ஷகீலா வேதனை: ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’

பொது நிகழ்வில் பங்கேற்க அனுமதி மறுப்பு
ஷகீலா வேதனை: ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’

பொது நிகழ்வில் பங்கேற்க தனக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டதால் நடிகை ஷகீலா வேதனை தெரிவித்துள்ளார்.

மலையாள திரைப்பட இயக்குநரான ஒமர் லுலு, தனது புதிய திரைப்படத்துக்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழாவினை நேற்று(நவ.18) நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக கோழிக்கோடு நகரில் அமைந்துள்ள மால் ஒன்றில் முறைப்படி அனுமதி பெற்று, விழா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள். ஆனால் நடிகை ஷகீலா தலைமை ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடப்பதாக வெளியான தகவலை அடுத்து மால் நிறுவனம் விழாவுக்கான அனுமதியை ரத்து செய்தது. இது தொடர்பாக இயக்குநர் லுலு மற்றும் நடிகை ஷகீலா ஆகியோர் மால் நிர்வாகத்தின் மீது இன்று குற்றம்சாட்டி உள்ளனர்.

ஒமர் லுலு உடன் ஷகீலா
ஒமர் லுலு உடன் ஷகீலா

ஹேப்பி வெட்டிங், தமாக்கா, ஒரு அடார் லவ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் ஒமர் லுலு. ’நல்ல சமயம்’ என்ற தலைப்பிலான இவரது படத்துக்கு தணிக்கை வாரியம் ’ஏ’ சர்டிபிகேட் வழங்கியுள்ளது. கதை கோரிய அம்சங்களை காட்சிகளில் வைத்துள்ளதால் இந்த சான்றினை தந்திருக்கிறார்கள் என்ற லுலு, நடிகை ஷகீலாவை தலைமை விருந்தினராக வைத்து புதிய திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்கு திட்டமிட்டார். ’ஏ’ திரைப்படத்துக்கான ட்ரெய்லரை ஷகீலா வெளியிடுகிறார் என்ற தகவல் பரவியதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமானது. இதையொட்டி பெருமளவிலான ரசிகர்கள் நல்ல சமயம் ட்ரெய்லர் விழாவினை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்களின் கெட்ட நேரம் கடைசி நேரத்தில் விழாவுக்கான அனுமதியை திரும்ப பெறுவதாக மால் நிர்வாகம் அறிவித்தது.

விழா ரத்தானதுக்கு மால் நிர்வாகமே காரணம் என இயக்குநர் ஒமர் லுலு குற்றம்சாட்டியுள்ளார். முதலில் அனுமதி அளித்தவர்கள் பின்னர் ஷகீலா பங்கேற்பதாக தெரிந்தவுடன் மறுப்பு தெரிவித்ததாகவும், அதனைத் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் ஷகீலா இன்றி விழா நடப்பதெனில் அனுமதி தருகிறோம் என்று இறங்கிவந்ததாகவும் லுலு கூறுகிறார். இது தொடர்பாக நடிகை ஷகீலா வேதனை தெரிவித்துள்ளார். தனக்கு இம்மாதிரி நடப்பது இது முதல்முறையல்ல என்றும், ரசிகர்கள் வரவேற்கும்போது ஒருசிலர் மட்டும் ஏன் இவ்வாறு தன்னை ஒதுக்குகிறார்கள் என்றும் வேதனை தெரிவித்திருக்கிறார்.

ஆந்திராவை சேர்ந்த ஷகீலா மலையாள திரையுலகின் மென்நீலப்படங்களின் சகாப்தத்தில் தனி சாம்ராஜ்யம் நடத்தியவர். தனது படங்களின் வசூலில் மம்மூட்டி, மோகன்லால் போன்ற மலையாள உச்ச நட்சத்திரங்களை மிரள வைத்தவர். ஷகீலா திரைப்படம் வெளியாகிறதா என்பதை உறுதிபடுத்திய பின்னரே தங்களது திரைப்பட வெளியீட்டை தீர்மானிக்கும் அளவுக்கு அங்கே ஷகீலா கொடிகட்டி பறந்தார். மலையாளத்தில் வெளியானபோதும் அவரது படங்களுக்கு தமிழ் உள்ளிட்ட இதர தென்னக ரசிகர்களும், பாலிவுட் ரசிகர்களும் திரண்டிருந்தனர்.

புதியவர்களின் வரவாலும், இணையத்தின் எழுச்சியாலும் ஷகீலாவின் வாய்ப்புகள் குறைந்ததில், குணச்சித்திர நடிகையாக மாறிப்போனார். தற்போது ’குக் வித் கோமாளி’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தனது பிரத்யேக யூடியூப் சேனலின் சமூக அக்கறை வாய்ந்த வீடியோக்கள் வாயிலாக ஷகீலா மீதான பொது பிம்பத்தையே பெரிய அளவில் மாற்றியமைத்து உள்ளார். திருநங்கை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருபவர், சினிமா மட்டுமன்றி அரசியல் மற்றும் சமூகத்தின் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் காரசாரமாக கருத்து தெரிவித்து வருகிறார்.

இதற்கிடையே கோழிக்கோடு மால் நிறுவனத்தினர், பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தியே ட்ரெய்லர் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக இதே போன்று நடந்த விழாவில், நடிகை ஒருவருக்கு நிகழ்ந்த பாலியல் அச்சுறத்தலையும் மால் நிர்வாகம் காரணம் காட்டியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in