
'லியோ' திரைப்படம் ஆயிரம் கோடியை எட்டாது என அந்தப் படத்தின் தயாரிப்பாளரே கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் 'லியோ' அக்.19-ம் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே 148 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்புத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் படம் ஆயிரம் கோடி வசூலை எட்டுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அதன் தயாரிப்பாளர் லலித் 'லியோ' நிச்சயம் ஆயிரம் கோடியை எட்டாது எனக் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் லலித், "விஜய் அவர்களின் 'லியோ' திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டாது. ஏனெனில், இந்தி மார்க்கெட்டில் இருந்து நாங்கள் பெரிய அளவில் வசூலை எதிர்பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர்," 'மாஸ்டர்' திரைப்படத்தின் போது விஜய் அவர்களுக்கு ஒரு பரிசினை வழங்க முடிவு செய்து இருந்தேன். ஆனால், அதை தெரிந்து கொண்ட அவர், என்னை அழைத்து 'எனக்கு நீ சம்பளம் கொடுத்து விட்டாய் அல்லவா, பிறகு இதெல்லாம் எதற்கு? எனக்கு எந்த விதமான பரிசுப் பொருளும் தேவையில்லை' என்றார். அதேபோல, 'லியோ' படத்தின் அதிகாலை காட்சிகளுக்கு நான் நீதிமன்றம் சென்றதை அறிந்த அவர் என்னிடம், 'நான்கு மணி காட்சிகளுக்காக நீ நீதிமன்றம் சென்றிருக்கிறாயா? எதற்கு போனாய்?' என்று என்னிடம் கடிந்து கொண்டார்.
அரசு சொல்வதை மீறி நாம் செயல்படக் கூடாது என்றும் அவர் என்னிடம் கூறினார். பிற மாநிலங்களிலும் 4 மணி காட்சிகள் இடம் பெறவில்லை என்றால் பரவாயில்லை என்று விஜய் தெரிவித்தார்" என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.