
`தன் மீது பொய் புகார் அளித்த பாடலாசிரியர் சினேகன் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி கூறினார்.
சினேகம் அறக்கட்டளை சம்மந்தமாக கவிஞர் சினேகன் மற்றும் பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி இருவரும் மாறி மாறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து வருகின்றனர். இருவரும் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காவல் ஆணையர் அலுவலத்தில் விசாரணைக்கு ஆஜரான நடிகை ஜெயலட்சுமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "சினேகன் நடத்தி வரும் அறக்கட்டளை பெயரில் நான் மோசடி செய்ததாக ஆதாரமற்ற புகார் அளித்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில் எனது தரப்பு விளக்கங்களை விசாரணை அதிகாரியிடம் அளித்துள்ளேன். ஆனால் சினேகன் புகார் அளித்து விட்டு அதற்குண்டான ஆதாரங்களை இதுவரை சமர்பிக்கவில்லை. மாறாக நான் புகார் அளித்து 20 நாட்களான நிலையில் என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் சினேகனுடன் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்துகின்றனர். நான் பாஜகவில் இருப்பதால் என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் சினேகன் பொய்யான புகார் அளித்ததுடன், ஊடகங்களில் என்னை குறித்து அவதூறு பரபரப்பும் வகையில் பேசி வருகிறார்.
ஒரு பெண் என்றும் பாராமல் என்னை அவமானப்படுத்தும் வகையில் பேசிய சினேகன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். என் மீது பொய் புகார் அளித்த சினேகன் ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சினேகன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதோடு அவர் மீது மனநஷ்ட வழக்கு தொடர உள்ளேன்" என்று கூறினார்.