யாருங்க இந்த சி.எஸ்.கணேஷ்?

அறிந்த ஆளுமை... அறிந்திரா தகவல்கள்!
யாருங்க இந்த சி.எஸ்.கணேஷ்?

தமிழ் திரையிசை வரலாறு என்பது நாடகத் துறையிலிருந்து இடம்பெயர்ந்தது. சாரீர சுத்தமாகப் பாடத் தெரிந்த பலர், நாடகத்தில் இருந்து திரைத் துறைக்குள் வந்தார்கள். அந்தக்கால மக்கள் பாடல்களில் மயங்கிக் கிடந்தார்கள். குறிப்பாக ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதரின் குரலுக்கு அடிமையாகிக் கிடந்தார்கள். இதன் காரணமாகவே அவரது படங்கள் வெள்ளிவிழா கொண்டாடின.

எம்கேடி காலத்தில் நடிக்க வந்த பலர், அவரைப் போலவே பாட முயற்சி செய்தார்கள். ஆனால், ஏழிசை என்றால் அவர் ஒருவர்தான் என்ற முத்திரையை எம்கேடி பதித்து விட்டுச்சென்றார். இதன் காரணமாக, போலச் செய்வதைப் பாடகர்கள் கைவிட்டனர்.

இதற்குப் பின் வந்த டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல்கள் திக்கெட்டும் அவர் புகழ் பரப்பின. எம்ஜிஆர் பாடல்கள் என்றால் அவருக்கு என்று தனிக்குரல். சிவாஜி கணேசன் படங்கள் என்றால் அவருக்கென தனிக்குரல். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஸ்டைலில் டிஎம்எஸ் பாடி அசத்தினார். இதன் பின் பாடவந்த பாடகர்கள் பலர், டிஎம்எஸ் குரலில் பாட முயன்றார்கள்.

சில பாடல்களைக் கேட்கும்போது இது டிஎம்எஸ் பாடல் தானோ ஏமாந்துபோய் இருக்கிறோம். அப்படியொரு பாடல் இடம் பெற்ற படம் ‘கலாட்டா கல்யாணம்’. 1968-ம் ஆண்டு தனது மகன் ராம்குமார் பெயரில் சிவாஜி கணேசன் தயாரித்த படம். கோபு திரைக்கதையில் நகைச்சுவை கலாட்டாவான இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, நாகேஷ், மனோரமா, வி.கோபாலகிருஷ்ணன், ஏ.வி.எம்.ராஜன், சச்சு, ஜோதிலட்சுமி என பெரும் நட்சத்திரப் பட்டாளம். சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் புகழ்பெற்ற பாடல் ஒன்று... நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.

‘உறவினில்
பிஃப்டி பிஃப்டி
உதட்டினில்
பிஃப்டி பிஃப்டி

உறவினில்
பாதி பாதி
உதட்டினில்
பாதி பாதி

வருவது சுகம்
பிஃப்டி பிஃப்டி
தருவது இந்த
தங்கக்கட்டி...’

- என கவிஞர் வாலியின் கற்பனையில் உருவான இந்தப் பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடியவர் டி.எம்.சௌந்தரராஜன் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த பாடலைப் பாடியவர் ஒரு இசையமைப்பாளர். ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்தவர். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக்குழுவில் வாத்தியக்கலைஞராக மட்டுமின்றி பின்னணி இசைக்கலைஞராகவும் இருந்துள்ளார். அவர் பெயர் சி.எஸ்.கணேஷ்.

‘கலாட்டா கல்யாணம்’ படத்தில்,

‘எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
பிப்பி பிப்பி டும்டும்டும்டும் பிப்பி பிப்பி…’

- என்ற பாடலை உன்னிப்பாகக் கவனித்தால் இரண்டு டி.எம்.சௌந்தரராஜன் பாடுவதுபோல இருக்கும். ஆனால், இப்பாடலை டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரியோடு இணைந்து பாடியவர் சி.எஸ்.கணேஷ் தான்.

மெல்லிசை மன்னர், ஏன் இவரை டிஎம்எஸ் போல பாட வைத்தார் என்ற குழப்பம் எனக்கு இன்று வரை இருக்கிறது. ஏற்கெனவே, டி.எம்.சௌந்தரராஜன் குரலில் பாடக்கூடிய கோவை சௌந்தரராஜனை வைத்து, ‘மெல்லப்பேசுங்கள் பிறர் கேட்ககூடாது’ உள்ளிட்ட பல பாடல்களை டிஎம்எஸ் போலவே பாடவைத்தவர் எம்எஸ்வி. பிறகெதற்கு சி.எஸ்.கணேஷையும் டிஎம்எஸ் குரலில் பாடவைத்தார் என்று யோசித்தேன்.

ஆனால், சி.எஸ்.கணேஷ் வாத்திய இசையில் மட்டுமல்ல குரல் இசையிலும் பல வித்தியாசங்களைக் காட்டியுள்ளார்.
1976-ல் கே.சொர்ணம் இயக்கத்தில் ஜெய்சங்கர், சுஜாதா நடிப்பில் வெளியான, ‘நீ ஒரு மகாராணி’ படத்தில் சி.எஸ்.கணேஷ் பாடிய பாடலைக் கேட்டால் அப்படியே ஷாக்காகி விடுவீர்கள்.

‘பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்
பல கோடி பாடல் நான் பாட வேண்டும்
நேரான பாதை நீ செல்லும் பாதை
நெஞ்சார வாழ்த்த வந்தேனே பேதை...’

இசையரசி பி.சுசீலா பாடிய இந்த பாடலில் வரும் ஹம்மிங், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியது போன்ற உணர்வை ஏற்படுத்தும். பாடல் முழுவதும் மட்டுமின்றி தனித்தும் ஹம்மிங் கேட்போரை அசர வைக்கும். எஸ்பிபியோ என நினைக்க வைக்கும் இந்த பாடலைப் பாடியவர் சி.எஸ்.கணேஷ் தான். தனித்தும், பல பாடகர்களுடன் சி.எஸ்.கணேஷ் பாடியுள்ளார்.

1984-ம் ஆண்டு கந்தசாமி சிங்காரம் இயக்கத்தில் பாண்டியன், சுலக்சனா நடிப்பில் வெளியான படம் ‘மண்சோறு’. இந்தப் படத்தில் மலேசியா வாசுதேவன், பொன்னுச்சாமியோடு சி.எஸ்.கணேஷ் பாடியுள்ளார்.

‘அக்கா படிக்கிறது பிஎஸ்சி ஆனா தெரியாது ஏபிசி
இங்க மிக்கா மினுக்கிட்டு காலேஜு
போறாங்க எல்லாம் டீன்ஏஜ்...’
என்ற பாடலில், ‘புள்ளையத் தூக்கும் வயசிலே புத்தகமா கையில்’ என்று தனித்து தெரியும் சி.எஸ்.கணேஷ் குரல்.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பி.எஸ்.பூப்பாண்டியன், திருவேற்காட்டில் வேர்க்கடலை விற்று, அம்மன் பாட்டுப்புத்தகம் விற்று, கடைசியில் சினிமா இயக்குநராக அவதாரம் எடுத்து எடுத்த படம்தான் ‘அம்மன் காட்டிய வழி’(1991). அரவிந்த், சுமதி, கே.ஆர்.விஜயா நடித்த இப்படத்தில் ஜெயபாரதி குழுவினருடன் இணைந்து சி.எஸ்.கணேஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

‘ஓடக்கரையிலே ஓரமா ரொம்ப நேரமா
நீ உட்கார்ந்திருக்கியே பாவமா
இல்லை கோபமா வாய்யா...’

மிக அழகான டூயட். கிராமத்து காதல் பாடல் என்றாலும் கேட்பதற்கு இனிமையான பாடல் இது.

1994-ல் ராம.நாராயணன் தயாரித்து இயக்கிய படம் ‘வாங்க பார்ட்னர் வாங்க’. விசு, ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன் உட்பட பலர் நடித்த இப்படத்தில் சி.எஸ்.கணேஷ், ‘வாங்க பார்ட்னர் வாங்க’ என்ற டைட்டில் பாடலைப் பாடியுள்ளார்.

இன்று வரக்கூடிய பல தெலுங்குப் படங்களின் பெயர்கள், ஏற்கெனவே இருந்த தமிழ் படங்களின் பெயர்களிலே வந்துவிடுகின்றன. இதற்கு எப்படி இப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் அனுமதி அளிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் தெலுங்கு டப்பிங் படத்துக்கு வைத்திருந்த பெயர் ‘வச்சகுறி தப்பாது’. ஆனால், 1984-ல் சந்திரசேகர், ரம்யா கிருஷ்ணன், சித்ரா நடிப்பில் எம்.ஆர்.விஜயசந்தர் இயக்கத்தில் இதே பெயரில் நேரடி தமிழ் படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சுஜா ராதாகிருஷ்ணனுடன் இணைந்து சி.எஸ்.கணேஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

‘ஆத்துல பாதி சேத்துல பாதி கால வைக்காதே
அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம்
கண்ண வைக்காதே…’

என்று தொடங்கும் இந்தப் பாடலில் ‘கொக்கர கொக்கர கொக்கரக்கோ’ என்று சி.எஸ்.கணேஷ் பாடுவார். டி.எம்.சௌந்தரராஜன் பாணியில் இந்தப் பாடலை அவர் பாடியுள்ளார்.

இதே ஜோடி அற்புதமான டூயட் பாடலை, ‘பேசுவது கிளியா’ படத்துக்காகப் பாடியுள்ளது. ‘நேரம் வந்தது… யோகம் வந்தது நெஞ்சம் இரண்டும் போதை வந்தது’ என்ற அந்தப் பாடல் கேட்க கேட்கத் திகட்டாதது. ‘கானலுக்கு கரையேது’ படத்தில் ‘சத்தியமே பொய்களுக்கு’, ‘வீட்டிலே எலி வெளியிலே புலி’ படத்தில் அதே வரிகள் கொண்ட டைட்டில் பாடல் எனப் பல பாடல்களை சி.எஸ்.கணேஷ் பாடியுள்ளார்.

‘தங்கமான புருஷன்’ படத்தில் ‘கல்யாணம் கட்டாத கன்னிப்பொண்ணுங்களுக்கு கிடைக்கணும் தங்கமான புருஷன்’ என்ற பாடலை தனது குழுவினருடன் இணைந்து சி.எஸ்.கணேஷ் பாடியுள்ளார்.

‘தங்கமணி ரங்கமணி’ படத்தில் ‘தங்கமணி… ரங்கமணி கதையை கேளு’ பாடலையும், ‘பாரம்பரியம்’ படத்தில் ‘இந்த மண்ணுக்கொரு’ என்ற பாடலையும் அவர் பாடியுள்ளார்.

புதுமைப்பித்தன் எழுதிய பொன்னகரம் கதையின் தலைப்பிலேயே 1980-ம் ஆண்டு, மாதங்கன் இயக்கத்தில் படம் வெளியானது. சரத்பாபு, ஷோபா மற்றும் பலர் நடித்த இப்படத்தில்,

‘பொண்ண வளத்தவுக பூச்சூட்டி பார்த்தவுக
கல்யாணம் பண்ணி வைக்க சீட்டெழுதி போட்டாங்க... சீட்டெழுத்தி போட்டதில் சிங்கக்குட்டி வந்தேண்டி’

என்ற சிறிய பாடலையும் சி.எஸ்.கணேஷ் பாடியுள்ளார்.

இதேபோல ‘பிஞ்சுமனம்’ படத்தில், ‘பிஞ்சு மனம் தெய்வ மனம்’ என்ற சிறு பாடலையும் சி.எஸ்.கணேஷ் பாடியுள்ளார்.

1983-ல் ஆண்டு ராஜீவ், மகாலெட்சுமி நடிப்பில் வெளியான படம் ‘இளைய பிறவிகள்’. ஹிருதயராஜ் இயக்கிய இப்படத்தில் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், ஆஷா மற்றும் குழுவினருடன் இணைந்து ‘பாடுவேன் கேளுங்கள் நண்பர்களே’ பாடலை சி.எஸ்.கணேஷ் பாடியுள்ளார்.

எல்லாம் சரி, இந்த சி.எஸ்.கணேஷ் யார் என்றுதானே கேட்கிறீர்கள்?

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர். அத்துடன் 7-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இன்னும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?

‘உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்’, ‘தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம்’, ‘ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்’, ‘கடலோடு நதிக்கென்ன கோபம்’, ‘இனிய தென்றலே இரு கைகள் வீசி வா’, ‘சித்திரமே உன் விழிகள்’, ‘வெண்ணிலா முகம் பாடுது’, ‘மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்’, ‘பட்டு வண்ண ரோசாவாம்’, ‘அதோ அந்தத் தென்றல் ஒரு பூவைத் தேடுது’, ‘மல்லிகைப் பூ பூத்திருக்கு’, ‘பருத்தி எடுக்கையிலே’, ‘பனியும் நீயே மலரும் நானே’, ‘பாவை இதழ் தேன் மாதுளை’, ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’, ‘ஓ நெஞ்சே நீதான்’, ’இந்த இரவில் நான் பாடும் பாடல்’, ‘வானம் இங்கே மண்ணில் வந்தது’, ‘இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்’, ‘மலைச்சாரலில் ஒரு ஆண்குயில்’, ‘ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை’, ‘மேகமே மேகமே’, ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது’, ‘எனைத் தேடும் மேகம்’, ‘மதுக்கடலோ மரகத ரதமோ’, ‘ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்’ போன்ற ஹிட் பாடல்களுக்கு இசை தந்த சங்கர் - கணேஷ் இரட்டையர்களில் ஒருவர் தாங்க, இந்த சி.எஸ்.கணேஷ்!


சங்கர் - கணேஷ் இரட்டையர்களில் ஒருவரான சி.எஸ்.கணேஷ்
சங்கர் - கணேஷ் இரட்டையர்களில் ஒருவரான சி.எஸ்.கணேஷ்

- கட்டுரையாளர்: பத்திரிகையாளர், எழுத்தாளர்

Related Stories

No stories found.