திரை விமர்சனம்: குருதி ஆட்டம்

திரை விமர்சனம்: குருதி ஆட்டம்

மதுரையில் கொடூர ரவுடிகளுக்கிடையே நிகழும் கொலைவெறி ஆட்டத்தில் சந்தர்ப்பவசத்தால் சிக்கிக்கொள்ளும் இளைஞனின் கதையே ‘குருதி ஆட்டம்’.

அரசு மருத்துவமனையில் உதவியாளராக வேலைபார்த்தாலும் கபடி விளையாடிக்கொண்டு நண்பர்களுடன் சுற்றித் திரிகிறான் சக்தி (அதர்வா முரளி). 17-வது முறையாக 10-ம் வகுப்பு தேர்வு எழுதப் போகும் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் வெண்ணிலாவை (ப்ரியா பவானி சங்கர்) காதலிக்கிறான்.

அதே ஊரில் காவல்துறை அதிகாரிகளையே கட்டுப்படுத்தும் அளவுக்கு செல்வாக்கு மிக்க தாதாவாகத் திகழ்கிறார் காந்திமதி (ராதிகா). அவருடைய நம்பிக்கைக்குரிய கூட்டாளி துரை (ராதாரவி) . காந்திமதியின் மகன் முத்து (கண்ணா ரவி), துரையின் மகன் அறிவு (பிரகாஷ் ராகவன்) இருவரும் நண்பர்கள். கபடி விளையாட்டில் தோற்ற கோபத்தில் சக்தியின் நண்பனை அடித்துவிடுகிறான் அறிவு. பதிலுக்கு, அறிவை சக்தி கடுமையாகத் தாக்கிவிடுகிறான். காந்திமதியின் செல்வாக்கைப் பயன்படுத்தி, போதைப் பொருள் வைத்திருந்ததாக பொய் வழக்கில் கைது செய்யப்படும் சக்தியை முத்து வெளியே எடுக்கிறான். சக்திக்கும் முத்துவுக்கும் இடையில் நட்பு மலர்கிறது. இதனால் ஆத்திரமடையும் அறிவு - சக்தி, முத்து, காந்திமதி மூவரையும் கொலை செய்ய கூலிப்படையை நியமிக்கிறான்.

இதன் நடுவே, கடுமையான நோயின் காரணமாக சக்தி பணியாற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமி கண்மணி மீது சக்தி மிகுந்த அன்பு செலுத்துகிறான். செய்யாத குற்றத்துக்காக சிறையிலிருந்து விடுதலை அடைந்தவரான கண்மணியின் தந்தை (வினோத் சாகர்) தன் மகளின் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால் காந்திமதியைக் கொல்லும் பணியை ஏற்றுக்கொள்கிறார். கூலிப்படை தாக்குதலில் முத்து இறந்துவிட, காந்திமதியும் சக்தியும் தப்பிவிடுகிறார்கள். தன் மகனைக் கொன்றவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் பழிவாங்க நினைக்கும் காந்திமதியிடமிருந்து கண்மணியையும் அவளுடைய குடும்பத்தையும் மீட்க முயல்கிறான் சக்தி. கண்மூடித்தனமான கொலைகளும் ரத்த வெள்ளமும் நிறைந்த இந்த மோதலில் யார் அழிந்தார்கள் யார் பிழைத்தார்கள் என்பதே மீதிக் கதை.

2017-ல் வெளியான ‘எட்டு தோட்டாக்கள்’ மூலம் கவனிக்க வைத்த இயக்குநர் ஸ்ரீகணேஷ் எழுதி இயக்கியிருக்கும் இரண்டாம் படம் இது. கரோனா பெருந்தொற்றின் காரணமாக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியானாலும் படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த முறை வழக்கமான ஆக்‌ஷன் த்ரில்லர் வகைமையைக் கையில் எடுத்திருக்கிறார் ஸ்ரீகணேஷ். ஆனால், அதற்கான திரைக்கதையில் பெரிதும் கோட்டை விட்டிருக்கிறார். அரதப் பழசான காட்சிகள், வலுவற்ற கதாபாத்திர வடிவமைப்பு, நம்ப முடியாத சண்டைக் காட்சிகள், அளவுகடந்த வன்முறை, தேவைக்கதிமான நீளம் என திரைக்கதையின் பிரச்சினைகள் படத்தை ரசிப்பதற்கு தடையாக அமைந்திருக்கின்றன. பரபரப்பாக இருந்திருக்க வேண்டிய படத்தின் க்ளைமேக்ஸ் மிகவும் பலவீனமாக இருக்கிறது.

இந்தக் குறைகளை எல்லாம் தாண்டி படத்தில் சில ரசிக்கத்தக்க அம்சங்கள் இருக்கின்றன. வசனங்கள் ஆங்காங்கே கவனிக்க வைக்கின்றன. ஆக்‌ஷன் த்ரில்லர் என்றாலும் படத்தில் ரசனையான கவித்துவமான விஷயங்களையும் கணிசமாகச் சேர்த்திருக்கிறார் இயக்குநர். அவையே இந்தப் படத்தை ஓரளவுக்கேனும் காப்பாற்றுகின்றன. சக்திக்கும் முத்துவுக்கும் இடையில் மலரும் நட்பு, வெண்ணிலாவின் குடும்பப் பின்னணி. சக்தியின் அக்கா கதாபாத்திரம் போன்ற ரசிக்கத்தக்க அம்சங்களூம் சிறுமி கதாபாத்திரத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட காட்சிகளில் உள்ள கவித்துவமும் ஆறிப்போன பொங்கலில் தட்டுப்படும் முந்திரிப் பருப்புகளாக சுவையளிக்கின்றன. நாயகனின் அக்கா கதாபாத்திரத்துக்கு மண்ணுக்கேற்ற முகத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது, ப்ரியா பவானி ஷங்கரின் இயல்பான தோற்றம், நாயகனுக்கும் நண்பர்களுக்கும் இடையிலான உறவு சித்தரிக்கப்பட்ட விதம் ஆகியவை எதார்த்தம்.

படத்தில் எந்தக் கதாபாத்திரத்துடனும் பார்வையாளர்களால் ஒன்ற முடியவில்லை. அதர்வா ரவுடிகளின் ஆட்டத்துக்குள் சிக்கிக்கொள்வதற்கான காரணமே நியாயமற்றதாக இருக்கிறது. மேலும், அவருக்கான சண்டைக் காட்சிகளில் அளவுக்கதிகமான மிகைநாயக அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. ராதிகா கதாபாத்திரம் தன்னளவில் புதுமையானதாக இருக்கிறது. இடைவேளைக் காட்சியிலும் இறுதிக் காட்சியிலும் அவர் செய்யும் வீர சாகசங்களை ரசிக்க முடிகிறது.

ஆனால், தாதாவான அவரின் கட்டளைக்கு காவல்துறை அதிகாரிகள் கட்டுப்படுவதை ஏற்றுகொள்ள வேண்டுமென்றால் அவர் யார்... எப்படி அந்த நிலையை அடைந்தார் என்பதைப் புரியவைப்பதற்கான காட்சிகள் ஒன்றிரண்டேனும் இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் இல்லை. எனவே, அந்தக் கதாபாத்திரமும் மனதில் தங்கவில்லை. ராதாரவியையும் சில காட்சிகளில் ரசிக்க முடிகிறதே தவிர ஒட்டுமொத்தமாக அவர் நல்லவரா கெட்டவரா என்கிற குழப்பத்துடனேயே படம் முடிவடைந்துவிடுகிறது. துரையின் மகன் அறிவு தன் நண்பன் குடும்பத்தின் மீது கொலைவெறி கொள்வதற்கு வலுவான காரணம் சொல்லப்படவில்லை. அவரால் நியமிக்கப்படும் கொலையாளியான சேது (வத்ஸன் சக்ரவர்த்தி) சக்தியைக் கொன்றே தீர்வது என்பதில் தீவிர முனைப்பு காண்பிப்பதற்கும் நியாயமான காரணம் எதுவும் இல்லை.

செல்வாக்கு மிக்க ரவுடியின் மகனாக தன்னுடைய ஆதிக்கத்தை நிறுவும் முயற்சிகளையும் கடந்து சற்று நியாய உணர்வுடன் செயல்படும் கண்ணா ரவியின் கதாபாத்திரம் மட்டுமே படத்தில் ரசிக்கும்படியாக இருக்கிறது. செய்யாத குற்றத்துக்காக சிறைத் தண்டனை அனுபவித்து மீண்ட வினோத் சாகரின் கதாபாத்திரம் மகளுக்காக கொலை செய்யத் துணிவதாகவும் அதற்குப் பின்னும் அவர் மீது பரிவு ஏற்படுவதைப் போலவும் திரைக்கதை அமைத்திருப்பது மிகவும் பிரச்சினைக்குரிய கதாபாத்திர வடிவமைப்பு.

ஆனால் இந்தக் கதாபாத்திர குறைகளைத் தாண்டி, அவற்றில் நடித்த நடிகர்கள் அனைவருமே தம்முடைய பங்களிப்பை சிறப்பாகத் தந்திருக்கிறார்கள். ப்ரியா பவானி ஷங்கருக்கு நாயகனைக் காதலிப்பதையும் அவனுடைய வன்முறைச் செயல்களைப் பார்த்துப் பயந்து அழுவதையும் தவிர பெரிய வேலை எதுவும் இல்லை. பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் முத்திரை ஒரு சில இடங்களில் பளிச்சிட்டாலும் பாடல்கள் எதுவும் ஈர்க்கவில்லை. சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கும் விக்கி, சில இடங்களில் இயற்பியல் விதிகளை அளவுக்கதிமாக மீறினாலும் ஒட்டுமொத்தமாக பாராட்டத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ஆங்காங்கே சில ரசிக்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், திரைக்கதையின் சறுக்கல்களால் கும்மாங்குத்து ஆட்டமாகவே அமைந்துவிட்டது இந்தக் ‘குருதி ஆட்டம்’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in