‘தமிழ், தெலுங்கே போதும்’ - பாலிவுட் வாய்ப்பை நிராகரித்த சூர்யா ஹீரோயின்

‘தமிழ், தெலுங்கே போதும்’ - பாலிவுட் வாய்ப்பை நிராகரித்த சூர்யா ஹீரோயின்

தெலுங்கில் ’உப்பென்னா’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. தொடர்ந்து 'ஷ்யாம் சிங்கா ராய்', 'பங்கர்ராஜூ' ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். லிங்குசாமி இயக்கிய ’தி வாரியர்’ படம் மூலம் தமிழுக்கும் வந்தார். அடுத்து பாலா இயக்கும் ’வணங்கான்’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்துவருகிறார். தமிழ், தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நாக சைதன்யா ஜோடியாகவும் நடிக்கிறார்.

நிதின் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள, 'மச்சர்லா நியோஜாகவர்கம்' ( Macharla Niyojakavargam) என்ற தெலுங்கு படம் 12-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பில் கீர்த்தி ஷெட்டி தனது திரையுலகப் பயணம் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது, “என் முதல் தெலுங்கு படமான ’உப்பென்னா’வில் விஜய் சேதுபதி போன்ற பன்முகத்திறமை கொண்ட நடிகருடன் நடித்தது பெருமையாக இருக்கிறது. அதில் என் கேரக்டரை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. ஒவ்வொரு படத்தையும் என் கேரக்டர் பிடித்தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். இந்தப் படமும் அப்படித்தான். ’தி வாரியர்’ படம் பற்றி கேட்கிறார்கள். சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சஜகம்தான். அதை ஓர் அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன்” என்று கீர்த்தி ஷெட்டி தெரிவித்தார்.

மேலும், “எனக்கு பாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வந்தன. நிராகரித்துவிட்டேன். தமிழ், தெலுங்கில் சிறந்த கதைகளில் நடிப்பதை விரும்புகிறேன். ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். இப்போது அதுபோன்ற கதைகளில் நடிக்கும் எண்ணமில்லை” என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in