கரோனா காரணமாக சிகிச்சைப் பெற்றுவரும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், தொடர்ந்து ஐசியூவில்தான் இருக்கிறார் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் மூத்த பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர், இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழில் இளையராஜா இசையில், ’ஆனந்த்’ படத்தில் ’ஆராரோ ஆராரோ’, கமலின் ‘சத்யா’ படத்தில் இடம்பெற்றுள்ள ’வளையோசை...’ உட்பட சில பாடல்களைப் பாடியுள்ளார். பலமுறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ள இவர், மிக உயரிய விருதான பாரத ரத்னா, பத்மபூஷண், பத்மவிபூஷண் உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
92 வயதான இவருக்குக் கடந்த 11-ம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு நிமோனியா காய்ச்சலும் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லதா மங்கேஷ்கர், விரைவில் நலம்பெற திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரீச் கேண்டி மருத்துவமனையின் டாக்டர் பிரதித் சம்தானி கூறும்போது, “அவர் தொடர்ந்து ஐசியூவில்தான் இருக்கிறார். நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள். அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில்தான் இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.