தோல் சிகிச்சை விளம்பரத்தில் ஹாலிவுட் நடிகர்: மன்னிப்புக் கேட்டது மருத்துவமனை

தோல் சிகிச்சை விளம்பரத்தில் ஹாலிவுட் நடிகர்: மன்னிப்புக்  கேட்டது மருத்துவமனை
அந்த விளம்பரம்

தோல் சிகிச்சை விளம்பரத்தில் ஹாலிவுட் நடிகரின் புகைப்படத்தை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகருமான இயக்குநருமான மோர்கன் ஃபிரீமேனின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காக கேரள மருத்துவமனை மன்னிப்புக் கேட்டுள்ளது.

கேரள மாநிலம், வடகாராவில் கூட்டுறவு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, தோல் நோய்களுக்கான சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன. முகத்தில் உள்ள மருக்கள், மச்சம், கொப்பளங்கள் முழுமையாகக் குணமாக்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான விளம்பரத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் மோர்கன் ஃபிரீமேனின் புகைப்படத்தை மருத்துவமனை பயன்படுத்தி இருந்தது. ஆஸ்கர் விருதுபெற்ற மோர்கன், 2009-ம் ஆண்டு வெளியான இன்விக்டஸ் (Invictus) என்ற படத்தில் நெல்சன் மண்டேலாவாக நடித்திருந்தார்

மோர்கன் ஃபிரீமேன்
மோர்கன் ஃபிரீமேன்

அந்த விளம்பரத்தைக் கண்ட சிலர், ஏன் நெல்சன் மண்டேலா புகைப்படத்தை இதில் பயன்படுத்தியுள்ளீர்கள்? என்று கேட்டுள்ளனர். அதற்குள் இந்த விளம்பரம் சமூக வலைதளத்தில் வைரலானது. கருப்பின நடிகர் மோர்கனை இழிவுபடுத்துவதாக இந்த விளம்பரம் உள்ளது என கண்டனங்கள் எழுந்தன. கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது.

‘‘எங்கள் மருத்துவமனையில் புதிதாக சேர்ந்த தோல் மருத்துவர் இந்த விளம்பரத்தை வைக்கலாம் என்றார். உள்ளூர் வடிவமைப்பாளர் மோர்கன் புகைப்படத்தை வைத்து அந்த விளம்பரத்தை உருவாக்கிவிட்டார். அந்தப் புகைப்படத்தைப் பயன்படுத்தியது தவறுதான். இதனால் பேஸ்புக்கில் மன்னிப்புக் கேட்டோம். மோர்கன் ஃப்ரீமேன் சிறந்த கலைஞர் என்று உலகம் முழுவதும் போற்றப்படுபவர். அவரை இழிவுபடுத்துவது எங்கள் நோக்கமல்ல” என்று அந்த மருத்துவமனை நிர்வாகத்தைச் சேர்ந்த டி.சுனில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in