`பீஸ்ட்' முதல் காட்சி டிக்கெட்டிற்கு கொத்து பரோட்டா இலவசம்!

அம்பாசமுத்திரம் அம்பானியின் பிசினஸ் பார்முலா
`பீஸ்ட்' முதல் காட்சி டிக்கெட்டிற்கு கொத்து பரோட்டா இலவசம்!
பீஸ்ட்- விஜய்

`பீஸ்ட்' முதல் காட்சிக்கான டிக்கெட் வாங்கும் ரசிகர்களுக்கு கொத்து பரோட்டா இலவசமாகக் கொடுக்கும் சுவாரசிய சம்பவம் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் நடந்துவருகிறது.

தன் பரோட்டா  கடையில் டிக்கெட்டுடன் விக்னேஷ்
தன் பரோட்டா கடையில் டிக்கெட்டுடன் விக்னேஷ்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் நாளை வெளியாகும் `பீஸ்ட்' படத்திற்கு அவரது ரசிகர்களையும் தாண்டி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலமாகக் காட்சியளிக்கிறது. விஜய் ரசிகர்கள் பிரமாண்டமான பேனர் போர்டுகள், அலங்காரத் தோரணைகளும் வைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கல்யாணி திரையரங்கில் `பீஸ்ட்' திரைப்படம் வெளியாகிறது. இங்கு, நாளை (புதன் கிழமை) காலை 5 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. இந்நிலையில் விஜய் ரசிகரும், திரையரங்கிற்கு எதிரிலேயே ‘நெல்லை பரோட்டா ஸ்டால்’ என்னும் பெயரில் பரோட்டாக் கடை நடத்திவருபவருமான விக்னேஷ் தன் கடையில் `பீஸ்ட்' பட டிக்கெட் வாங்கினால், கொத்து பரோட்டா இலவசம் என அறிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் திரையரங்கில் முதல்காட்சிக்கு என்ன கட்டணமோ, அதே கட்டணத்தைத் தான் பரோட்டா கடை உரிமையாளர் விக்னேஷும் நிர்ணயித்துள்ளார் என்பதுதான் இதில் சுவாரசியமான விசயம்!

பீஸ்ட் டிக்கெட்
பீஸ்ட் டிக்கெட்

இதுகுறித்து விக்னேஷிடம் காமதேனுவுக்காகப் பேசினோம். ’’நான் ஆரம்பத்தில் இருந்தெல்லாம் விஜய் ரசிகர் இல்லை. துப்பாக்கி படத்தில் இருந்து அவரை மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அது ஒருபக்கம் இருந்தாலும் எனது தொழில் பரோட்டா கடை. அதை மேம்படுத்த, இன்னும் அதிக மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த `பீஸ்ட்' படத்தை பயன்படுத்த நினைத்தேன்.

ரசிகர்கள் காட்சி நாளை காலை 5 மணிக்கு திரையிடப்படுகிறது. ரசிகர்கள் காட்சிக்கு திரையரங்கில் 300 ரூபாய் டிக்கெட் கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். நான் அதே கட்டணத்தில், தியேட்டரில் இருந்து குறிப்பிட்ட அளவு டிக்கெட் வாங்கியுள்ளேன். தியேட்டரில் டிக்கெட் வாங்குபவர்கள் படம் மட்டும் தான் பார்ப்பார்கள். நான் படம் முடிந்து செல்லும்போது ஒரு கொத்து பரோட்டாவும் இலவசமாகக் கொடுக்கிறேன். என் கடை கொத்து பரோட்டா 75 ரூபாய் மதிப்புடையது. இப்போது எனது பரோட்டா கடையைப் பற்றி என் பகுதிவாசிகளுக்குத்தான் தெரியும். ஆனால் `பீஸ்ட்' படத்திற்கு சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள். என் மனதுக்குப் பிடித்த தளபதி படத்தின் மூலமே என் கடைக்கும் ஒரு விளம்பரம் தானே!’’ என்றவரிடம், நகைச்சுவை நடிகர் கருணாஸ் நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தில் அவர் பல வியாபாரமும் செய்வார். அதேபோல் மாற்றி யோசித்து நிஜமாகவே அம்பாசமுத்திரம் அம்பானி போல் அசத்துறீங்களே என்றதும் அப்போதுதான் உடைத்து கல்லில் விட்ட முட்டையைப் போல சுர்ரென புன்னகைக்கிறார்.

Related Stories

No stories found.