நடிகர் திலீப்புக்கு முன் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

நடிகர் திலீப்புக்கு முன் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

விசாரணை அதிகாரிகளைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.

நடிகை கடத்தல் விவகாரத்தில், விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகத் நடிகர் திலீப், அவர் சகோதரர் அனூப் உட்பட 6 பேர் மீது புதிதாக வழக்கு தொடரப்பட்டது. ஜனவரி 10 ஆம் தேதி தொடரப்பட்ட இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் நடிகர் திலீப் உட்பட 6 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் திலீப்புக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பலமுறை இந்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

அதன்படி நீதிபதி கோபிநாத், நடிகர் திலீப் உள்பட 6 பேருக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் இன்று, முன் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார். 'அவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்; போலீஸ் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும்; சாட்சிகளைக் கலைக்க முயற்சிக்கக் கூடாது' என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் நீதிபதி விதித்தார்.

இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் அரசு தரப்பு, நீதிமன்றத்தை அணுகி கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டால், நடிகர் திலீப்பை கைது செய்வதற்காக, அவருடைய ஆலுவா வீட்டுக்கு அருகில் போலீசார் காத்திருந்தனர். ஆனால், முன் ஜாமீன் வழங்கப்பட்டதால் அவர்கள் திரும்பிச் சென்றனர். கேரள உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, அரசு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in