மீண்டும் ஜாலியான கீர்த்தியைப் பார்ப்பீர்கள்!

மனம் திறக்கும் ’மாமன்னன்’ கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

‘அண்ணாத்தே’ படத்தில் அண்ணன் அரிவாள் தூக்குவதற்குக் காரணமாக இருக்கும் தங்கையாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ், அப்படியே தலைகீழாக மாறி, தானே தன்னந்தனியாக வேட்டைக்குக் கிளம்பும் அடிபட்ட பெண் புலியாக மாறி அசத்தியிருந்தார் ‘சாணிக் காயிதம்’ படத்தில். இடையில் நானியுடன் நடித்த ‘தசரா’ தமிழிலும் டப் ஆகி ரிலீஸ் ஆனாலும் தற்போது வெளியாகியிருக்கும் ‘மாமன்னன்’ படத்தில் லீலாவாக அவர் மீண்டும் தமிழ் ரசிகர்களுடன் ஒரு நேரடிச் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார். காமதேனு டிஜிட்டலுக்காக அவருடன் உரையாடியதிலிருந்து...

‘மாமன்னன்’ லீலா பற்றி மாரி செல்வராஜ் படப்பிடிப்புக்கு முன்னர் உங்களுக்கு எவ்வளவு சொன்னார்?

கதாநாயகனைப் புரிந்துகொள்ளாமல் இருக்கும் ஒரு கேரக்டர். அவரது அம்மாவைச் சந்தித்த பிறகு அவனைப் புரிந்துகொண்டு அவனுக்கு கடைசிவரை துணை நிற்கும் கேரக்டர் என்று சொன்னார். படத்தின் கதையைச் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஒரு வரி அளவுக்குத்தான் சொன்னார்.

அவர் சொன்னத்தைவிட ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய மாற்றி எடுத்தார். எனக்கெல்லாம் டயலாக் பேப்பரே கொடுக்கவில்லை. சீனைச் சொல்லிவிட்டு, இந்தக் காட்சியில் இப்படித்தான் பேசவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். சீனுக்கான ஐடியா அவரிடம் இருக்குமே தவிர, ஸ்பாட்டில் அவர் எழுதி, பேசிப் பேசி நிறைய மாற்றிக்கொண்டே போவார். தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்.

‘மாமன்னன்’ படத்தில் மறக்க முடியாத அனுபவம்?

நிறைய இருக்கிறது. சில காட்சிகளை 50 முறை கூட திரும்பத் திரும்ப எடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். உதயநிதியின் சிறுவயது ஃபிளாஷ் பேக் காட்சிகளை எடுத்து வந்து, எடிட் செய்து போட்டுக் காண்பித்தார். அதைப் பார்த்தபிறகு இது என்ன மாதிரியான படம் என்பது எனக்குப் புரிந்து போய்விட்டது. அதன்பிறகு நான் இன்னும் சீரியஸாக நடிக்கத் தொடங்கிவிட்டேன்.

தெலுங்கு, மலையாளம், இந்தியில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்களில் உங்கள் கதாபாத்திரம் ஜாலியாக, கொண்டாட்டம் மிகுந்தவையாக இருக்கின்றன. ஆனால், தமிழில் சமீபத்தில் நீங்கள் நடித்து வெளிவந்த படங்களில் சீரியஸ் கதாபாத்திரங்களே அதிகமும் அமைந்திருக்கின்றன. இது எதிர்பாராமல் அமைந்ததா?

தொடக்கத்தில் நான் பப்ளியான வேடங்கள் செய்தேன். தொடக்கம் பலருக்கும் அப்படித்தானே அமைகிறது. ‘மகாநடி’ படத்துக்குப் பிறகு எனக்கு சீரியஸ் ரோல்கள்தான் அதிகமாக வந்தன. ஆனால், நான் எல்லா ரோல்களையும் ஏற்கவில்லை. என்னையும் மீறித்தான் ‘பென்குயின்’, ‘சாணிக் காயிதம்’ இப்போது ‘மாமன்னன்’ ஆகியவை வந்திருக்கின்றன. அடுத்து ஜெயம் ரவியுடன் ‘சைரன்’ படத்திலும் ஒரு சீரியஸான கேரக்டர்தான் செய்திருக்கிறேன். தமிழில் எனது கேரியரில் இதுவொரு தருணம் என்று பார்க்கிறேன். எதையும் ஏற்றுக்கொள்வது தானே சரியாக இருக்கும்.

‘ரிவால்வார் ரீட்டா’ என்கிற தலைப்பே அதில் நீங்கள் ஆக்‌ஷன் ஹீரோயின் என்பதைச் சொல்கிறது. உண்மையில் அந்தப் படத்தில் உங்கள் பங்களிப்பு என்ன?

‘மாநாடு’ படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர் கே.சந்துரு டைரக்‌ஷன். ரெடின் கிங்ஸ்லி என்னோடு இணைந்து நடிக்கிறார். இதுவொரு ‘டார்க் காமெடி’ படம். அதில் சீரியஸ் கீர்த்தியை நீங்கள் பார்க்கமாட்டீர்கள். அதேபோல் ‘ரகுதாத்தா’ என்கிற படமும் காமெடிதான். இந்தப் படங்கள் வெளிவரும்போது ஜாலியான கீர்த்தியை மறுபடியும் பார்ப்பீர்கள்.

‘தேசிய விருதுபெற்ற நடிகர்’ என்கிற ஒளிவட்டம் உங்களுக்கு சுமையா?

அப்படிச் சொல்லமாட்டேன். ஆனால், தேசிய விருதுக்குப் பின் நல்ல கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்கிற பொறுப்பு வந்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் ஏற்கெனவே சொன்னதுபோல் சீரியஸ் கேரக்டர்கள் மட்டும்தான் செய்ய முடியும். அதற்காக அப்படியே நான் நடித்துக் கொண்டிருந்தால் ரசிகர்கள் வெறுத்துவிடுவார்கள் இல்லையா?

யாருடைய இயக்கத்தில் எல்லாம் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

ஷங்கர் சார்... ராஜமௌலி சார்... வெற்றிமாறன் சார்... என்று அதுவொரு பெரிய லிஸ்ட். இன்னும் நிறைய காலம் இருக்கிறது. அவர்களது டைரக்‌ஷனில் எல்லாம் நடிப்பேன் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.

உதயநிதியுடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்...

மிகவும் யதார்த்தமானவர். நாங்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்தான் சீரியஸானவையே தவிர, படப்பிடிப்பு இடைவேளைகளில் உதயநிதி செம்ம கலகலப்பான மனிதராக இருந்தார். அதன்பிறகுதான் தெரிந்தது, அவர் நிஜத்திலும் அப்படிப்பட்ட மனிதர்தான் என்று. கோ- ஸ்டார்களுடன் பழகுவதிலும் சரி, அவர்களை உபசரிப்பதிலும் சரி அவர் வேற லெவல்.

சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி ஏன் இவ்வளவு வதந்திகள்?

அதுதான் ஏன் என்று எனக்கும் தெரியவில்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு அவற்றுக்கு எந்த ரியாக்ட்டும் செய்வதில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். அடிக்கடி எனக்குத் திருமணம் செய்து வைப்பதுதான் அவர்களது விருப்பமாக இருக்கிறது. அந்த வேலையை என்னுடைய பெற்றோர் பார்த்துக்கொள்வார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in