’குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’ தந்த கு.மா.பா!

கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் நினைவுநாளில் சிறப்புப் பகிர்வு
கு.மா.பாலசுப்ரமணியம்
கு.மா.பாலசுப்ரமணியம்

’மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுமே’ என்ற பாடலைக் கேட்டு மகிழாத இசை ரசிகர்கள் இருக்க முடியாது. ‘குங்குமப்பூவே... கொஞ்சும்புறாவே...’ என்று சந்திரபாபுவின் குரலில் ஒலித்த பாடலைக் கேட்டு குதூகலித்துபோனோம். இன்றைக்குக் கேட்டாலும் அதே குதூகலமும் கொண்டாட்ட மனநிலையும் நமக்குள் வந்துவிடும் அல்லவா? ஆனால், நாம் இசையை ரசிப்போம். இசையமைப்பாளர் பற்றி அறிந்துகொள்ள முற்படுவதில்லை. பாடகரின் குரலில் மயங்குவோம். பாடலை எழுதியவர் இவரா, அவரா என்று கேள்விகேட்டுக்கொண்டு பதில் தெரியாமலேயே இருந்துவிடுவோம்.

தமிழ்த் திரையுலகில், பட்டுகோட்டையார் போல், கவியரசர் கண்ணதாசனைப்போல், கவிஞர் வாலியைப் போல், கவிஞர் வைரமுத்துவைப் போல்... என்று ஆகச்சிறந்த கவிஞர்களின் பட்டியல் நீளமானது. தனித்துவமான பாடல் வரிகளால், அற்புதமான பாடல்களையெல்லாம் கொடுத்த கு.மா.பாலசுப்ரமணியம் அவர்களில் ஒருவர்!

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் ஜில்லாவில், வேளுக்குடி எனும் கிராமத்தில், 1920-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி பிறந்தார் கு.மா.பாலசுப்ரமணியம். அப்பா மாரிமுத்து. அம்மா கோவிந்தம்மாள். நான்கு வயது குழந்தையாக இருக்கும்போதே, தந்தையை இழந்த பாலசுப்ரமணியம் அம்மாவின் அரவணைப்பிலும் அன்பிலுமாக வளர்ந்தார்.

அவருடைய அம்மாவுக்கு இசைஞானம் உண்டு. தேவாரம், திருவாசகம் முதலான பாடல்களையெல்லாம் தாமே இசைக்கக் கூடியவராக, பாடக்கூடியவராக இருந்தார் அம்மா. இதையெல்லாம் கேட்டுக்கேட்டு வளர்ந்த பாலசுப்ரமணியத்துக்குத் தமிழ் மீது காதல் மலர்ந்தது. இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பாடல்களின் மீது மயக்கம் வந்தது. படிக்க ஆசை இருந்தது. ஆனால் வறுமை குடும்பத்துக்குள் குடியிருக்க, ஆறாவதுக்கு மேல் படிக்க முடியவில்லை.

Ramji

‘வேலைக்குப் போனால்தான் காசு கிடைக்கும். காசு கிடைத்தால்தான் சாப்பிட முடியும்’ எனும் நிலை. விவசாயக்கூலி வேலைக்குப் போனார். மீதமுள்ள நேரத்தில் மளிகைக்கடையில் பொட்டலம் மடிக்கும் வேலைக்குப் போனார். பிறகு, ஜவுளிக்கடைக்கு வேலைக்குச் சென்றார். இப்படியாக சிறுவயதில் பாலசுப்ரமணியம் பார்க்காத வேலை இல்லை.

பொட்டலம் மடிக்கும் வேலையில், அவர் கையில் கட்டுக்கட்டாகப் புத்தகங்கள் வந்து சேர்ந்தன. அவற்றையெல்லாம் படித்துவிட்டுத்தான் அந்தப் பேப்பரைக்கொண்டு, பொட்டலம் போடுவார் பாலசுப்ரமணியம். கதைகளையும் கவிதைகளையும் நாவல்களையும் படிக்கப் படிக்க,’நாமே கதை எழுதினால் என்ன?’ என்று அவருக்குள்ளே சிந்தனை. வேலை நேரம் போக மீதமுள்ள நேரங்களில் வெற்று அரட்டையில்லை. குறட்டைத் தூக்கமில்லை. அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் எழுதினார். கதை கதையாக எழுதித்தள்ளினார்.

பிரபல எழுத்தாளரும் கவிஞருமான கா.மு.ஷெரீப், ’மேதாவி’ என்கிற கோ.த.சண்முகசுந்தரம் இருவரும் பாலசுப்ரமணியத்தின் ஊர்க்காரர்கள். நல்ல நண்பர்களும்கூட. சி.பா.ஆதித்தனார் அப்போது மதுரையிலிருந்து வெளியிட்ட ’தமிழன் ’பத்திரிகையின் துணை ஆசிரியராகச் சேர அவர்கள் இருவரும் வழிகாட்டினர். ‘தமிழன்’ பத்திரிகையில் பாலசுப்ரமணியம் சேர்ந்தார். கோவையில் இருந்து வெளியான ‘திருமகள்’ இதழில் வேலை பார்த்தார். ஒருபக்கம் அவருடைய எழுத்துகளின் வசீகரம் வாசகர்களைக் கவர்ந்தன. 1947-ல் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஐந்து மகன்கள். இரண்டு மகள்கள்.

கொழும்பு நகரில் இருந்து வெளியான ‘வீரகேசரி’ நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஒருகட்டத்தில், ‘தமிழன் குரல்’ எனும் மாதமிரு முறை இதழை நடத்தினார். நஷ்டமானதும் கஷ்டமான அனுபவங்களுமே மிச்சம். அப்போதுதான் ம.பொ.சி-யின் நட்பு கிடைத்தது. சென்னைக்கு வந்தார். ம.பொ.சி-யின் ‘தமிழ்முரசு’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியில் இணைந்தார். அங்கே... தமிழாசிரியரான திருவேங்கடம் என்பவரின் நட்பு கிடைத்தது. இருவரும் நிறைய பேசிக்கொண்டார்கள். கு.மா.பா-வின் எழுத்தில் உள்ள ஜாலத்தை வியந்த திருவேங்கடம், அவருக்கு மரபுக்கவிதைகளின் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். தினமும் ஐந்தாறு மரபுக்கவிதைகளை எழுதிவிட்டுத்தான் தூங்குவது என வழக்கப்படுத்திக்கொண்டார் கு.மா.பா.

1949-ம் ஆண்டு. கோவையில் கவியரங்கம். பாரதிதாசனார் தலைமையில் நடந்த கவியரங்கில் கலந்துகொண்டார். அவரின் கவிதையைக் கேட்டு பாரதிதாசன் வெகுவாகப் பாராட்டினார். ம.பொ.சி. தமிழரசுக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று ஒருபக்கம் அரசியல் பணிகளையும் மேற்கொண்டார் கு.மா.பா. பாரதிதாசன் மீது மாறா அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். ’மிகப்பெரிய திறமை உனக்கு இருக்கிறது. பெரியாளாக வருவாய்’ என்று பாரதிதாசன் அவரிடம் சொல்லிக்கொண்டேஇருந்தார்.

அந்த சமயத்தில்தான் ஏவி.எம் நிறுவனம் கு.மா.பா-வை அழைத்து வேலைக்குச் சேர்த்துக்கொண்டது. ஏவி.எம் கதை இலாகாவில் மாத சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தார். பேரறிஞர் அண்ணா எழுதிய ’ஓர் இரவு’ படத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அப்போது அண்ணாவின் வசனத் தாள்களைப் படியெடுக்கும் பணி அவருக்குக் கிடைத்தது. ‘இந்தக் காட்சிக்கு முன்னதாக ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்குமே...’ என்று யோசித்தார். பாடல் எழுதினார். எழுதியதைக் காட்டினார். எல்லோருக்கும் பிடித்துப்போனது. அந்தப் பாடலைப் பயன்படுத்தினார்கள். ‘இன்னும் ரெண்டு பாட்டையும் எழுதுங்க’ என்று ஊக்கப்படுத்தினார்கள்.

வாய்ப்பு தேடி வரவில்லை. அப்படியொரு வாய்ப்பை, தானே உருவாக்கிக்கொண்டார். அடுத்தடுத்து படங்களுக்குப் பாட்டெழுத வாய்ப்புகள் கிடைத்தன. ’கொஞ்சும் சலங்கை’ படத்துக்கும் ‘மகாகவி காளிதாஸ்’ படத்துக்கும் திரைக்கதை, வசனங்கள் எழுதினார். ஒருபக்கம் படத்துக்கு வசனங்களை எழுதினார். இன்னொரு பக்கம் பாடல்களை எழுதினார். கு.மா.பா-வின் எழுத்துகளுக்கு தனி மரியாதையும் வரவேற்பும் இருந்தன. ’சிங்காரவேலனே தேவா’ என்ற பாடலை மறந்துவிட முடியுமா என்ன?

சிவாஜி இரட்டை வேடங்களில் கலக்கிய ‘உத்தமபுத்திரன்’ படத்தின் ‘யாரடி நீ மோகினி’ பாடலானது இசைக்காகவும் சிவாஜியின் ஸ்டைலுக்காகவும் பாடியவர்களுக்காகவும் மட்டும் ரசிக்கப்படவில்லை. அந்தப் பாடலை எழுதிய கு.மா.பாலசுப்ரமணியம் வரிகள், எல்லோருக்கும் மனப்பாடமாகின. முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்கள் ரசிகர்கள். சிவாஜி நடித்த ‘சபாஷ் மீனா’ படத்தில் இரண்டு பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ‘காணா இன்பம் கனிந்ததேனோ’ என்ற பாடலும் ‘சித்திரம் பேசுதடி’ பாடலும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. இந்த இரண்டு பாடல்களையும் கு.மா.பாலசுப்ரமணியம்தான் எழுதினார்.

Ramji

‘மரகதம்’ எனும் படத்தில் சந்திரபாபுவுக்காக அவர் எழுதிய ’குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’ பாடல் பட்டிதொட்டியெங்கும் முணுமுணுக்கப்பட்டது. தவிர, சந்திரபாபுவுக்கு மிகப்பெரிய மார்க்கெட் வேல்யூவையும் இந்தப் பாடல் கொடுத்தது.

’சந்துல தானா சிந்துகள் பாடிதந்திரம் பண்ணாதே/ நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே பறிக்க எண்ணாதே / போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா / போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா’ என்று எழுதி அசத்தியிருப்பார்.

‘ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்சலசலக்கையிலே / என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு என்னமோ பண்ணுதடி’ என்று ஜாலியாக எழுதி நம்மை குஷிப்படுத்தியிருப்பார் கு.மா.பா.

‘சித்திரம் பேசுதடி’ பாடலும் அப்படித்தான்!

’முத்துச் சரங்களைப் போல் முத்துச் சரங்களைப் போல் / மோகனப் புன்னகை மின்னுதடி / முத்துச் சரங்களைப் போல் / மோகனப் புன்னகை மின்னுதடி’ என்று காவியம் படைத்திருப்பார் பாடலில்!

’தாவும் கொடி மேலே/தாவும் கொடி மேலே/ஒளிர் தங்கக்குடம் போலே’ என்று வர்ணித்திருப்பார்.

‘என் மனம் நீ அறிவாய் / உந்தன் எண்ணமும் நானறிவேன்/ இன்னமும் ஊமையைப் போல் மௌனம் ஏனடி தேன் மொழியே’ என்று காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதை பாடியிருப்பார். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இனிமையான பாடல் எனத் தலைமுறைகள் கடந்தும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

’தங்கமலை ரகசியம்’ படத்தில், ’அமுதைப் பொழியும் நிலவே’ பாடலில்,

’இதயம் மேவிய காதலினாலே ஏங்கிடும் அல்லியைப் பாராய் / புதுமலர் வீணே வாடிவிடாமல் / புன்னகை வீசி ஆறுதல் கூற / அருகில் வராததேனோ’ என்று கவிதையில் நிலவையும் காதலையும் மையால் நிரப்பிக் குழைத்துக் குழைத்துக் கொடுத்தார் கு.மா.பா.

’வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதி ஹிட்டாக்கினார். ‘எந்தன் உள்ளம் துள்ளிவிளையாடுவதும் ஏனோ’ என்று ‘கணவனே கண்கண்டதெய்வம்’ படத்தில் எழுதினார். இப்படி எத்தனையெத்தனையோ பாடல்களை நமக்குத் தித்திக்கும் விருந்தெனப் படைத்திட்ட கு.மா.பா. என்று செல்லமாகவும் பிரியமாகவும் அழைக்கப்படுகிற கு.மா.பாலசுப்ரமணியம், 1994-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி, 74-வது வயதில் மறைந்தார்.

மறைந்து 28 ஆண்டுகளாகியும் எப்போதும் மறக்காமல் சரித்திரத்துவம் மிக்கவராக, தன் எழுத்துகளால், பாடல்களால் ஜீவித்துக்கொண்டே இருப்பார் கு.மா.பா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in