
விஜய் நடிக்கும் ‘லியோ’ படப்பிடிப்பின் இடையே, காஷ்மீரில் இருந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொளுத்திப்போட்ட படக்குழுவின் குளிர்காயும் புகைப்படம், இங்கே ரசிகர்களை திகுதிகுக்க வைத்திருக்கிறது.
’லியோ’ திரைப்படம் பரபரப்பாக காஷ்மீரில் வளர்ந்து வருகிறது. 14 வருட இடைவேளையில் விஜய்யுடன் த்ரிஷா ஜோடி சேர்வதில், கில்லி காலத்து ரசிகர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவராக த்ரிஷாவும் தனது பங்குக்கு இன்ஸ்டா பதிவுகளில் மகிழ்ச்சியை பரிமாறி வருகிறார்.
அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் ஆகியோருடன் பிரதான எதிர்மறை பாத்திரத்தில் பாலிவுட்டிலிருந்து சஞ்சய் தத் உடன் நடிக்கிறார். செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் வெளியான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ லியோ மீதான எதிர்பார்ப்பையும், லோகேஷ் யுனிவர்ஸ் குறித்தான விவாதங்களையும் கிளப்பியது.
தற்போது காஷ்மீரின் கொல்லும் குளிரின் மத்தியில் லியோ படப்பிடிப்பின் இடையே, லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ’கேம்ப் ஃபயர்’ படம் ஒன்றும் இந்த விவாதங்களை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது.
விஜய், லோகேஷ் கனகராஜ், அன்பறிவு, கெளதம் மேனன், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கும் அந்தப் படத்தை வைத்தே லியோ படப்பிடிப்பு பாதி முடிந்திருக்கிறது என்று கொளுத்திப் போட்டிருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். ஏனெனில், விக்ரம் படப்பிடிப்பின் இடையேயும், இதே போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தாராம் லோகேஷ் கனகராஜ்.
இந்த புகைப்படம் ட்விட்டரில் வெளியான அடுத்த நிமிடமே வைரலானது. ’லியோ’ திரைப்படத்துக்கான அப்டேட் வரிசையில் இந்த புகைப்படமும் சேர்ந்திருக்கிறது.