
’லியோ’ படத்திற்கான ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் ஆறு நாட்களே இருக்கும் நிலையில் அதன் ஆன்லைன் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது. அதாவது 'லியோ' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு கோயம்பத்தூர், மதுரை போன்ற மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.
இதுமட்டுமல்லாது, சென்னையில் தாம்பரம், பாடி, பூவிருந்தவல்லி, மதுராந்தகம் என புறநகர் பகுதிகளிலும் விறுவிறுப்பாக ஆன்லைன் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது.
’லியோ’ படம் வெற்றி பெற வேண்டும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் திருப்பதி சென்றுள்ள நிலையில், இந்தப் படத்தில் தாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அளவுக்கதிகமான வன்முறை இருப்பதாக லண்டனில் இந்தப் படத்தை வெளியிடும் விநியோக நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
போலி டிக்கெட் விற்பனை
இந்த நிலையில், சென்னையில் பிரபல தியேட்டர் பெயரில் போலியாக 'லியோ' பட டிக்கெட்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பூந்தமல்லி சாலையில் பகுதியில் பிரபல ரோகினி திரையரங்கம் உள்ளது. இத்ன் மேலாளர் ராமலிங்கம், சென்னை கோயம்பேடு காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான 'லியோ' படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சிலர் எங்கள் ரோகினி திரையரங்கு பெயரில் 'லியோ' பட டிக்கெட்டுகளை ஆன்லைனில் போலியாக விற்பனை செய்து வருகின்றனர். எனவே, ஆன்லைனில் லியோ பட டிக்கெட்டுகளை போலியாக விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார். இதன்பேரில் சிஎம்பிடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.