சினிமா வாய்ப்பு கேட்டு ரூ.25,000 செலவில் பேனர்: மம்மூட்டியை பின்பற்றிய துணை நடிகர்!

சினிமா வாய்ப்பு கேட்டு ரூ.25,000 செலவில் பேனர்: மம்மூட்டியை பின்பற்றிய துணை நடிகர்!

சினிமா வாய்ப்பு கேட்டு துணை நடிகர் ஒருவர், பேனர் வைத்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

சினிமா, ஜாலத்தைப் பதுக்கி வைத்திருக்கிற மாய போதை. அதில் விழுந்து, எழுந்து வெற்றி கொள்வது சிலர்தான். வாய்ப்புக் கிடைக்காதவர்கள், ஆசையை ஓரங்கட்டி வைத்துவிட்டு வேறு வேலைகளில் இறங்கி விடுகிறார்கள். சாலிகிராமத்தைச் சுற்றி இருக்கிற ஒவ்வொரு டீ கடைக்கு முன்பும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறவர்களின் வாடிய முகங்களை எப்போதும் பார்க்க முடியும்.

அப்படித்தான் சரத். கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த சரத், பத்தாம் வகுப்பு படிக்கும்போதே நடிக்கத் தொடங்கிவிட்டார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவரை, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பிரிவில்தான் வைத்திருந்தார்கள். அதுவும் ஒழுங்காக வாய்ப்பு கிடைக்காது. இருந்தாலும் பல சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குநர்களிடம் வாய்ப்புக்காக நிற்கவும் தயங்கவில்லை. பல படங்களுக்கான ஆடிஷனில் கலந்துகொண்டாலும் ஏமாற்றமே மிச்சம்.

பிழைப்புக்காக தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றத் தொடங்கினார். வேலை ஒரு பக்கம் இருந்தாலும் வாய்ப்புத் தேடலையும் விடவில்லை. இந்நிலையில்தான் அவருக்கு தோன்றியது அந்த ஐடியா. புதியகாவு - திருபுனிதுறா சாலையில் ஒரு விளம்பர பேனர் வைத்தார், சரத்.

அதில், சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் வாய்ப்புகளைத் தேடுவதாகவும் தனது தொலைபேசி நம்பரை குறிப்பிட்டு விளம்பர பேனர் வைத்துள்ளார். இந்த விளம்பரம் கவனிக்க வைத்திருக்கிறது.

இதுபற்றி சரத் கூறும்போது, ``இப்படி விளம்பரப்படுத்த எனக்கு இன்ஸ்பிரேஷன் மம்மூட்டிதான். 40 வருஷத்துக்கு முன்னால அவரும் இப்படி விளம்பரப்படுத்திதான் வாய்ப்பு வாங்கினார். அதைப் பின்பற்றிதான் வச்சேன். இதைப் பார்த்து நிறைய பேர் கிண்டல் பண்ணுவார்கள் என்று தெரியும். எனக்கு தேவை நடிப்பதற்கான வாய்ப்பு. யார் கிண்டல் பண்ணி என்ன ஆகப் போகுது?'' என்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in