திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற இருந்த கேரள அரசின் 52-வது திரைப்பட விருது வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரள அரசின் 52-வது திரைப்பட விருதுகள் கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் ’அவசவியூகம்’ சிறந்த படமாக தேர்வானது. சிறந்த நடிகர் விருது பிஜூ மேனனுக்கும் ('ஆர்க்கரியாம்'), ஜோஜூ ஜார்ஜுக்கும் ('மதுரம்', 'ஃப்ரீடம் ஃபைட்', 'துறமுகம்', 'நயாட்டு') பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகையாக ரேவதி ('பூதகாலம்'), சிறந்த இயக்குநராக திலீஷ் போத்தன் ('ஜோஜி'), சிறந்த பொழுதுபோக்கு படமாக 'ஹிருதயம்' உட்பட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டன. அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் இதை அறிவித்திருந்தார்.
இந்த விருதுகள், திருவனந்தபுரத்தில் உள்ள நிஷாகாந்தி அரங்கத்தில் நடக்கும் விழாவில் இன்று (ஆகஸ்ட் 3) வழங்கப்பட இருந்தது. இந்நிலையில் கேரளாவில் கனமழை பெய்து வருவதால் இந்த விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை அம்மாநில அமைச்சர் வி.என்.வாசவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதில் ’’தொடர்ந்து பெய்து வரும் கனமழையை அடுத்து திருவனந்தபுரம் உள்பட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று (ஆகஸ்ட் 3 நடைபெற இருந்த திரைப்பட விருது வழங்கும் விழா, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.