ரஜினி படத்தில் நெல்சனுடன் இணையும் கே.எஸ். ரவிக்குமார்?

ரஜினி படத்தில் நெல்சனுடன் இணையும் கே.எஸ். ரவிக்குமார்?

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணையும் படத்தில் நெல்சனுடன் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் திரைக்கதையில் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘சிறுத்தை’ சிவாவின் ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் தனது 169-வது படத்தை அறிவித்தார். ‘அண்ணாத்த’ படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்கள் காரணமாக ரஜினியுடன் நெல்சன் இணையும் இந்த படத்தின் இயக்குநர் மாற்றப்படுகிறார் எனவும் இந்த படமே கைவிடப்படுகிறது எனவும் பலவாறு தகவல்கள் பரவின.

ஆனால், நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல்களை மறுத்து இந்த கூட்டணி இணைவது நடக்கும் என உறுதிப்படுத்தினர். இதையடுத்து, ரஜினி படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பு முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

தற்போது படத்தின் திரைக்கதை வேலைகளில் நெல்சன் கவனம் செலுத்தி வருகிறார். ’கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ என தன்னுடைய முந்தைய படங்களில் ‘டார்க் ஹுயூமர்’ கதைகளுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் நெல்சன். அந்த வகையில் அவர் இயக்கும் ரஜினி 169 படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்டு கமர்ஷியலாக கதையை எடுத்துச் செல்ல வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதற்கான திரைக்கதையின் இறுதி வடிவத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்து இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

‘முத்து’, ‘படையப்பா’ என ரஜினிகாந்த்தின் சினிமா பயணத்தில் பல கமர்ஷியல் வெற்றிப் படங்களை கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். அவரும் நெல்சனுடன் திரைக்கதையில் இணைந்திருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திரைக்கதைக்கான கலந்துரையாடல் ரஜினிகாந்த்துடன் வாரா வாரம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கே.எஸ். ரவிக்குமாரும் திரைக்கதையில் பணியாற்றுகிறார் என்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in