யாஷ் பிறந்தநாளில் கேஜிஎஃப்-3 அடுத்த அப்டேட்!

யாஷ்
யாஷ்

கேஜிஎஃப் திரைப்படங்களின் நாயகன் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎஃப் வரிசையின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட், அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் சிலாகிக்கப்பட்டு வருகிறது.

நவீன் குமார் கௌடா என்ற பூர்வாசிரம பெயர் கொண்ட நடிகர் யாஷ், கேஜிஎஃப் வரிசை திரைப்படங்கள் வாயிலாக நாடு முழுக்க பிரபலமடைந்திருக்கிறார். அவருக்கு இன்று(ஜன.8) 37வது பிறந்தநாளாகும். இதனையொட்டி கன்னட சினிமாவுக்கு அப்பாலிருந்தும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் பதிவாகி வருகின்றன.

இந்த வரிசையில் துபாயிலிருக்கும் புர்ஜ் கலிஃபா என்ற வானளாவிய கட்டிடத்தில் யாஷ்க்கான பிறந்தநாள் வாழ்த்துகள் ஒளிர்ந்தன. இதனை உற்சாகமாக பகிர்ந்து வரும் யாஷ் ரசிகர்கள் மத்தியில், கேஜிஎஃப் வரிசையின் அடுத்த வெளியீடு குறித்த அப்டேட் விவரங்கள் பரவி வருகிறது.

கேஜிஎஃப் திரைப்படங்கள் வாயிலாக நாடு முழுமைக்கும் அறிமுகமான யாஷ், முதல் இரண்டின் தொடர்ச்சியாக கேஜிஎஃப் வரிசையின் மூன்றாவது படத்திலும் நடிக்க உள்ளார். ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட வரிசை போன்று கேஜிஎஃப் வரிசை திரைப்படங்களும் வெளியாகும் என அதன் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்படி 2025-ல் அதற்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இவ்வாறு கேஜிஎஃப் -5 வரை யாஷ் கொண்டே அந்த வரிசைக்கான திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதன் பின்னர் அவசியமெனில் யாஷ்க்கு பதிலாக இன்னொரு நாயகன் இடம்பெறவும் வாய்ப்புண்டு என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் யாஷ் இல்லாத கேஜிஎஃப் வரிசை குறித்தான யோசனைக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீலுக்கு பாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் நீண்டுள்ளன. தற்போது பிரபாஸ் நடிக்கும் ’சலார்’ திரைப்படத்தின் உருவாக்கத்தில் மும்முரமாக இருக்கும் அவர், இதன் தொடர்ச்சியாக மற்றுமொரு பிரபாஸ் படம் மற்றும் ஒரு பாலிவுட் படம் உள்ளிட்டவற்றை கடந்தே கேஜிஎஃப் வரிசைக்கு திரும்புவார் என சொல்லப்படுகிறது.

இதனையடுத்து பிரசாந்த் நீலுக்கு பதில் இன்னொரு பிரமாண்ட இயக்குநரை வைத்து அடுத்த கேஜிஎஃப் உருவாக்கத்தை தொடங்க வேண்டும் என்று யாஷ் ரசிகர்களும், பிரசாந்த் நீல் இன்றி கேஜிஎஃப் சுகப்படாது என பொதுவான சினிமா ரசிகர்களும் வாதிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in