குமரிமுத்து : குபீர் சிரிப்பும் கண்ணீர் நடிப்பும் கலந்த கலைஞன்!

- நினைவுநாள் சிறப்புப் பகிர்வு
நடிகர் குமரிமுத்து
நடிகர் குமரிமுத்து

நம் தமிழ் சினிமாவில், கலைவாணரின் சிரிப்பின் விவரங்களைச் சொன்ன பாட்டு வெகு பிரபலம். அதுமட்டுமின்றி, வில்லத்தனத்தைக் காட்டுகிற கேரக்டரில் சிரித்தே நம்மை பயமுறுத்தினாரென்றால், அவர் பி.எஸ்.வீரப்பாவாகத்தான் இருக்கும். அதையடுத்து வந்த காலகட்டத்தில், சிரிப்புக்குப் பஞ்சமில்லை என்றபோதும் தனித்துவமான சிரிப்பு என்று எவரும் பேரெடுக்கவில்லை. அப்படி, தன் சிரிப்பையே லேண்ட்மார்க்காகவும் டிரேட் மார்க்காகவும் ஆக்கிக்கொண்ட நடிகர்... குமரிமுத்துவாகத்தான் இருக்கும்!

’’அம்பாளா பேசுவது?’’ என்ற ‘பராசக்தி’யின் வசனம் மிகப்பிரபலம். அந்த வசனம் பேசுகிற பூசாரி, குமரிமுத்துவின் சகோதரர் நம்பிராஜன். அந்தக் காலத்தில் நம்பிராஜன் மேடையேறாத ஊர்களே இல்லை. சினிமாவிலும் சிறிதும் பெரிதுமாக வலம் வந்தார். ‘பசி’ முதலான படங்களில், தனித்துத் தெரிந்த குணச்சித்திர நடிகையான தாம்பரம் லலிதா, குமரிமுத்துவின் அண்ணி. ஒருபடத்தில் குணச்சித்திரத்தில் வெளுத்துவாங்கியிருப்பார். இன்னொரு படத்தில் கொடூரம் காட்டி நமக்கு கோபம் வரச்செய்திருப்பார்.

 குமரிமுத்து
குமரிமுத்து

1940-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி, கன்யாகுமரிக்கு அருகில் உள்ள காட்டுப்புத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார் குமரிமுத்து. சிறுவயதிலிருந்தே சினிமாவும் நாடகமும்தான் இவரின் இரண்டு கண்கள். எட்டாம் வகுப்பு வரை படித்ததே அவரின் பெரிய சாதனைதான். நோட்டுப்புத்தகங்களும் வகுப்பறைகளும் கசந்தன. மேடைகளும் நாடக வசன பேப்பர்களும் இவரைக் கொள்ளைகொண்டன. தானே எழுதி நாடகங்களை அரங்கேற்றினார். மற்றவர்களின் நாடகங்களிலும் நடித்தார். இவரின் நடிப்பு புதுபாணியாக இருந்ததை குமரி ரசிகர்கள் கண்டுகொண்டார்கள். மேடைக்கு இவர் வந்தாலே தெறித்துச் சிரித்தார்கள். இவையெல்லாம் குமரிமுத்துவுக்குள் நம்பிக்கையை இன்னும் ஆழமாக விதைத்தன!

ஒருகட்டத்தில், சென்னைக்கு ரயிலேறி வந்தார். ஆனால், அண்ணன் நம்பிராஜன், ‘’இவனாவது படிச்சு முன்னுக்கு வருவான்னு பார்த்தா, நம்மளைப் போலவே இந்த ரூட்ல வர்றானே’’ என்று ஆதங்கப்பட்டார். அண்ணனை நம்பி குமரிமுத்துவும் நின்றுவிடவில்லை. ‘வைரம் நாடக சபா’ இந்த முத்தான கலைஞனை வாரியணைத்துக் கொண்டது. தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார்.

இவரின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. கைத்தட்டல்கள் கிடைத்தன. சம்பளமும் நல்லவிதமாகக் கிடைத்தன. ஆனால், சினிமா வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் டபாய்த்துக் கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில், மனம் தளர்ந்த குமரிமுத்து, சொந்த ஊருக்கே திரும்பினார். ‘’சென்னைல நாடகங்கள் நடிச்சும் சினிமா சான்ஸ் கிடைக்கல. அதனால நம்மூர்லயே நாடகம் போட்டு, திருப்திப்பட்டுக்கலாம்னு வந்துட்டேன்’’ என்று ஆறுதல் சொன்ன நண்பர்களுக்கு விளக்கம் தந்தார்.

இன்னும் வெறியுடன் நாடகங்களை எழுதினார். இயக்கினார். நடித்தார். ராஜபார்ட் கேரக்டரை வேறு யாருக்காவது கொடுத்துவிட்டு, காமெடி ரோல்களில் கவனம் செலுத்தினார். தனக்கு காமெடி நன்றாக வருகிறது என்பதை தானே உணர்ந்ததுதான், குமரிமுத்துவின் முதல் வெற்றி! ஆனால், உள்ளுக்குள் வெள்ளித்திரை கனவு, காட்சிகளாக ஓடிக்கொண்டே இருந்தன. சென்னைக்கு வந்தார். இந்தமுறை, நம்பிராஜன், தம்பி மீதும் தம்பியின் திறமை மீதும் முழு நம்பிக்கை கொண்டவரானார். அண்ணனின் தயவால், சின்னச் சின்ன வேடங்கள் கிடைத்தன. கூட்டத்தில் ஒருவனாக நின்று, கேமரா லென்ஸுக்குள் பத்துப்பதினைந்து பேருக்குள் ஒருவராக நின்றார். அப்போதெல்லாம் கே.எம்.முத்து என்றால்தான் இவரைத் தெரியும். பிறகு, ‘குமரிமுத்து’ என தன் பெயரை மாற்றிக்கொண்டார்.

கருணாநிதி, ஸ்டாலினுடன் குமரி முத்து...
கருணாநிதி, ஸ்டாலினுடன் குமரி முத்து...

அறுபதுகளின் தொடக்கத்தில் இருந்து சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்தவருக்கு, வாழ்க்கைப் பயணத்தில் ஒருகட்டத்தில் கோடம்பாக்கக் கதவு திறந்தது. 1968-ம் ஆண்டு, சென்னை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் குமரிமுத்துவின் நாடகம் அரங்கேறியது. அந்த நாடகத்தைப் பார்க்க திரைப்பட கதாசிரியரும் வசனகர்த்தாவுமான ஏ.எல்.நாராயணனும் வந்தார். அவரை, குமரிமுத்துவின் வசன உச்சரிப்பு, முகபாவனைகள், சிரிப்பு, சுருட்டை முடி, முக்கியமாக அவருக்கு இயல்பாகவே அமைந்த கண் குறைபாடு என எல்லாமே ஈர்க்க, ‘பொய் சொல்லாதே’ என்ற படத்தில் சிறுவேடத்தில் அவரை நடிக்க வைத்தார். அதுவும், நாகேஷுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு, முதல் படத்திலேயே கிடைத்தது. ‘தங்கதுரை’, ‘இவள் ஒரு சீதை’, ‘வெகுளிப்பெண்’ என குமரி முத்துவுக்கு திடீர்திடீரென வாய்ப்புகள் வந்தன.

ஒருபக்கம் நாடகத்தையும் விடவில்லை. எப்போதாவது கிடைக்கிற சினிமா வாய்ப்பையும் விடவில்லை. அப்போது மயிலாப்பூரில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் கலைக்குழுவில் இணையும் வாய்ப்பு குமரிமுத்துவுக்குக் கிடைத்தது. அங்கே நடிகர் சாமிக்கண்ணுவும் இருந்தார்.

’இது நம்மஆளு’ குமரிமுத்து
’இது நம்மஆளு’ குமரிமுத்து

இயக்குநர் மகேந்திரன், அந்தக் குழுவுக்கு கதையையும் வசனங்களையும் எழுதிக்கொடுத்துவந்தார். அப்போது சாமிக்கண்ணுவும் குமரிமுத்துவும் அவருக்கு நண்பர்களானார்கள். மகேந்திரன் படம் இயக்கிய போது இவர்களையும் தொடர்ந்து தன் படங்களில் பயன்படுத்திக் கொண்டார். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் அட்டகாசமான கதாபாத்திரங்களை சாமிக்கண்ணுவுக்கும் குமரிமுத்துவுக்கும் வழங்கினார். அப்படித்தான் ‘உதிரிப்பூக்கள்’ முதலான பல படங்களில் அட்டகாசமான கதாபாத்திரங்களெல்லாம் குமரிமுத்துவுக்குக் கிடைத்தன.

இதன் பின்னர், குமரி முத்துவுக்கு தொடர்ந்து பல படங்கள் வெளியாகின. கங்கை அமரன் இயக்கிய ‘கோழி கூவுது’ கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘புரியாத புதிர்’ முதலான படங்கள் என எண்பதுகளில் ஹிட்டான படங்களில்லெல்லாம் குமரிமுத்துவுக்கும் ஒரு கேரக்டர் நிச்சயம் உண்டு. அந்தச் சமயத்தில்தான் குமரிமுத்துவிற்குள்ளிருந்து வெடித்து வந்த வெடிச்சிரிப்புக்கு பலத்த கரவொலி கிடைத்ததை திரையுலகம் உணர்ந்தது.

ஒரு படத்தில் ஏழெட்டுக் காட்சிகளில் குமரிமுத்து நடிக்கிறாரென்றால், நான்கைந்து காட்சிகளில், ‘’அண்ணே... உங்க டிரேட் மார்க் சிரிப்பை நடுவுல செருகிருங்கண்ணே’’ என்று இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முன்னணி நடிகர்களும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். அந்தச் சிரிப்புக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.

நகைச்சுவையில் மட்டுமல்லாது கேரக்டர் நடிகராகவும் வலம் வந்தார் குமரி முத்து. அப்படி சில தருணங்களில் நம்மை அழவும் வைத்துவிடுவார். இயக்குநர் பாக்யராஜ், எப்போதுமே தன் படங்களில், பழைய நல்ல கலைஞர்களை நல்ல கதாபாத்திரத்துக்குப் பயன்படுத்திக் கொள்வார். ஜெய்கணேஷ், கல்யாண்குமார், நளினிகாந்த், ஷோபனா, தீபா, கே.கே.செளந்தர் என பல நடிகர்களுக்கு ‘லைஃப் டைம்’ கேரக்டர் கொடுத்து கெளரவப்படுத்தியவர் பாக்யராஜ்.

’இது நம்ம ஆளு’ மனோரமாவுடன் குமரிமுத்து
’இது நம்ம ஆளு’ மனோரமாவுடன் குமரிமுத்து

அப்படித்தான் ‘இது நம்ம ஆளு’ படத்தில் குமரி முத்துவுக்கு அட்டகாசமான கதாபாத்திரத்தை வழங்கினார். சொல்லப் போனால், படத்தில் குமரிமுத்துவுக்கு கைத்தட்டல் கிடைக்கும் காட்சிகள் பல உண்டு. அவ்வளவு ஏன்... வருகிற காட்சிகளிலெல்லாம் கைத்தட்டலால் ஸ்கோர் செய்துகொண்டே வந்தார் குமரிமுத்து. மனோரமாவுக்கு கணவராக, பாக்யராஜின் தந்தையாக, முடி திருத்துநராக குமரிமுத்து, நம்மைக் கலகலக்கவும் செய்திருப்பார். கலங்கடிக்கவும் செய்திருப்பார்.

சினிமாவில் நடித்துக்கொண்டே கலைநிகழ்ச்சிகளையும் நடத்தினார் குமரி முத்து. திமுக தலைவர் கருணாநிதி மீதும் திமுகவின் மீதும் கொண்ட அபிமானத்தாலும் பிரியத்தாலும் திமுகவின் தலைமைக்கழகப் பேச்சாளராகவும் வலம் வந்தார் குமரிமுத்து. சினிமாவோ நாடகமோ, கலைநிகழ்ச்சியோ அரசியல் பிரச்சாரமோ... குமரிமுத்துவை எங்கே பார்த்தாலும் ரசிகர்கள், ‘’ஒருதடவை உங்க ஸ்டைலான சிரிப்பைச் சிரிச்சுக் காட்டுங்க சார்’’ என்று கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

மனதுக்குள் எத்தனையோ துயரங்களைச் சுமந்து கொண்டிருந்தாலும் குமரிமுத்து எனும் காமெடிக் கலைஞன், அந்தத் துக்கமூட்டைகளையெல்லாம் மறைத்துவைத்துவிட்டு, ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக, தன்... ‘ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஹாஹாஹாஹா...’ என்கிற குபீர் ரக, வெடிச்சிரிப்பை வழங்கிக் கொண்டே இருந்தார். குமரி முத்துவின் அடையாளமாகவே, காமெடியின் புது ஸ்டைலாகவே அந்தச் சிரிப்பு தனித்து ஜொலித்து ரசிக்கவைத்தது!

700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த குமரிமுத்து, 2016-ம் ஆண்டு, பிப்ரவரி 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

’’குமரிமுத்து அருமையான, உணர்வு ரீதியான கலைஞன். தமிழ் சினிமா இன்னும் கொஞ்சம் அந்தக் கலைஞனைப் பயன்படுத்தியிருக்கவேண்டும். பலவிதமான உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடிய யதார்த்தமான நடிகன் குமரிமுத்து’’ என்று இயக்குநர் மகேந்திரன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

மகேந்திரன் சொன்னது சத்திய வார்த்தை. தமிழ் சினிமா... குமரிமுத்துவை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். அவரிடமிருந்து பண்பட்ட நடிப்பை இன்னமுமே பெற்றுத் தந்திருக்கலாம். மகேந்திரன் முதலான இயக்குநர்களுக்கு இருந்ததுபோல், குமரிமுத்துவுக்கே கூட அந்த ஏக்கமும் துக்கமும் உண்டு. அவரின் ரசிகர்களுக்கும்தான்!

ஆனால், தமிழ் சினிமா முழுமையாக அந்தக் கலைஞனைப் பயன்படுத்தாவிட்டாலும் நம்மில் மறக்க முடியாத மாபெரும் கலைஞனாக, நம் மனதுக்குள் இன்றைக்கும் நிறைந்திருக்கிறார் குமரிமுத்து!

தமிழ் சினிமாவில் சிலருக்கான இடங்கள், அவர்களின் மறைவுக்குப் பின்னர் நிரப்பப்படாமலேயே இருக்கும். குமரி முத்துவின் உன்னத குணச்சித்திர நடிப்பும் அந்த குபீர்ச்சிரிப்பும் இன்னும் நிரப்பப்படாமல்தான் இருக்கிறது!

- குமரிமுத்து நினைவுநாளில் அவரைப் போற்றுவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in