’லியோ’ படத்தில் அளவுக்கதிகமான வன்முறை இருப்பதாக விநியோக நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தில் அளவுக்கதிகமான வன்முறை இருப்பதாக இந்தப் படத்தை லண்டனில் விநியோகம் செய்யும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில், ‘’லியோ’ படத்தில், அதிக அளவிலான வன்முறையும் கொடூரமான காட்சிகளும் உள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட, 'லியோ' படத்தில் அதிக அளவிலான கிராஃபிக்ஸ் காட்சிகளும் இருக்கிறது. இலகிய மனம் படைத்தவர்கள் இதைப் பார்ப்பது கடினம்தான்.
துரதிர்ஷ்டவசமாக 15-17 வயதுக்குட்பட்ட இளம் ரசிகர்களால் இப்படத்தை பார்க்க முடியாத நிலை இருந்து’ எனக் கூறியுள்ளது.
மேலும், ‘BBFC உடனான விவாதங்களுக்குப் பிறகு, 'லியோ' படத்தை 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் பார்க்க வேண்டும் என முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தினோம். சில வன்முறை மற்றும் கொடூரமான பின்விளைவுகளின், அல்ட்ரா குளோஸ்-அப் காட்சிகளை மென்மையாக்குதல் மற்றும் படத்தின் மையக்கரு, ஓட்டம், தனித்துவமான தருணங்கள் மற்றும் விஜய்யின் வெகுஜன ஈர்ப்பு ஆகியவற்றில் எந்த விளைவுகளையும் இப்படம் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்தோம்.
ஆனால் 4 -14 வயது வரையிலான குழந்தைகள் பலர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்தாலும், சில கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் அவர்களால் இப்படத்தை பார்க்க முடியாது. இந்த படத்திற்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வர எதிர்பார்த்த அனைத்து பெற்றோர்களிடமும், நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். தீவிரமான மற்றும் வன்முறை நிறைந்த ஒன்றாக ’லியோ’ திரைப்படம் 100% லோகேஷ் கனகராஜ் திரைப்படமாக உள்ளது’ எனவும் அஹிம்சா குறிப்பிட்டுள்ளது.