லியோ இசை நிகழ்ச்சியை தயாரிப்பு நிறுவனமே ரத்து செய்தது; காவல்துறை தகவல்

லியோ
லியோ

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின் போது போலி டிக்கெட்கள் மூலமாக ரசிகர்கள் குவிந்து குளறுபடி ஏற்பட்டது போல அல்லாமல் லியோ பட இசை நிகழ்ச்சியின் போது கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் இதனையடுத்து தாமாகவே பட தயாரிப்பு நிறுவனம் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாகவும் காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் பேரணி நடத்துவதற்கு அனுமதிக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில், நாட்டின் 76வது சுதந்தரதினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 29ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதிக்கோரி கடந்த மாதம் 20ம் தேதி அளித்த மனுவுக்கு காவல்துறை இன்னும் பதிலளிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், கடந்த மாதம் அளித்த மனுவை பரிசீலிக்காமல் வைத்து கடைசி நேரத்தில் மனுவை நிராகரிப்பதாகவும், ஒவ்வொரு முறையும் காவல்துறை இதுபோலவே செய்வதாக குற்றம்சாட்டினார்.

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரணிக்கு அனுமதிக்கோரும் பாதையில் மசூதிகள், தேவாலயம் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அப்படி என்றால் அந்த பகுதியில் யாரும் நடக்கக்கூடாது என கூறுகிறீர்களா? என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, ஆர்.எஸ்.எஸ். மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டுமென காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இதனை ஏற்றுக்கொண்டு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இது போன்ற விவகாரங்களில் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்காமல் கட்டுப்பாடுகள் விதித்தும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் உத்தரவாதம் பெற்றுக்கொண்டும் அனுமதி அளிக்கலாம் எனவும் யோசனை தெரிவித்தார். மேலும், லியோ' திரைப்பட டிரெய்லர் வெளியிட்ட போது ரோகினி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டதற்கும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்பட்டதற்கும் காவல்துறையினரின் தவறான கையாளுதலே காரணம் எனவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

பின்னர், இதுகுறித்து ஆஜராகி விளக்கமளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, லியோ டிரெய்லரை ரோகினி திரையரங்குக்கு வெளியில் திரையிடுவது தொடர்பாக அனுமதி கோரி எந்த விண்ணப்பமும் அளிக்கப்படவில்லை எனவும், அனுமதி கோரியிருந்தால் பரிசீலிக்கப்பட்டிருக்கும் என விளக்கமளித்தார். திரையரங்குக்கு உள்ளே லியோ டிரெய்லர் திரையிட எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின் போது போலி டிக்கெட்கள் மூலமாக ரசிகர்கள் குவிந்து விடாமல் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியதால், அந்த நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்களே ரத்து செய்து விட்டதாகவும், அதற்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், தற்போது அனுமதி கோரினால், பரிசீலிக்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

திரையரங்கில் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை எனவும், புகார் இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் விஜய் ரசிகர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் காவல்துறையை பொறுத்தவரை எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுப்பதில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

அதற்கு நீதிபதி, சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை பற்றித் தான் நீதிமன்றம் கவலை தெரிவித்ததாகவும், பத்திரிகையில் செய்தி வெளியானதால் இதுகுறித்து கேள்வி எழுப்பியதாகவும் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in