`எங்க ஊரு மருமக நயன்தாரா' - கல்யாணம் முதல் பிரசவம் வரை பட்டியல் போட்ட விக்னேஷ் சிவனின் சொந்த ஊர் மக்கள்

நயன்தாரா விக்னேஷ் சிவன்
நயன்தாரா விக்னேஷ் சிவன்

திருச்சி மாவட்டம் லால்குடி ஊர்க்காரர்கள் எங்க ஊரு மருமகப் பொண்ணு நயன்தாரா என்று கொண்டாடி வருகிறார்கள்.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வருகின்றனர். திரையுலகில் ஒருவருக்கொருவர் கரம் கொடுத்து உதவி கொள்வதிலும் அவர்கள் இணையற்ற ஜோடிகளாக திகழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஜூன் ஒன்பதாம் தேதியன்று இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதனையடுத்து லால்குடிகாரர்கள் நயன்தாராவை எங்க ஊர் மருமக என்று சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

திருச்சி மாவட்டம், லால்குடி வடக்குதெருவை சேர்ந்த சிவக்கொழுந்து - மீனாகுமாரி தம்பதியின் மகன்தான் விக்னேஷ் சிவன். விக்னேஸ்வரன் என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக விக்னேஷ் சிவன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். லால்குடி பூர்வீகம் என்றாலும் சிவக்கொழுந்துவுக்கு சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணி கிடைத்ததால் 1971-ம் ஆண்டு சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்டார். சிவக்கொழுந்துவின் மனைவி மீனாகுமாரி சென்னை வடபழனி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

சிவக்கொழுந்து தற்போது உயிருடன் இல்லை. தாய் மீனாகுமாரி விக்னேஷ் சிவனின் தங்கை ஐஸ்வர்யாவுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருமணம் செய்யப்போவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பதால் லால் குடிகாரர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

லால்குடிகாரர்கள் நயன்தாராவை தங்கள் ஊர் மருமகளாக பார்க்கிறார்கள். இதனை தங்களுக்குள் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளும் லால்குடிகாரர்கள் அதையும் தாண்டி யோசித்து இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு ஒருவேளை நயன்தாரா லால்குடிக்கு வந்தால் எந்தந்த கடைகளுக்கு செல்வார் என்பதைக் கூட பட்டியல் போட்டு அதையும் பகிர்ந்திருக்கிறார்கள். அவர்களின் அந்த பட்டியல்...

அவர் துணி எடுக்க வேண்டும் என்றால் சங்கம் சில்க்ஸ் போகலாம். அப்படியே நகை எடுக்க வேண்டும் என்றால் மங்களம் ஜீவல்லர்ஸுக்கு போவாராம். மளிகை சாமான் வாங்குவதற்கு அருணா சூப்பர் மார்க்கெட் போகலாம் அல்லது லெட்சுமி மளிகைக் கடைக்கோ, அண்ணாமலை மளிகைக்கடைக்கோ போய் மளிகை வாங்கலாம். காய்கறிகள், பழங்கள் வாங்குவதற்கு உழவர் சந்தைக்கு போக வேண்டுமாம். சாப்பிட ஹோட்டலுக்கு போக வேண்டும் என்றால் கேண்டிரெஸ்டாரன்ட் போக வேண்டுமாம். இயற்கையாக ஆற்றில்
குளிக்க வேண்டும் என்றால் கூழையாறுக்கு போக வேண்டுமாம்.

இவ்வளவையும் பட்டியலிட்டவர்கள் அடுத்து அதையும் தாண்டி யோசித்திருக்கிறார்கள். இல்லறம் நல்லபடியாக நடந்து அவர் கர்ப்பவதியான பின்னர் பரிசோதனைக்கும், பின்னர்
பிரசவத்துக்கும் பாப்புலர் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு போகலாமாம். குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களை வெள்ளனூர் நவபாரத் வித்யாலயாவில் படிக்க வைக்கலாமாம்.
இத்தனையும் கச்சிதமாக திட்டமிட்டு பட்டியல் போட்டு நயன்தாராவுக்காக தயாராக இருக்கிறார்கள் லால்குடி வாசிகள். ஆனால் நயன்தாரா தான் இதற்கு தயாராக இருக்கிறாரா? என்று தெரியவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in