லதா மங்கேஷ்கரின் குரலுக்கு அழிவில்லை: ராகுல் காந்தி

லதா மங்கேஷ்கரின் குரலுக்கு அழிவில்லை: ராகுல் காந்தி

‘மறைந்த லதா மங்கேஷ்கரின் குரல் எப்போதும் ரசிகர்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் (92). இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் இவர், இந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ளார்.

கரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த மாதம் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் நிலை நேற்று மோசமானது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தும் இன்று காலை மரணமடைந்தார்.

அவர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்துவிட்டார் என்ற சோக செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். பல தசாப்தங்களாக இந்தியாவின் பிரியத்துக்குரிய குரலாக அவர் இருந்தார். அவருடைய இனிமையான பொன்குரல் என்றும் அழியாதது. ரசிகர்களின் நெஞ்சங்களில் அது எப்போதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். அவர் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் சோனியா காந்தியுடன் லதா மங்கேஷ்கர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “லதா மங்கேஷ்கரின் மறைவு இந்திய கலை உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in