‘மனிதனிடம் அன்பை போலவே கொடுமையும் இருக்கிறது’ - மிஷ்கினின் தத்துவம்

‘மனிதனிடம் அன்பை போலவே கொடுமையும் இருக்கிறது’ - மிஷ்கினின் தத்துவம்

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடித்துள்ள படம், ’கொலை’. இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, பாலாஜி கே.குமார் இயக்கியுள்ளார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது:

நம் இதிகாசங்களில் எங்கும் கொலை பரவி இருக்கிறது. மகாபாரதத்தில், தன் சொந்தக்காரர்களைக் கொல்வதற்கு அர்ஜுனன், கிருஷ்ணரிடம் அனுமதி கேட்கிறார். அப்போது பேசும் பேச்சுதான், பகவத் கீதையாக மாறுகிறது. அதில் இருந்த தத்துவம்தான் இந்திய தத்துவமாகவே மாறுகிறது. பைபிளில், இரண்டாவது அத்தியாயமே கேனால், அபேல் கொல்லப் படுகிறார். அங்குதான் பைபிளே ஆரம்பிக்கிறது. 2 வருடத்துக்கு முன் கோவிட், பலரை கொலை செய்துவிட்டு போயிருக்கிறது.

கொலை’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில்..
கொலை’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில்..

மனிதனுடைய உள்ளத்தில் அன்பும் பேரன்பும் எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவு கொடுமையும் ஒளிந்துகொண்டிருக்கிறது.

இந்தக் கொலையை அவ்வளவு சீக்கிரமாக இலக்கியத்திலோ, சினிமாவிலோ காண்பித்துவிட முடியாது. ஒரு மனிதன், கொலை செய்துவிட்டால், அவன் மனது தெளிவு அடைவதே இல்லை. கொலைக்காரனுக்கு இரண்டு விதமான காரணம் இருக்கிறது, கொலை செய்வதற்கு. 9 வயதில் இருந்து 14 வயதுக்குள், முன் நெற்றியில் அடிபட்டால், அங்கிருக்கிற பச்சாதாப உணர்வுகள் நொறுங்கிவிடும். அருகில் யாராவது அடிபட்டு ரத்தம் வந்தால் கூட அதைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். எந்த உணர்வுமே இருக்காது. இது உடல் ரீதியான விஷயம்.

உளவியல் ரீதியாக, குழந்தைகள் 4 வயதில் இருந்து 15 வயதுக்குள் தாய், தந்தை, உறவினர்கள் எப்படி அவர்களை பராமரிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மாறுகிறது. ஒரு குழந்தையை அடித்துவிட்டால், அந்தக் குழந்தை அதை மறக்கவே மறக்காது என்பார்கள். தாய், தந்தை, குழந்தையை விட்டு வேறொரு திருமணம் செய்துகொள்ளும்போதோ, அக்கப் பக்கத்தினர் துஷ்பிரயோகம் செய்யும் போதோ, தனது மாய உலகத்துக்குள், குழந்தைகள் நாயகனாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். 20 வயதான பிறகு, தனது உடலில் வலு வந்ததும் அது தனது கனவை உண்மையாக்க முயற்சிக்கிறது. அதுதான், கொலை என்கிறார்கள்.

இந்தப் படத்தின் டிரெய்லர் சிறப்பாக இருக்கிறது. விஜய் ஆண்டனி, இசை அமைப்பாளராக இருந்து நாயகனாக மாறி, தனக்கேற்றக் கதைகளைத் தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார். வாழ்த்துகள்.

இவ்வாறு மிஷ்கின் தெரிவித்தார். தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், கமல் போரா, விஜய் ஆண்டனி உட்பட படக்குழுவினர் பேசினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in