
'வீரமே வாகை சூடும்' படத்தை தொடர்ந்து மீண்டும் காக்கியில், கான்ஸ்டபிளாக அவதாரம் எடுத்திருக்கிறார் விஷால். எப்படி இருக்கிறது 'லத்தி'?
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் முருகானந்தமாக விஷால். தனது மனைவி சுனைனா, மகன் என வாழ்ந்து வருகிறார். பணிபுரியும் காவல் நிலையத்தில் அவர் ஒரு லத்தி ஸ்பெஷலிஸ்ட். இடையில் சஸ்பெண்ட் ஆகும் விஷால், உயர் அதிகாரி ஒருவரின் சிபாரிசில் மீண்டும் பணிக்கு திரும்புகிறார்.
பிரதி உபகாரமாக, சிபாரிசு உயர் அதிகாரி தனது தனிப்பட்ட பிரச்சினைக்காக விஷாலின் உதவியை நாடுகிறார். இதனால், கூடாது என முடிவெடுத்திருந்த ’லத்தி'யை விஷால் மீண்டும் கையிலேந்தும் சூழல் வாய்க்கிறது. மேலும் தனியான பாதிப்புகளும் அவரை குறிவைக்க, அதில் இருந்து அவர் மீண்டாரா? வில்லனுடனான அவரது பிரச்சினை என்ன?.. உள்ளிட்ட கேள்விகளுக்கு ஆக்ஷன் கலந்த எமோஷனல் கதையாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் வினோத்.
ஆக்ஷனும், அதிரடியும் விஷாலுக்குப் புதிதல்ல. ஆரம்பக் காட்சிகளிலேயே கான்ஸ்டபிளாக லத்தி சுழற்றும் போதே, பார்வையாளர்களை ஆக்ஷனுக்கு தயார் செய்து விடுகிறார். சினிமாவின் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கே உரிய அதிகாரம், மிடுக்குகள் இன்றி, ஒரு கான்ஸ்டபிளுக்கு உரிய எளிமையான நடிப்பால் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் அவதாரத்திலும் அசரடிக்கிறார் விஷால்.
ஆனால், க்ளைமாக்ஸ் சென்டிமென்ட் காட்சிகளில் அவரது மிகை நடிப்பு திருஷ்டியாகிறது. ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான கதாபாத்திரத்தில் வளையவரும் சுனைனா, அழகான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். முனீஸ்காந்த், பிரபு, தலைவாசல் விஜய் என அனைவருமே கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர். சில காட்சிகளே வந்தாலும், பிரபுவின் கதாபாத்திரம்தான் கதைக்கான திருப்புமுனை.
கதாநாயகனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் எழுதப்பட்டால் மட்டுமே, அது கதையை வலுவாக்கி கூடுதல் சுவாரசியம் அளிக்கும். அதற்கொப்ப ஓர் எதிர்மறை கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் நடிகர் ரமணா. முறுக்கேறிய உடம்பும், முகம் மறைத்த கேசமுமாக தோற்றத்திலும் நடிப்பிலும் படம் முழுக்க மிரட்டுகிறார்.
முதல் பாதியில் எளிமையான கதையை பரபரப்பான களத்துக்குள் அலுப்பு தட்டாமல் பயணிக்கச் செய்யும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் கணிக்க முடிந்த காட்சிகளால் சுவாரசியத்தில் தேய்கிறது. முதல் பாதியில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளை ரசிக்க முடிந்தாலும், இரண்டாம் பாதியில் அவையே அயற்சியூட்டுகின்றன. கான்ஸ்டபிள் கதாபாத்திரம் என்பதால் முதல் பாதியில் விஷால் கதாபாத்திரம் அமைதியாக வருவதில் பிரச்சினை இல்லை.
ஆனால் இரண்டாம் பாதியில் ஒற்றை ஆளாக எதிரிகளை திட்டமிட்டு தாக்குவது, அத்தனை அடிகளை வாங்கிக் கொண்டும் மீண்டும் ஹீரோயிசத்துடன் மீள்வது, முதல் பாதியில் வில்லன் முன்பாக கதை அத்தனையும் பிரபு சொல்வது, தன்னை அடித்தவனை கண்டுபிடிக்கும் வரை முகத்திலிருந்து கவர் கழற்றமாட்டேன் என ரமணா சொல்லும் காரணம், ஆபத்தில் சிக்கும் விஷாலுக்கு உதவ முன்வராத காவல்துறை.. என கதையில் ஏகப்பட்ட பலவீனங்கள்.
இதைத்தாண்டி யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், பாலசுப்ரமணியெம், பாலகிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் படத்திற்குப் பெரும்பலம். இது தனக்கான ஏரியா என்பதை உணர்ந்தே ஸ்டண்ட் காட்சிகளில் இறங்கி விளையாடி இருக்கிறார் பீட்டர் ஹெயின் மாஸ்டர்.
ஆக மொத்தத்தில், முதல் பாதியில் எளிமையான ஒன்லைனால் சுவாரசியமாக நகரும் கதை, இரண்டாம் பாதியில் 'லத்தி' அடியால் தடுமாறி இருக்கிறது.