குடும்பக் கதைகளின் நாயகன் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்!

நினைவு தின சிறப்புப் பகிர்வு
’இயக்குநர் திலகம்’ கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
’இயக்குநர் திலகம்’ கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

குடும்பப் படங்களை எடுப்பதில் வல்லவர் என்று பேரெடுத்தவர் இயக்குநர் பீம்சிங். இவரின் படங்களைக் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம். ரசிக்கலாம். ஆனால், குடும்பத்துக்குள் நடக்கிற சின்னச்சின்னப் பிரச்சினைகளையும் அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் முன்வைக்கும் திரைப்படங்களை எடுத்து அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். பெண்களின் எண்ண ஓட்டங்களை திரையில் கொண்டுவருவதில் சூரர் என்று கொண்டாடப்பட்டவர் இவர். பெண்களின் கூட்டம், படத்தின் முதல்நாளிலே பெருமளவிற்கு வந்தார்களென்றால், அது... கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படங்களுக்குத்தான் என்று அப்போது சொல்வார்கள்.

மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் மல்லியம் என்றொரு கிராமத்தைச் சேர்ந்தவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (பின்னாட்களில் இங்கிருந்து வந்த மல்லியம் ராஜகோபாலும் பின்னாளில் ஜெயித்தார்!.

சிறுவயதிலிருந்தே பாட்டும் கூத்தும் பிடித்துப் போனது. கதைகளை வாசிப்பதும் எழுதுவதிலும் லயிப்பு ஏற்பட்டது. பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருப்பதுதான் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது.

சென்னைக்குப் புறப்பட்டு வந்தவருக்கு சினிமாவில் சேர வேண்டும் என்பதுதான் குறியாக இருந்தது. சினிமாவுக்குள் என்ன வேலை செய்ய வேண்டும் என்கிற திட்டமிடலெல்லாம் இல்லை. சினிமா கனவில் நுழைந்தவரிடம், ‘எழுதுவீர்களா?’ என்று கேட்டதற்கு ‘எழுதுவேன்’ என்று சொன்னார். பிறகுதான் பாடலை எழுதச் சொன்னார்கள் என்பது தெரிந்தது. ஆனாலும் கொடுத்த சந்தத்திற்குத் தக்கப்படி பாடலை எழுதிக் கொடுத்தார். ஆக, ஆரம்பத்தில் பாடல்களைத்தான் எழுதினார். ‘உத்தமபுத்திரன்’ படத்தில் வரும் ‘உன்னழகைக் கன்னியர்கள் கண்டபின்னாலே’ என்ற பாடல் கே.எஸ்.ஜி எழுதியதுதான்!

ஐம்பதுகளின் தொடக்கத்தில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தவருக்கு படங்களுக்கு வசனங்கள் எழுதும் வாய்ப்புகள் கிடைத்தன. கிருஷ்ணன் பஞ்சு முதலான மிகப்பெரிய இயக்குநர்களின் படங்களுக்கெல்லாம் வசனங்கள் எழுதினார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். 60-களில், வசனகர்த்தாவாக தனித்த அடையாளத்துடன் திகழ்ந்தவர், ஒருகட்டத்தில் இயக்குநரானார். எஸ்.எஸ்.ஆர் - விஜயகுமாரியை வைத்து, ‘சாரதா’ (1962) எனும் படத்தை இயக்கினார். கண்ணதாசனின் வரிகளில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

அந்தப் படத்தின் கதையையே அப்போது திரையுலகிலும் ரசிகர்கள் வட்டாரத்திலும் பரவலாகப் பேசப்பட்டது. திருமணமான அன்று, கல்லூரிப் பேராசிரியர் கல்லூரி விழா ஏற்பாடுகளைப் பார்வையிடுவார். அப்போது மாடியிலிருந்து கீழே விழுந்துவிடுவார். அந்தப் பாதிப்பில் தாம்பத்யத்தில் ஈடுபட முடியாத நிலை உருவாகிவிடும்; அது மனைவிக்கும் அம்மாவுக்கும் தெரியும். இப்படியான உணர்ச்சிப் பிழம்புகளின் அடுக்குகள்தான் கதை. வித்தியாசமான அந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

’தெய்வத்தின் தெய்வம்’, ‘கைகொடுத்த தெய்வம்’, ‘பேசும் தெய்வம்’, ’செல்வம்’, ‘சித்தி’ என்று இவர் எடுத்த படமெல்லாம் எல்லோராலும் பாராட்டப்பட்டன. பத்மினியையும் எம்.ஆர்.ராதாவையும் முதன்மைக் கதாபாத்திரங்களாக வைத்துக்கொண்டு, ஜெமினி கணேசன், முத்துராமனையும் உடன் சேர்த்துக்கொண்டு ‘சித்தி’ படத்தை கலக்கியெடுத்திருப்பார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம்.

நடிகை கே.ஆ.விஜயாவின் முதல் படமான ‘கற்பகம்’ படத்தை இயக்கினார். அதில்தான் கவிஞர் வாலிக்கு ஒரேயொரு பாடல் கொடுக்கப் போய், அவரின் திறனை அறிந்து வியந்து, எல்லாப் பாடல்களையும் கொடுத்தார். ஒரு நடிகர் அல்லது நடிகையின் ஆரம்பப் பாடத்தையும் 100-வது படத்தையும் ஒரே இயக்குநர் இயக்கியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், கே.ஆர்.விஜயாவின் முதல் படமான ‘கற்பகம்’, 100-வது படமான ‘நத்தையில் முத்து’, 200-வது படமான ‘படிக்காத பண்ணையார்’ முதலான படங்களை கே.எஸ்.ஜி இயக்கினார். அதேபோல், ‘குறத்தி மகன்’ படத்தில் நடிக்கவைத்த ஜெயசித்ராவின் 100-வது படமான ‘நாயக்கரின் மகள்’ படத்தையும் இவரே இயக்கினார்.

ஒரு சின்ன விஷயத்தை வைத்துக்கொண்டு, கதையை நூல் பிடித்து அழகிய திரைக்கதையாக்குவது கே.எஸ்.ஜி-க்கு கைவந்த கலை. ‘செல்வம்’ படத்தில் ஜாதகம், ஜோதிடம் எனும் விஷயத்தை வைத்துக்கொண்டு விளையாடியிருப்பார். ‘நாமதான் அழகு’ என்று பிரமீளா கர்வத்துடன் இருப்பதை வைத்துக்கொண்டு ‘வாழையடி வாழை’ படத்தை எடுத்தார். இதுவும் வெற்றிப்படமாக அமைந்தது.

டைட்டில் முடிந்ததும், ஹீரோ அறிமுகம், பாடல், காமெடி மாந்தர்கள் என்றெல்லாம் வரையறைக்குள் செல்லமாட்டார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். எடுத்ததுமே, கதைக்குள் நுழைந்துவிடுவார். அதேபோல், காமெடிக்கென தனியாக நடிகர்களெல்லாம் போட்டுக்கொள்ளமாட்டார். கதைக்குத் தேவையாக இருந்தால்தான் காமெடியைப் பயன்படுத்துவார். அதேபோல், ஆறேழு பாடல்கள் வேண்டும், படம் ஆரம்பித்ததும் பாட்டு ஒன்று வைக்க வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்யமாட்டார். கதைக்குத் தேவையாக இருந்தால்தான் பாடலை நுழைப்பார். ‘வாழையடி வாழை’ படத்தில் படம் தொடங்கி அரைமணி நேரம் கழித்துத்தான் பாடலே வரும்.

கே.எஸ்.ஜி படங்களென்றாலே எஸ்.வி.ரங்காராவ் நிச்சயம் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிடுவார். அதுவும் மிக அருமையான கதாபாத்திரமாகத்தான் இருக்கும். அதேபோல் சகஸ்ரநாமமும் வந்துவிடுவார்.

‘பணமா பாசமா’ படத்தில், வரலட்சுமியை ஆளுமைமிக்க மாமியாராகப் போட்டுவிட்டார். ஆனால், வரலட்சுமியிடம் அந்த கம்பீரமும் கோபமும் ஆவேசமும் இல்லை. ஐந்து நாள் படப்பிடிப்புக்குப் பிறகு சாவித்திரியிடம், “வரலட்சுமியை நடிக்க வைங்கண்ணேனு நீ சொன்னே. எனக்கும் சரியா இருக்கும்னு தோணுச்சு. ஆனா அஞ்சு நாளும் நான் எதிர்பார்த்தபடி அவங்க நடிக்கலை. நாளைக்கி எனக்குத் திருப்தி வர்ற மாதிரி நடிக்கலேன்னா, அதுல நீதான் நடிக்கணும். வேற வழியே இல்ல’’ என்று சொல்லிவிட்டார் கே.எஸ்.ஜி. முன்னதாக மாமியார் கேரக்டருக்கு சாவித்திரியைத்தான் கேட்டிருந்தார். ஆனால் மாப்பிள்ளையாக ஜெமினி கணேசன் நடிக்கும்போது, மாமியாராக தான் நடித்தால் பொருத்தமாக இருக்காது என்று தவிர்த்துவிட்டார் சாவித்திரி. இதையடுத்து, உடனே வரலட்சுமியின் வீட்டுக்குச் சென்று, கே.எஸ்.ஜி எதிர்பார்ப்பதையெல்லாம் சொல்லி உணர்த்தினார் சாவித்திரி.

மறுநாள் முதல் வெளுத்துவாங்கினார் வரலட்சுமி. இன்றைக்கும் அந்தப் படத்தைப் பார்த்தால், ‘வரலட்சுமியைத் தவிர வேறு யாரும் இந்த அளவுக்குப் பண்ணமுடியாது’ என்றுதான் சொல்வோம். கம்பீரமும் திமிரும் கலந்து நடித்திருப்பார்.

கே.எஸ்.ஜி இயக்கத்தில் சிவாஜியும் பத்மினியும் ‘பேசும் தெய்வம்’ படத்தில் நடித்தார்கள். இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, சில முக்கியமான காட்சிகள், உணர்ச்சிபூர்வமான காட்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து ஆறேழு நாட்கள் அப்படியான காட்சிகள் எடுத்துக்கொண்டிருந்தார் கே.எஸ்.ஜி.

ஒவ்வொரு காட்சி எடுத்தபோதும் பத்மினியை எல்லோருக்கு முன்பும் பாராட்டிக்கொண்டே இருந்தார். அந்தக் காட்சியில் நடித்த சிவாஜி, ஒவ்வொரு நாளும் இதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில், ‘நாம சரியா நடிக்கலையோ...’ என்று சிவாஜிக்கு வருத்தம் வந்துவிட்டது.

ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகு, அன்றிரவு 12 மணிக்கு, தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த சிவாஜி, அப்போதே கே.எஸ்.ஜி-க்கு போன் போட்டு மனதில் பட்டதையெல்லாம் சொல்லி ரொம்பவே வருந்தினாராம். “நான் சரியா நடிக்கலேன்னா சொல்லிருங்க. திரும்பவும் அதையெல்லாம் நடிச்சிக் கொடுக்கறேன். பத்மினியை எல்லாருக்கு முன்னாடியும் பாராட்டுறீங்க. அப்போ, சுத்தி இருக்கறவங்க, நான் சரியா நடிக்கலைன்னுதானே நினைப்பாங்க” என்று சொல்லிவிட்டு துக்கம் தாங்காமல் பேச்சும் வராமல் அப்படியே ரிசீவரை வைத்துக்கொண்டே இருந்தார்.

உடனே கே.எஸ்.ஜி. “என்ன கணேசன்... ஒரு சாதாரணக் காட்சில கூட பிரமாதமா நடிக்கிறவர் நீங்க. நீங்களே இப்படி நினைக்கலாமா. பத்மினி நடிப்புக்குச் சவால் விடுற மாதிரியான காட்சிகள் எல்லாமே! அவங்களைக் கொஞ்சம் ஊக்கப்படுத்தி, பாராட்டினாத்தான் இன்னும் நான் நினைக்கிற பெட்டர் வரும்னுதானே அப்படிச் சொல்லிக்கிட்டே இருந்தேன். உங்க நடிப்புல என்னிக்கி, யார்தான் குறைசொல்ல முடியும்? சின்னக்குழந்தையாட்டம் நடந்துக்கறீங்களே?” என்று சொல்ல, சிவாஜி பிறகுதான் அமைதியானாராம்.

யாரை, எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதையெல்லாம் நுணுக்கமாக அறிந்துவைத்திருப்பவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவரின் வசனங்களும் ஷார்ப்பாக இருக்கும். முதல் படமான ‘சாரதா’வுக்கு, மூன்றாவது சிறந்த படம் என தேசிய விருது கிடைத்தது. ’கற்பகம்’ படத்துக்கு இரண்டாவது சிறந்த படம் எனும் விருது பெற்றார். ’கைகொடுத்த தெய்வம்’ படத்துக்காக குடியரசுத் தலைவரின் கையால் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார்.

எம்ஜிஆருக்கு அவரது அண்ணன் சக்ரபாணி உதவியதுபோல், சிவாஜிக்கு சகோதரர் சண்முகம் உடனிருந்தது உதவியது போல, முக்தா சீனிவாசனுக்கு அவரின் சகோதரர் முக்தா வி.ராமசாமி பக்கபலமாக இருந்தது போல, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு அவரின் சகோதரர் சபரிநாதன் மிகப்பெரிய பலமாக இருந்தார்.

அற்புதமான திரைப்படங்களை உருவாக்கி, ’இயக்குநர் திலகம்’ என்று கொண்டாடப்பட்ட கே.எஸ்.ஜி, 2015 நவம்பர் 14-ம் தேதி மறைந்தார். பெண்ணின் உணர்வுகளையும், குடும்ப உறவுக்குள் நிகழ்கிற சம்பவங்களையும் பேசிய அவரின் படங்கள் ஒவ்வொன்றும் இன்றைக்கும் என்றைக்கும் ஏதோ ஒன்றை நமக்குப் பாடங்களாக சொல்லிக்கொண்டே இருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in