’கோழி கூவுது’ 40 : திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக்கிய திரைப்படம்!

’கோழி கூவுது’ 40 : திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக்கிய திரைப்படம்!

ஒவ்வொரு படைப்பாளிக்கும் முதல் படம் என்பது தவம்தான். அந்தப் படத்துக்கு முன்னதாக, உறங்க வழி இல்லாதபோதும் உதவி இயக்குநராகிவிட மாட்டோமா என்று, இயக்குநர் அலுவலகங்களின் படிகளில் தவமிருந்து ஜெயித்தவர்களும் உண்டு; தோற்றவர்களும் இருக்கிறார்கள். இந்த வெற்றி, தோல்விக்கு அப்பால் ஆட்டத்திலேயே சேர்க்கப்படாதவர்களும் இருக்கிறார்கள்.

அப்படி, இசைக்குழுவில் அங்கம் வகித்து, பாடலாசிரியராக அறிமுகமாகி, இன்னாரின் தம்பி என்று பேரெடுத்து; முதல் பாட்டிலேயே பாடியவருக்கு விருது கிடைக்கவும் செய்தவர் இருக்கிறார். கூடவே அவரும் பாடினார்; நம்மையும் பரவசப்படுத்தினார். திடீரென ஒரு படத்தை இயக்கினார். அந்த படம் இன்னொரு விடியல் ஆனது. அதே துறையின் மற்றுமொரு திசையில் உதய வெளிச்சமானது. அப்படியொரு விடியலில் எழுந்த சத்தம்தான் ‘கோழி கூவுது’.

கோழியைக் கூவச் செய்தவர், இயக்குநர் கங்கை அமரன் என்பது நாம் அறிந்தது!

தேனிக்குப் பக்கத்தில் பண்ணைப்புரத்தில், அரை நிஜார் காலத்திலேயே, அந்தச் சகோதரர்களுக்கு முழுமையாக வியாபித்திருந்தது இசையும் தாளமும் ராகமும் பாடலும்! கையில் ஆர்மோனியத்தை வைத்துக்கொண்டும் இன்னொரு கையில் நம்பிக்கையை வைத்துக்கொண்டும் சென்னைக்கு வந்த பாவலர் சகோதரர்களுக்கு, 1976ம் ஆண்டு பஞ்சு அருணாசலம் தயாரித்த ‘அன்னக்கிளி’ மூலமாக புத்துயிர் கிடைத்தது. ராசய்யா இளையராஜாவானார். அமர்சிங், கங்கை அமரனானார். இளையராஜாவும் கங்கை அமரனுமாக நாலா பக்கமிருந்தும், நம்மை மயக்கிப் போட்டார்கள்.

1977ம் ஆண்டு, பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படம் வெளியானது. இந்தப் படத்தில் இளையராஜா ’சோளம் வெதக்கையிலே’ என்று முதன்முதலாகப் பாடினார். அதேபோல், கங்கை அமரன், ‘16 வயதினிலே’ படத்தில் ‘செந்தூரப்பூவே’ பாடலை முதன்முதலாக எழுதி, பாடகராக அறிமுகமானார்.

இதன்பின்னர், மலேசியா வாசுதேவனின் படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்தார். ஆனால் படம் நின்றுபோனது. பிறகு, ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ படத்துக்கு இசையமைத்தார். 1979-ம் ஆண்டு, பாக்யராஜ் தன் முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்தார். ‘காதல் வைபோகமே’ பாடல் இன்றைக்கும் மறக்கமுடியாத பாடல் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், கங்கை அமரன் ஒருபக்கம் பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார். இசையமைத்துக் கொண்டிருந்தார். பாடிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில், அடுத்த அவதாரத்தை எடுத்தார். அதுதான் ‘கோழி கூவுது’! அப்படியொரு அவதாரம் எடுக்கவும் அண்ணன் இளையராஜாவே வழிகாட்டினார்.

பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், அதாவது சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பில், இளையராஜா இசையில், கங்கை அமரன் இயக்கத்தில் உருவானது ‘கோழி கூவுது’ திரைப்படம். எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல், கங்கை அமரன் இந்தப் படத்தை இயக்கினார். தம்பி மீது அசைக்கமுடியாத அசாத்திய நம்பிக்கை இருந்தது அண்ணன்களுக்கு. தம்பி கங்கை அமரனுக்கும் ‘அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான்’ என்கிற உறுதி இருந்தது.

சின்னஞ்சிறிய கிராமம். அங்கே, விட்டேத்தியாக அலைந்தபடி அல்லக்கைகளுடன் அலப்பறையைக் கொடுத்துக் கொண்டிருப்பார் பிரபு. அவருக்கு ஒரு அக்கா. அந்த அக்காவுக்கு ஒரு மகள். அவர்தான் படத்தின் நாயகி விஜி.

அந்த ஊரில், கொட்டாங்கச்சியை வைத்து இசைக்கும் கருவியையும், சின்னச்சின்னப் பொருட்களையும் விற்று வருபவர் சில்க் ஸ்மிதா. பிரபுவைக் காதலிக்கிறார் சில்க் ஸ்மிதா. ஆனால் பிரபுவோ, அக்கா பொண்ணு விஜியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்.

இந்த நிலையில், அந்த ஊருக்கு வருகிறார் போஸ்ட்மேன் சுரேஷ். வந்த கையுடன்பிரபுவின் கையால் அடியும் வாங்குகிறார். ஆனால் சுரேஷ் அனாதை என்பதை அறிந்து கலங்கும் பிரபு, ‘’நான் இருக்கிற வரைக்கும் நீ அனாதை இல்லடா தம்பி’’ என்று அன்பும் பிரியமும் காட்டுகிறார்.

பிரபுவிடம் ஆரம்பத்தில் அடிவாங்கியது போல், விஜியிடமும் அவரின் தோழிகளிடமும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார் சுரேஷ். பார்க்கிற போதெல்லாம் சுரேஷை கலாய்த்து கலங்கடிப்பதில், விஜியும் தோழிகளும் விளையாடுகிறார்கள். ஆனால், சுரேஷின் நிலையும், உலகில் யாருமே இல்லாத அனாதை அவர் என்பதையும் முறைமாமன் பிரபு மூலமாகவே விஜி அறிந்து கொள்கிறார். அவர் மீது விஜிக்கு அன்பு மேலிடுகிறது. குறும்பெல்லாம் காணாமல் போகிறது.

இதனிடையே ஊர்ப்பெரியவரின் மனைவி வட்டிக்கு விடுகிற விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறார் பிரபு. இதனால் அவரை வஞ்சம் தீர்க்க, தன் சொந்தக்காரப் பையனை விஜிக்கு மாப்பிள்ளையாகப் பேசி, சூழ்ச்சி செய்கிறார். இதைக் கேட்டு கொந்தளிக்கும் பிரபுவை, வேலைவெட்டி இல்லாதவனுக்கு எப்படி பொண்ணைத் தருவாங்க என்று ஊரே ஏசிக் கூனிக்குறுகச் செய்கிறது.

இதில் ஆத்திரமும் அவமானமும் அடையும் பிரபு, ஊரைவிட்டே கிளம்பி பட்டாளத்தில் சேருகிறார். அங்கிருந்து வீட்டுக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தை எழுதப் படிக்கத் தெரியாத விஜிக்கு, போஸ்ட்மேன் சுரேஷ் படித்துக் காட்டுகிறார். அங்கே விஜிக்கும் சுரேஷுக்கும் காதல் மலருகிறது. ஆனால் சுரேஷ், இந்தக் காதலை ஏற்கத் தயங்கியபடியே இருக்கிறார். ஆனாலும் காதல் தன் வேலையைச் செய்கிறது!

ஊரைவிட்டுப் போன பிரபு, ராணுவத்தில் சேருகிறார். காசு சேர்க்கிறார். அக்கா மகளைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற கனவையும் சேர்த்துக்கொண்டு ஊர் திரும்புகிறார். அக்காவுக்கு சந்தோஷம். தன் பெண்ணைக் கொடுக்க முடிவு செய்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

தன் காதலை விட்டுக்கொடுக்க தயாராகிறார் சுரேஷ். இதற்காக ஊரை விட்டுச் செல்ல முடிவெடுக்கிறார். அந்த வேளையில், சில்க் ஸ்மிதா தடுத்து நிறுத்தி, இருவரையும் சேர்த்து வைக்க முடிவெடுக்கிறார். இவையெல்லாம் பிரபுவுக்குத் தெரியவர ஆவேசமாகிறார். இறுதியில், சில்க்ஸ்மிதா, அவர்களின் காதலைப் புரியவைக்கிறார். பிறகு, ஊரே எதிர்க்கிறது. அந்தக் குடும்பத்தையே ஒதுக்கிவைக்க முடிவு செய்கிறது. அப்போது, அந்த ஊரையே எதிர்த்து, தன் அக்கா மகளையும் சுரேஷையும் சேர்த்துவைக்கிறார் பிரபு. அப்படியே அதுவரை மறுத்து வந்த சில்க் ஸ்மிதாவின் காதலையும் ஏற்றுக் கொள்கிறார் என்பதுடன் ‘கோழி கூவுது’ கதை சுப பொழுதாக விடிகிறது.

கிராமத்துச் சூழலில் மண்மணக்க, மனம் நிறைக்க படத்தைத் தந்திருப்பதுதான் முதல் ஸ்பெஷல். பார்த்ததும் காதல் என்கிற பம்மாத்தெல்லாம் இல்லாமல், சுரேஷுக்கும் விஜிக்கும் நிகழ்கிற காதலை, காட்சி காட்சியாக வளர்த்துக்கொண்டே வந்து, ஒரு ஸ்பரிஸத்தில் காதல்பூவை வெடிக்கவிட்டிருக்கிற ஜாலம்தான், கதையின் மற்றொரு பலம். தன் உடலாலும் கீச்கீச் குரலாலும் காமெடியால் நம்மை சிரிக்கவைத்த பிந்துகோஷ் அறிமுகமான படமும் இதுதான்! அவருக்காகவே ‘ஆயர்பாடி கண்ணனே அன்பை அள்ளித்தாராயோ’ பாடலும் செம ஹிட்.

சின்ன கதை. அதில் காமெடியையும் காதலையும் வைத்துக்கொண்டு வைகை நதியின் நீரோடை போல் தெளிந்த திரைக்கதை அமைத்திருந்தார் கங்கை அமரன். ’சங்கிலி’ படத்தில்தான் அறிமுகமானார் பிரபு. அடுத்தடுத்தும் படங்கள் வந்தன. ஆனால், பிரபுவின் சினிமா வாழ்வில், முதல் வெற்றிப் படம் ‘கோழி கூவுது’தான். அதுவும் அந்த வெற்றிப் படமே வெள்ளிவிழாப் படமாகவும் அமைந்தது.

‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் அறிமுகமான சுரேஷ், முன்னதாக, ’பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் நாயகனாக அறிமுகமாகி இருக்கவேண்டும். ஆனால் கார்ப் பயண விபத்து ஒன்றால், அந்த வாய்ப்பு தட்டிப்போனது. கங்கை அமரனின் முழு ஏற்பாட்டிலும், உதவியிலும் வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் சுரேஷ் அறிமுகமானார். முதல் படம் வெற்றிதான். அடுத்தடுத்த படங்கள் வந்தாலும் சுரேஷுக்கு ‘கோழிகூவுது’ வெற்றிகரமான வெள்ளி விழாப் படமாக உயரம் கூட்டிக் கொடுத்தது.

டிஸ்கோ கிளப்புகளிலும் காட்டில் கொட்டகை போட்டு வாழ்கிற வில்லன் கூடாரத்திலும் கெட்ட ஆட்டம் போடுகிற வாய்ப்பையே சில்க் ஸ்மிதாவுக்கு வழங்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில், பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பாரதிராஜா இயக்கிய ‘அலைகள் ஓய்வதில்லை’யில் புடவையைக் கட்டிக் கொண்டு, அடக்க ஒடுக்கமான பாந்தமான கதாபாத்திரம் கிடைத்தது. முதன்முதலாக, அவரின் தேகம் தாண்டி நடிப்பு மின்னியது அங்கே! அதேபோல், சில்க் ஸ்மிதாவுக்கு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக ‘கோழி கூவுது’ படத்தில், சிட்டு கேரக்டரைக் கொடுத்தார் கங்கை அமரன். இதிலும் சில்க் தன் அழகான நடிப்பைக் காட்டத் தவறவில்லை.

பிரபு தனக்கே உரிய கம்பீரம் காட்டி நடித்திருப்பார். வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிகர் திலகம் சிவாஜி, ஜாக்ஸன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபனிடம், ‘வரி.. திரை.. வட்டி’ என்கிற வசனத்தைப் பேசி அப்ளாஸ் அள்ளியதை, யாரால் மறக்கமுடியும்? அந்த ஜாக்ஸன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபன், பிரபுவின் அல்லக்கை நண்பர் குழுவில் ஒருவராக, அப்பாவித்தன உடல்மொழியுடன் வந்து கலகலக்க வைத்திருப்பார்.

எவரிடமும் உதவி இயக்குநராக இல்லாமலே, இயக்குநராக அசத்திக் காட்டியவர் அமரன். யார் படமெடுத்தாலும், தான் இசையமைக்கிற படங்களுக்கெல்லாம் பக்கபலமாக இருக்கிற இளையராஜா, இந்தப் படத்திலும் அதே உழைப்பையும் அர்ப்பணிப்பையும் இசையாக கொடுத்திருந்தார். டைட்டில் பாடல் தொடங்கி எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் இளையராஜா. ‘அண்ணே அண்ணே’ பாடலும் ‘ஏதோ மோகம்’ பாடலும், படத்தை பட்டிதொட்டி சிட்டி என கொண்டுசென்றன.

டைட்டில் போட்டுக்கொண்டிருக்கும் போது, ‘எங்க அண்ணன்கிட்டயா வம்புக்கு வர்றீங்க? எங்க அண்ணனை யாருன்னு நினைச்சீங்க?’ என்று கங்கை அமரனே திரையில் வந்து சொல்லுவார். ‘இசை இளையராஜா’ என்று டைட்டில் வரும். அதேபோல், ‘இனிமே ஜெயம் உங்க பக்கம்தான்’ என்று யாரோ சொல்லுகிற குரூப் வாய்ஸ் வரும். அப்போது, ‘கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் கங்கை அமரன்’ என்று டைட்டில் போடுவார் கங்கை அமரன்.

‘பொட்டைப்புள்ள எல்லாத்துக்கும் உன்னைக் கண்டா புல்லரிக்கும்’, ‘வீரையா வீரையா நீ இப்போ யாரய்யா’, ‘ஒருமையுடன் நினது திருமலரடி’, ‘பூவே இளைய பூவே’, ‘ஏதோ மோகம் ஏதோ தாகம்’ என்று எந்தப் பாடலையும் குறைத்து மதிப்பிடவே முடியாது. நம் மனதில் சப்பளங்கால் போட்டுக்கொண்டிருக்கிற ‘ஏதோ மோகம்’ பாடலைப் பாடிய கிருஷ்ணசந்தர் எனும் அற்புதப் பாடகரையும் அவரின் தனித்துவக்குரலையும் இளையராஜாவைத் தவிர, எவருமே சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

1982ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 25ம் தேதி, ‘கோழி கூவுது’ வெளியானது. படம் வெளியான பிறகு பொங்கல் வந்தது. ஆனால் பொங்கலுக்கும் ‘கோழி கூவுது’ படமே தொடர்ந்து ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டே இருந்தது. முந்நூறு நாட்கள் ஓடி, சகாப்தம் படைத்தது ‘கோழிகூவுது’.

’கோழி கூவுது’ வெளியாகி, 40 வருடங்களாகிவிட்டன. இதன் பிறகு ‘கும்பக்கரை தங்கய்யா’ மாதிரியும் ‘கரகாட்டக்காரன்’ மாதிரியும் வசூல் குவித்து, சாதனை படைத்த படங்களையெல்லாம் இயக்கினார் கங்கை அமரன் என்பது சரித்திரம்.

‘அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே’ பாட்டையும் ‘ஏதோ மோகம் எதோ தாகம்’ பாடலின் சலசலக்கும் தண்ணீர்ச் சத்தத்தையும், அண்ணனும் தம்பியுமாகச் சேர்ந்து ஒரு கூட்டு விடியலை கோழிகூவுது மூலமாக தந்திருப்பார்கள். பண்ணைபுர நாயகர்களில் ஒருவரான இசைஞானிக்கும், அசத்தல் அறிமுகமாக இயக்குநராக வெற்றிக்கொடி நாட்டிய கங்கை அமரனுக்கும் வாழ்த்துகளை கூவிச் செல்லலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in