெய்லர் அருமையாக இருப்பதாக ஒரு சாரர் பாராட்டி வரும் நிலையில், இன்னொரு பக்கம் இந்த டிரெய்லருக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
அளவுக்கதிகமான வன்முறை, ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள், பெண்களைத் தகாத வார்த்தை சொல்லி நடிகர் விஜய் பேசும்படியான ஒரு வசனம், போதைப் பழக்கத்தைக் கொண்டாடும்படியான பாடல் என விஜய் போன்ற முன்னணி நடிகர் இப்படி செய்யலாமா என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் அதிகளவு விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர். மேலும், அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இருக்கக்கூடிய நடிகர் விஜய் இதுபோன்ற விஷயங்களை செய்வது நல்லதல்ல எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினி நடிப்பில் முன்பு வெளியான ‘ஜெயிலர்’ படத்திலும் அளவுக்கதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.